Home இந்தியா புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி? ராஜினாமா செய்த நாராயணசாமி!

புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி? ராஜினாமா செய்த நாராயணசாமி!

narayanasamy
narayanasamy

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க நாராயணசாமி ராஜ்பவன் சென்று அளித்தார். முன்னதாக, மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? எதிர்ப்பைக் காட்டினால் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறது மத்திய அரசு என்று பேரவையில் நாராயணசாமி பேசினார்.

இன்று காலை பேரவை கூடியதும் முதல்வர் நாராயணசாமி பேசுகையில் தமது தலைமையிலான அரசு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்திருப்பதாகவும் ஆளுநராக இருந்த கிரண்பேடி தொல்லைகள் கொடுத்ததாகவும், புதுச்சேரியில் எனது ஆட்சியைக் கலைக்க எதிர்க் கட்சிகள் சதி செய்வதாகவும் கூறினார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. முதல்வர் நாராயணசாமி தனது உரையை நிறைவு செய்ததும், காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதை அடுத்து, ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார் நாராயணசாமி. ராஜ்பவனில் புதுவை துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் நாராயணசாமி!

கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 30 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட புதுவையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றது. என் ஆர் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. மாகே தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என கூறப்பட்டது. இதை அடுத்து ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியில் 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ., தனவேலு பதவி கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. மாகே தொகுதி சுயேட்சை உறுப்பினர் ராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த போதும், இவ்வாறு, 15 பேரில் 6 பேர் இல்லாத நிலையில், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.

lt gov puduchery letter

இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநர் அலுவலகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் இன்று மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சந்தித்து தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார் அவருடன் அவரது அமைச்சரவை சகாக்கள் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் மற்றும் ஆளும் கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version