
பா.ஜ.க.வில் இணைந்ததால் நான் ஒரு முஸ்லிம் துரோகி என்று தன்னை பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. அக்பர் அகமத் அவதூறாக பேசினார் என்று தில்லி பா.ஜ.க.வின் துணை தலைவி ஷாஜியா இல்மி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி பா.ஜ.க.வின் துணை தலைவராக இருப்பவர் ஷாஜியா இல்மி. அவர் பகுஜன் சமாஜ் கட்சியன் முன்னாள் எம்.பி. அக்பர் அகமத் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஷாஜியா இல்மியின் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஷாஜியா இல்மி கூறியதாவது: கடந்த 5ம் தேதியன்று தென்மேற்கு தில்லியின் வசந்த்கஞ்ச் நடந்த டின்னர் பார்ட்டியில் நான் கலந்து கொண்டேன்.
அந்த பார்ட்டியில் சில தூதருடன் பேசி கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. அக்பர் அகமது அந்த உரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர் பா.ஜ.க.வையும், என்னையும் துஷ்பிரயோகம் செய்தார். அக்பர் அகமத் அந்த கூட்டத்தில் என்னை மிகவும் இழிவுப்படுத்தினார் மற்றும் அவமானப்படுத்தினார். பா.ஜ.க.வில் இணைந்ததற்காக என்னை ஒரு முஸ்லிம் துரோகி என்று கூறினார்.

அங்கு இருந்தவர்கள் அப்படி பேசுவதை நிறுத்துங்கள் என்று அக்பரிடம் கூறியபோதும் அவர் தொடர்ந்து என்னை அவதூறாக பேசினார். எனது பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
நீங்கள் என்னையும், பா.ஜ.க.வையும் அவமானப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், அக்பர் அகமத் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதையும் உறுதி செய்தார். இது தொடர்பாக அக்பர் அகமத் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என தகவல்.