Home இந்தியா கட்சித் தலைவர்ட்டயே பொய் சொன்னவங்க…! மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டது: புதுச்சேரியில் பிரதமர் மோடி!

கட்சித் தலைவர்ட்டயே பொய் சொன்னவங்க…! மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டது: புதுச்சேரியில் பிரதமர் மோடி!

புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்த பிரதமர் மோடி, ‛புதுச்சேரி பன்முகத்தன்மையின் அடையாளம் என்று கூறியதுடன், அண்மையில் ராகுல் முன்னிலையில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி பொதுமக்களின் பேச்சை திரித்து மாற்றி பொய் கூறியதைக் குறிப்பிட்டு, இத்தகையவர்கள் மக்களிடம் எப்படி இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியில் பிரதமர் மோடி இன்று கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். இதற்காக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வந்தடைந்தார்!

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்த அவரை புதுவை துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்! தலைமைச் செயலர் அஸ்வினி குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் வரவேற்றனர்!

ஜிப்மர் மருத்துவமனை அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அவரை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்! அப்போது, 4 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

ரூ.2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் இடையிலான என்எச் 45-ஏ தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஜிப்மர் காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்ட அடிக்கல் நாட்டினார். சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் மோடி. தொடர்ந்து, இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப் பட்டது.

ஜிப்மரில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம், பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த சேமிப்பு மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பின்னர் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பேசிய போது…

புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம்! இங்கிருந்து பல்வேறு புரட்சியாளர்கள் வந்துள்ளனர்.

புதுச்சேரியின் புனிதத்தன்மை மீண்டும் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் பெரிய தொகை ஒதுக்கிட்டுள்ளது.

புதிய 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். புதிய நான்குவழி சாலை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த 4 வழிச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில், வேளாங்கண்ணி சச்சுக்கு எளிதாக செல்லலாம். கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது…
புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மீனவர் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தவில்லை! கூட்டுறவுத் துறையைச் சரியாகக் கையாளவில்லை என்று பேசினார்… பிரதமர் மோடி.

பின்னர், புதுச்சேரி லாஸ்பேட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, புதுச்சேரியில் 5 ஆண்டுகளாக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததால் இப்போது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது… புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு நிர்வாகச் சீர்கேடு நிறைந்ததாக இருந்தது, கடல்சார் திட்டங்கள், மீனவ திட்டங்களைச் செயல்படுத்தவில்லை . சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு பெண் அரசைக் குறை கூறிய போது, அதை மறைத்த நாராயணசாமி அவரது கட்சித் தலைவரிடம் பொய் பேசினார்.

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கூட உள்ளாட்சித் தேர்தலை நடத்தியுள்ளபோது புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை காங்கிரசு அரசு நடத்தவில்லை!

மீன்வளத் துறைக்குத் தனி அமைச்சகம் அமைக்கவில்லை எனக் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்கின்றனர். 2019ஆம் ஆண்டிலேயே மீனவ மக்களுக்கு அமைச்சகம் அமைக்கப் பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. காங்கிரசின் வாரிசு அரசியல் முறைக்கு முடிவு கட்டப்பட்டு முற்போக்குச் சிந்தனை கொண்டதாக இந்தியா உருவாகியுள்ளது.

தொழில் வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகியவற்றில் சிறந்த மாநிலமாகப் புதுச்சேரியை உருவாக்க பாஜக விரும்புகிறது. முந்தைய காங்கிரஸ் அரசு கூட்டுறவுத் துறையைச் சரியாகக் கையாளவில்லை! கூட்டுறவுத் துறைக்குப் புத்துயிரூட்ட பாஜக விரும்புகிறது. .. என்று கூறினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி தமது பேச்சினிடையே,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை – என்ற திருக்குறளை மேற்கொள்காட்டி பேசினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version