spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசுதந்திரத்தின் வைரவிழா ஆண்டு; அம்ரித் மஹோத்ஸவ்: பிரதமர் மோடி பேச்சு!

சுதந்திரத்தின் வைரவிழா ஆண்டு; அம்ரித் மஹோத்ஸவ்: பிரதமர் மோடி பேச்சு!

- Advertisement -

பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சுதந்திரத்தின் வைரவிழா ஆண்டில், (ஆஸாதி அம்ருத் மஹோத்ஸவ்) தொடங்கி வைத்துப் பேசியவை..

தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்,
(அகில இந்தியவானொலி, சென்னை)

நாமனைவரும் செய்திருக்கும் பெரும்பேறு, நாமனைவரும்,  சுதந்திர இந்தியாவின்,  இந்த சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தின் சாட்சிகளாக இருக்கிறோம் என்பதுதான்.  இன்று,  டாண்டீ யாத்திரையின் ஆண்டுவிழா தருணத்திலே, அண்ணலில் இந்த கர்மபூமியிலே,  வரலாறு நிகழ்த்தப்படுவதையும் காண்கிறோம்,  மேலும்,  வரலாற்றின் அங்கமாகவும் இடம்பெறுகிறோம்.  

இன்று நாடு சுதந்திரம் அடைந்த,  அம்ருத் மஹோத்சவத்தின்,  தொடக்க நிகழ்வாகும்,  இது முதல் நாளாகும்.   அம்ருத் மஹோத்சவம்,  15 ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு தொடங்கி,  75 வாரங்கள் முன்னதாக,  இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.  மேலும் 15 ஆகஸ்ட் மாதம்,  2023ஆம் ஆண்டு வரை தொடரும்.   நம்மிடையே ஒரு நம்பிக்கை உண்டு,  எப்போதெல்லாம் இது போன்றதொரு சந்தர்ப்பம் வாய்க்கிறதோ,  அப்போது,  அனைத்து புண்ணிய தலங்களும் ஒருங்கிணைந்து விடுகின்றன என்பதாக.  

இன்று,  ஒரு தேசம் என்ற வகையிலே, பாரத நாட்டிற்குமே கூட,  இதே மாதிரியான ஒரு பவித்திரமான சந்தர்ப்பமாகும்.   இன்று நமது சுதந்திரப் போராட்டத்தினுடைய,  ஏராளமான புண்ணிய தலங்கள்,  அளவில்லாத புண்ணிய இடங்கள்,  சாபர்மதி ஆசிரமத்தோடு இணைந்திருக்கின்றன.   சுதந்திரப் போராட்டத்தின் உச்சபட்ச நிலைக்கு வணக்கும் செலுத்திவரும்,  அண்டமானின் செல்லுலர் சிறை,  அருணாச்சல் பிரதேசத்திலிருந்து, ஆங்கிலோ இந்தியப் போருக்கு சான்றுபகரும் ….. கேக்கர் மானிங்கின் பூமி, மும்பையின் ஆகஸ்ட் புரட்சி மைதானம்,  பஞ்சாபின் ஜலியான்வாலா பாக்,  உத்திர பிரதேசத்தின் மேரட்… காகோரியும் ஜான்ஸியும்,  தேசம் நெடுகிலும் பல்வேறு இடங்களிலே இன்று,  ஒரே நேரத்திலே,  இந்த அம்ருத மஹோத்சவத்தின் மங்கலத் தொடக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

என்ன தோன்றுகிறது என்றால், அதாவது,  சுதந்திர வேள்வியின் எண்ணில்லாத போராட்டங்கள்,  எண்ணில்லா உயிர்த்தியாகங்கள்,  எண்ணில்லா தவங்களின் ஆற்றல்,  பாரதநாடு எங்குமே,  ஒரே வேளையிலே,  மீண்டெழுவது போல இருக்கிறது.   நான் இந்த புண்ணியமான வேளையிலே,  அண்ணலின் பதமலரில்,  என்னுடைய மனமலர்களை அர்ப்பணம் செய்கிறேன்.  

நான் தேசத்தின் சுதந்திரப் போராட்ட வேள்வியிலே,  தங்களையே ஆகுதியாக அர்ப்பணம் செய்த,  தேசத்திற்கு தலைமை தாங்கிய,  அனைத்து மகத்தான மாமனிதர்களின் பதமலர்களில்,  மரியாதையுடன் வணங்குகிறேன்,  அவர்கள் முன்பு கோடானுகோடி முறை தலைசாய்க்கிறேன்.   யாரெல்லாம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட தேசப்பாதுகாப்பு, என்ற பாரம்பரியத்தை, உயிர்ப்போடு வைத்திருந்தார்களோ, தேசப் பாதுகாப்பிற்காக உச்சபட்ச தியாகங்களைப் புரிந்தார்களோ, உயிர்த்தியாகிகளானார்களோ,  அந்த வீரமான இளைஞர்களுக்கும், நான் தலை வணங்குகிறேன்.  

இந்த புண்ணிய ஆன்மாக்கள்,  சுதந்திர இந்தியாவின், மீள் உருவாக்கத்திற்காக,  முன்னேற்றக்கட்டுமானத்தின் செங்கற்களை அடுக்கினார்களோ,  75 ஆண்டுக்காலத்திலே,  தேசத்தை இந்த கட்டத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்,  நான் அந்த அனைவரின்,  நான் அந்த அனைவரின்  பதமலர்களிலும் கூட,  என்னுடைய வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.  

நண்பர்களே,  அடிமைத்தளையில் நாமிருந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் போது,  அப்போது பல கோடிக்கணக்கான பேர்கள்,  பல நூற்றாண்டுகளாக,  சுதந்திர விடியலுக்காகக் காத்திருந்தார்கள்.  சுதந்திரத்திற்குப் பிறகான இந்த சந்தர்ப்பம், எத்தனை வரலாற்று முக்கியத்துவமானது எத்தனை, கௌரவமளிக்கக் கூடியது என்ற, உணர்வை மேலும் ஓங்கச் செய்கிறது. 

இந்த சந்தர்ப்பத்திலே,  நிரந்தரமான இந்தியா என்ற பாரம்பரியமும் இருக்கிறது,  தற்சார்பு பாரதத்தின் சாயலும் அடங்கியிருக்கிறது.  மேலும்,  சுதந்திர பாரதத்திற்கு,  கௌரவம் அளிக்கவல்ல,  முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது.   ஆகையினாலே,  இப்பொழுது உங்கள் முன்பாக,  அளிக்கப்பட்ட காட்சிகள்,  இவற்றிலே,  அம்ருத் மஹோத்சவத்தின்,  5 தூண்களுக்கு,  சிறப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.  

சுதந்திரப் போராட்டம்,  கருத்துக்கள்,  75ஆவது ஆண்டிலே.  சாதனைகள்,  75ஆவது ஆண்டிலே.   செயல்பாடுகள்,  75ஆவது ஆண்டிலே.   மேலும்,  தீர்மானங்கள்,  75ஆவது ஆண்டிலே.  இந்த ஐந்து தூண்களும்,  சுதந்திரப் போராட்டத்தோடு கூடவே,  சுதந்திர இந்தியாவின் கனவுகளையும் கடமைகளையும்,  தேசத்தின் முன்பாக இருத்தி,  முன்னேறிச் செல்ல உத்வேகம் அளிக்கும்.   இந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டு,  இன்று,  அம்ருத் மஹோத்சவ இணையதளத்தோடு கூடவே,  சர்க்கா இயக்கம்,  மற்றும் தற்சார்பு இன்குபேட்டருமே கூட,  தொடங்கப் பட்டிருக்கிறது.  

சகோதர சகோதரிகளே,  வரலாறு சாட்சியாக இருக்கிறது,  எந்த ஒரு நாட்டின் கௌரவமும்,  எப்போது துடிப்போடு இருக்குமென்றால்,  எப்போது அது,  தனது சுயமரியாதை,  மற்றும் உயிர்த்தியாகங்களின் பாரம்பரியத்தை,  அடுத்த தலைமுறைக்கும் கற்பிக்கும் போது தான்,  நற்பண்புகளை அளிக்கும் போது தான்,  அவர்களுக்கு,  தொடர்ந்து கருத்தூக்கம் அளித்துவரும் போது தான்.  எந்த ஒரு தேசத்தின் எதிர்காலமும்,  எப்போது ஒளிமயமானதாக இருக்குமென்றால்,  எப்போது அது,  தனது கடந்த காலத்தின் அனுபவங்களோடும்,  மேலும்,  தனது மரபின் பெருமிதத்தோடும்,  ஒவ்வொரு கணமும் தொடர்பில் இருக்கும் போது தான்.  

நமது பாரதத்திடம் பார்த்தோமென்றால்,  பெருமிதம் கொள்ளத்தேவையான,  அளவே இல்லாத களஞ்சியமே இருக்கிறது,  நிறைவான வரலாறு இருக்கிறது,  விழிப்புணர்வு நிரம்பிய கலாச்சார பாரம்பரியம் இருக்கிறது.  ஆகையினாலே,  சுதந்திரத்தின் இந்த 75 ஆண்டுகள் என்ற சந்தர்ப்பம்,  அமிழ்தினைப் போல,  தற்கால தலைமுறையினருக்கு வாய்க்கப் பெறும்.  எப்படிப்பட்ட அமிழ்தென்றால்,  இது ஒவ்வொரு கணமும்,  தேசத்திற்காக வாழவும்,  தேசத்திற்காக சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும்.

நண்பர்களே,  நம்முடைய வேதங்களிலே ஒரு வாக்கியம் உண்டு.   ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.  அதாவது,  நாம் துக்கம்,  கஷ்டங்கள்,  துயரம்,  மற்றும் அழிவிலிருந்து வெளிப்பட்டு,  அமிழ்தினை நோக்கிச் செல்வோம்.  அமரநிலை நோக்கிச் செல்வோம்.  இந்த உறுதிப்பாடு தான்,  சுதந்திரத்தின் இந்த அம்ருத மஹோத்சவத்துடையதும் கூட.   சுதந்திரம் என்ற அமிழ்து,  சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவம், என்றால்,  சுதந்திரத்தின் ஆற்றல் என்ற அமிழ்து. 

சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவம் என்றால்,  விடுதலை வீரர்களின் உத்வேகம் என்ற அமிழ்து.  சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவம் என்றால்,  கருத்துக்களின் அமிழ்து.   புதிய உறுதிப்பாடுகளின் அமிழ்து.  சுதந்திரத்தின் அமிர்ந்த மஹோத்சவம் என்றால்,  தற்சார்புத்தன்மை என்ற அமிழ்து.   அந்த வகையிலே,  இந்த மஹோத்சவம்,  தேச விழிப்புணர்வுக்கான மஹோத்சவம்.  இந்த மஹோத்சவம்,  சுயராஜ்ஜியத்தின் கனவுகளை மெய்ப்பிக்கும் மஹோத்சவம்.  இந்த மஹோத்சவம்,  உலக அமைதியை மேம்படுத்தவல்ல மஹோத்சவம். 

நண்பர்களே,  அம்ருத மஹோத்சவத்தின் மங்கலத் தொடக்கம்,  டாண்டீ யாத்திரையோடு நடைபெறுகிறது.   அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கணத்தை,  மீண்டும் உயிர்ப்பெறச் செய்யும் வகையிலே,  ஒரு யாத்திரையும் இப்பொழுது தொடங்கப்பட இருக்கிறது.   மிகவும் அற்புதமான நிகழ்வுப் பொருத்தம்,  இந்த டாண்டீ யாத்திரையின் தாக்கமும் செய்தியும் கூட,  எப்படிப்பட்டதென்றால்,  இன்றைய நிலையில், தேசம் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிறுத்தி, முன்னேறுவதைப் போன்றதே தான். 

அண்ணலின் இந்த ஒரு யாத்திரையானது,  சுதந்திரப் போராட்டத்திற்கு,  ஒரு புதிய உத்வேகத்தை அளித்ததோடு,  மக்களின் மனங்கள் தோறும் இணைப்பை ஏற்படுத்தியது.  இந்த ஒரே ஒரு யாத்திரையானது,  நமது சுதந்திரப் போராட்டத்தில்,  பாரதத்தின் கண்ணோட்டத்தை,  உலகம் முழுவதற்கும் கொண்டு சேர்த்தது.  இத்தனை சரித்திர முக்கியத்துவம், இதற்கு ஏனென்றால்,  ஏனென்றால் அண்ணலில் டாண்டீ யாத்திரையில்,  விடுதலை என்ற கோரிக்கை தவிர,  பாரதத்தின் இயல்பு, மற்றும்,  பாரதத்தின் நற்பண்புகளின் சுகந்தமும் கலந்து கமழ்ந்தது.  நமது நாட்டிலே, உப்பினை,  என்றுமே விலைப்பொருளாக அளவிடப்பட்டதில்லை. 

நமது நாட்டிலே,  உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கக் கற்பிக்கப்பட்டோம்.  நமது நாட்டிலே உப்பென்று சொன்னால் விசுவாசம்.   நமது நாட்டிலே உப்பு என்று சொன்னால்,  நன்றியோடு இருத்தல்.  நாம் இன்றும் கூட என்ன சொல்லுகிறோம்?  நாம் தேசத்தின் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறோம் என்று.  உப்பு மிக விலை உயர்ந்த, ஒரு பொருள் என்பதனால் எல்லாம் இப்படி இல்லை.  ஏன் இப்படி என்றால், நமக்கெல்லாம் உப்பு,  நம் நாட்டிலே, உழைப்பு, மற்றும் சமத்துவத்தின் அடையாளம்.   அந்த காலகட்டத்திலே,  நாட்டினுடைய தற்சார்பு நிலைக்கு அடையாளமாக உப்பு இருந்தது. 

ஆங்கிலேயர்கள்,  பாரதத்தின் விழுமியங்களோடு கூடவே,  இந்த தற்சார்புத் தன்மையையும் சேதப்படுத்தினார்கள். பாரதநாட்டு மக்களுக்கு,  இங்கிலாந்திலிருந்து வரக்கூடிய,  உப்பினைச் சார்ந்து,  வாழும் நிலையை ஏற்படுத்தினார்கள்.  அண்ணல் காந்தியடிகள்,  தேசத்தின் இந்த நீண்டநாளைய வலியை உணர்ந்தார்கள்.  மக்களின் மனங்களில் இருந்த ஆதங்கத்தைப் புரிந்து கொண்டார்.   மேலும், பார்த்துக் கொண்டே இருக்கும் நேரத்திலே இந்தப் போராட்டம்,  நாட்டவர் அனைவரின் போராட்டமாக மாறியது.   நாட்டவர் அனைவருடைய மனவுறுதியாக பரிணமித்தது.  

நண்பர்களே,  இதைப் போலவே,  விடுதலை வேள்வியிலே,  பல்வேறு போராட்டங்கள்,  பல்வேறு சம்பவங்கள் அனைத்துமே உத்வேகம் அளித்து வந்தன.  செய்திகளை அளித்துச் சென்றன.   இதனை இன்றைய பாரதநாடு,  தனக்குள் உள்வாங்கிக் கொண்டு,  வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.  1857இல் நடந்த முதல் சுதந்திரப் போர், அண்ணல் அயல்நாட்டிலிருந்து திரும்பி வந்தது,  தேசத்திற்கு சத்தியாகிரஹத்தின் ஆற்றல் பற்றிய நினைவூட்டல்,  லோக்மான்ய திலகரின் சுயராஜ்ஜியத்திற்கான அறைகூவல்,  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையிலே,  ஆஸாத் ஹிந்த் ஃபௌஜின் தில்லியை நோக்கிய அணுவகுப்பு,  தில்லி சலோ,  என்ற கோஷம்,  இன்றும் இவற்றை இந்தியாவால் மறக்க முடியாது.  

1942ஆம் ஆண்டின் மறக்கமுடியாத போராட்டம்,  வெள்ளையனே வெளியேறு என்ற கோஷம்,  இப்படி எத்தனை எத்தனையோ,  எண்ணிலடங்கா கட்டங்கள்,  இவற்றிலிருந்து நாம்,  உத்வேகம் பெறுகிறோம்,  ஆற்றல் அடைகிறோம்.  அதேபோல எத்தனையோ தியாகம் புரிந்த வீரர்கள், இவர்களை நினைத்து,  தேசம் ஒவ்வொரு நாளும்,  தனது நன்றியறிதல்களை வெளிப்படுத்துகிறது.  

1857 போரின் மங்கல் பாண்டே,  டாடியா டோபே போன்ற வீரர்கள் ஆகட்டும்,  ஆங்கிலேயப் படையின் முன்பாக,  அச்சமறியாமல் நெஞ்சுரத்தோடு கர்ஜனை புரிந்த,  ராணி லக்ஷ்மிபாயாகட்டும்,  கிட்டூரின் ராணி சென்னம்மாவாகட்டும்,  ராணி கைடின்யூவாகட்டும், சந்திரசேகர் ஆஸாத் ராம்பிரசாத் பிஸ்மில்,  பகத்சிங் சுக்தேவ் ராஜ்குரு,  அஷ்ஃபாகுல்லா கான்.   ராம் சிங், கீட்டூ சிங்,  மேலும் ராமசாமி போன்ற வீரர்களாகட்டும்,  அல்லது,  பண்டித நெஹ்ரு,  சர்தார் படேல், பாபாசாஹேப் அம்பேட்கர்,  சுபாஷ்…. சந்திர போஸ்,  மௌலானா… ஆஸாத்,  கான் அப்துல் கஃபார் கான், வீர சாவர்க்கர் என எண்ணிலடங்கா மக்கள் நாயகர்கள்.   இந்த அனைத்து,  மகத்தான ஆளுமைகள்,  விடுதலைப் போராட்டத்தின் சான்றுகளாக விளங்கினார்கள்.  16.18  பாரதநாட்டை உருவாக்கும், காந்தியடிகளின் கனவுகளை, அவருடைய கனவுபாரதத்தை உருவாக்க, நாம் சமூக அளவிலான உறுதிப்பாட்டை மேற்கொள்கிறோம்,  இவர்களிடமிருந்து கருத்தூக்கம் அடைந்து வருகிறோம். 

நண்பர்களே,  விடுதலைக்காக நடத்தப்பட்ட வேள்வியிலே,  இப்படிப்பட்ட ஏராளமான போராட்டங்கள் உண்டு,  ஏராளமான பிரயாசைகள் உண்டு, தேசத்தின் முன்பாக, எப்படிவடிக்கப்பட்டிருக்க வேண்டுமோ, அந்த வகையில் வெளிப்படுத்தப்படவில்லை.  இந்த ஒவ்வொரு போராட்டமும்,  பிராயசையும், இயல்பான வகையிலே, பாரதத்தின், அசத்தியத்திற்கு எதிரான சத்தியத்தை பறைசாற்றும், வலுவான கோஷங்களாக இருந்தன. 

ஒவ்வொரு போராட்டமும்,  பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கும், சான்று பகர்கின்றது.  தவிரவும் இந்த போராட்டங்கள், மேலும் ஒரு விஷயத்திற்கு சாட்சியாக இருக்கின்றன.  அதாவது அநியாயம், அடக்குமுறை, மற்றும் வன்முறைக்கு எதிராக, பாரதநாட்டின் உணர்வு, இராமபிரானின் யுகத்திலே இருந்தது.  மஹாபாரதத்தின் குருக்ஷேத்திரத்திலே இருந்தது.  ஹல்திகாட்டியின் போர்க்களத்திலே இருந்தது.  சிவாஜியின் அறைகூவலில் இருந்தது.  அதே நீடித்திருக்கும் உணர்வு,  அதே நமனுக்கும் அஞ்சா வீரம், இதையே பாரதத்தின் ஒவ்வொரு துறையும்,  ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு சமூகமும், சுதந்திரப் போராட்டத்திலே,  தங்களுக்குள்ளே, சுடர்விட்டு எரியச் செய்தார்கள். 

ஜனனீ ஜன்மபூமிஸ்ச, ஸ்வர்காதபி கரீயஸி.  இந்த மந்திரம்,  இன்றும் நமக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது.   நீங்களே நம்முடைய, இந்த வரலாற்றைப் பாருங்கள்!!   தீவிரமான போராட்டமாகட்டும், அல்லது,  போராகட்டும்.  காஸி போராட்டம் ஆகட்டும், அல்லது சந்தால் புரட்சி.  கசோஹா கசார் நாகா போராகட்டும், அல்லது கூகா போராட்டமாகட்டும்.  பீல் போராட்டமாகட்டும்,  அல்லது முண்டா புரட்சி.   சந்நியாசிகள் போராட்டமாகட்டும், அல்லது, ரமோசி போராகட்டும்.  கித்தூர் போராட்டம்,  திருவாங்கூர் போராட்டம்.  பார்டோலி சத்தியாகிரஹம், சம்பாரண் சத்தியாகிரஹம்.  சம்பல்பூர் போராட்டம், சூஹார் போராட்டம்,  புந்தேல் போராட்டம்,  இப்படி எத்தனையோ….. எத்தனையோ போராட்டங்கள்.  இந்தப் போராட்டங்கள், தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும்,  அனைத்துக் காலகட்டங்களிலும், சுதந்திரச் சுடருக்கு ஒளிகூட்டி வந்தன. 

இந்தக் காலத்திலே, நம்முடைய சீக்கிய குருபரம்பரையானது, தேசத்தின் கலாச்சாரம், மற்றும் நம்முடைய வழிமுறைகளைப் பாதுகாக்க வேண்டி, நமக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்தார்கள்.  தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கான பாதையைக் காட்டினார்கள்.  இதிலே மிகவும் முக்கியமான இந்த விஷயத்தை, இதை நாம் மீண்டும்மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். 

நண்பர்களே,  சுதந்திரப் போராட்டத்தின் இந்தச் சுடரை, தொடர்ந்து விழிப்போடு வைத்திருக்கும் பணியை, கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு, என அனைத்துத் திசைகளிலும்,  அனைத்துத் துறைகளிலும், நமது துறவிகளும் மகான்களும் ஆச்சார்யர்களும்,  இறையாளர்களும், தொடர்ந்து செய்து வந்தார்கள்.   ஒருவகையிலே, பக்தி இயக்கம் தான், தேசம் தழுவிய சுதந்திரப் போராட்டத்திற்கான, தளம் அமைத்துக் கொடுத்தது எனலாம்.  கிழக்கிலே சைதன்ய மஹாபிரபு இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீமத் சங்கர் தேவ்,  போன்ற மகான்களின் கருத்துக்கள் தாம் சமூகத்துக்கு திசை அளித்தன.  இலக்குகளின் மீது ஒருமுனைப்போடு வைத்திருந்தன.  மேற்கிலே மீராபாய் ஏக்நாத் துக்காராம், ராமதாஸர் நார்ஸி மெஹ்தா தோன்றினார்கள்.  

வடக்கிலே,  மகான் இராமானந்தர் கபீர்தாஸர் கோஸ்வாமி துளசிதாசர் சூர்தாஸர்,  குருநானக் தேவ் ரைதாஸர்.  தெற்கிலே,  மாத்வாச்சார்யர் நிம்பார்க்காச்சார்யர், வல்லபாச்சார்யர், இராமானுஜாச்சார்யர் தோன்றினார்கள்.  பக்திகாலத்தின் இந்த கட்டத்திலே,  மலிக் மொஹம்மத் ஜாய்ஸி, ருஸ்கான், சுர்தாஸர், கேசவ்தாஸர், வித்யாபதி போன்ற மாமனிதர்கள், தங்களுடைய எழுத்துக்கள் வாயிலாக சமூகத்தை, தனது குறைகளை சீர்திருத்திக் கொள்ள உத்வேகம் அளித்தார்கள்.

இப்படிப்பட்ட அநேக ஆளுமைகள் காரணமாக, இந்தப் போராட்டம், வட்டார எல்லைகளை எல்லாம் தாண்டி, பாரதநாட்டின் மக்கள் சமூகமனைத்தையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டது.  விடுதலைக்கு வித்திட்ட எண்ணற்ற போராட்டங்களில்,  இப்படி எண்ணற்ற வீரர்கள்,  எத்தையோ புனித ஆன்மாக்கள், அநேக வீரமரணம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் ஒவ்வொருவருடைய காதையினுடைய,  ஒவ்வொரு எழுத்தும், வரலாற்றின் அத்தியாயங்களில் பொறிக்கப்பட வேண்டிய பொன்னெழுத்துக்கள். 

நாம் இந்த மஹாநாயகர்கள்,  மஹாநாயகிகளின்,  வாழ்க்கை வரலாற்றை நாட்டுமக்களிடத்திலே கொண்டு சேர்க்க வேண்டும்.  இந்த மக்களின் வாழ்க்கை வரலாறுகள்,  இவர்களின் வாழ்க்கைப் போராட்டம், நம்முடைய சுதந்திரப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள், சில வேளைகளில் வெற்றி சில வேளைகளில் தோல்வி,  நமது தேசத்தின் இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு வாழ்க்கைப்பாடமாக அமையும்.  ஒன்றுபட்டிருப்பது என்றால் என்ன,  இலக்கை அடையத் தேவையான உறுதி என்றால் என்ன, வாழ்க்கையின் அனைத்து ரகங்களையும்,  அவர்கள் மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்வார்கள்.  

சகோதர சகோதரிகளே,  உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், இந்த பூமியின் வீரமைந்தரான,  ஷ்யாம்ஜி க்ருஷ்ண வர்மா,  ஆங்கிலேயர்களின் பூமியில் இருந்து கொண்டு,  அவர்கள் அறியாத வகையிலே,  தனது இறுதிமூச்சு உள்ளவரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.   அவருடைய அஸ்தி, சுதந்திரமடைந்து 60 ஆண்டுக்காலமாக காத்துக் கொண்டிருந்தது,  எப்போது தனக்கு,  பாரத அன்னையின் மடியில் கரையும் காலம் வருமோ என்று.  

இறுதியாக,  2003ஆம் ஆண்டிலே,  அயல்நாட்டிலிருந்து,  ஷ்யாம்ஜி க்ருஷ்ண வர்மாவின் அஸ்தியினை, நான் எனது தோள்மீது சுமந்து கொண்டு வந்தேன்.   இப்படி எத்தனையோ,  எத்தனையோ வீர மைந்தர்கள் இருக்கிறார்கள்,  இவர்கள் தேசத்திற்காக தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள்.   தேசத்தின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் எத்தனையோ தலித்துகள் பழங்குடிகள் பெண்கள், மேலும் இளைஞர்கள்,  இவர்களெல்லாம்,  கரைகாணமுடியாத தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்.   நினைத்துப் பாருங்கள்,  தமிழ்நாட்டின் 32 வயதான இளைஞன்,  கொடிகாத்த குமரன்,  அவரை நினைத்துப் பாருங்கள்.  ஆங்கிலேயர்களின் தடிகள் இவரின் தலையைப் பதம் பார்த்த போதும்,  அந்த வேளையிலும்,  இறக்கும் தறுவாயிலும்,  தேசியக் கொடி நிலத்தில் விழ அனுமதிக்கவில்லை.   தமிழ்நாட்டிலே,  அவருடைய பெயருடனேயே,  கொடி காத்த என்ற சொற்கள் இணைந்தன.  

கொடி தரையில் விழாமல்,  காத்தவர் என்பதே பொருள்.   தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலு நாச்சியார், ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக, போரிட்ட நாட்டின் முதல் மகாராணி இவர் தான்.      இதைப் போலவே,  நமது தேசத்தின் பழங்குடி சமூகத்தவர்கள்,  தங்களுடைய வீரம் பராக்கிரமம் வாயிலாக,  இடைவிடாமல்,  அந்நிய ஆதிக்கத்தை மண்டியிட வைக்கும் பணியைப் புரிந்தார்கள்.   ஜார்க்கண்டிலே,  பகவான் பிர்ஸா முண்டா,  இவர் ஆங்கிலேயர்களுக்கு சவாலே விடுத்தார்.  

முர்மு சகோதரர்களோ,  சந்தால் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்கள்.    ஒடிஷாவின் சக்ரா பிசோயி போர் அறிவித்தார்.   லக்ஷ்மண் நாயக் அவர்கள்,  காந்திய வழிப்படி விடுதலை உணர்வை ஊட்டினார்.   ஆந்திரப் பிரதேசத்திலே,  மன்யம் வீருடு என்ற,  வனங்களின் நாயகன்,  அல்லூரி சீதாராம் ராஜு அவர்கள்,  Rampa புரட்சியைக் கட்டவிழ்த்து விட்டார்.   பாஸல்தா,  குங் சேரா அவர்கள்,  மிசோராமின் மலைகளிலே,  ஆங்கிலேயர்களோடு மோதினார்.   இவர்களைப் போலவே,  கோம்தர்,  कोँवर,  லசித் பர்புகன்,  மேலும் சிரோசிங் போன்ற அஸாம் மற்றும் வடகிழக்கின்,  அநேக சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள்,  இவர்கள் தேசத்தின் விடுதலைக்குத் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள்.  

இங்கே குஜராத்திலே,  படோதாவுக்கு அருகே ஜாம்புகோடா போகும் வழியிலே,  நமது நாயிகா கோம் பழங்குடிகளுடைய,  உயிர்த்தியாகத்தை எப்படி நம்மால் மறக்க இயலும்?   மான்கடிலே,  கோவிந்த் குருவின் தலைமையின் கீழ் பலநூற்றுக்கணக்கான பழங்குடியினத்தவரின் படுகொலை நடந்தது.   அவர்கள் கடுமையாகப் போராடினார்கள்.  தேசம் அவர்களின் உயிர்த்தியாகத்தை என்றும் போற்றியேற்றும்.  

நண்பர்களே,  பாரத அன்னையின் இப்படிப்பட்ட வீர மைந்தர்களின் வரலாறு,  தேசத்தின் மூலைகளெங்கும் கிராமந்தோறும் பொதிந்திருக்கிறது.   தேசம் இந்த வரலாற்றைக் கொண்டாட,  கடந்த ஆறு ஆண்டுகளாக மும்முரமாக முயன்று வருகிறது.   ஒவ்வொரு மாநிலம் ஒவ்வொரு வட்டாரத்திலும்,  இந்த நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   டாண்டீ யாத்திரையோடு இணைந்த,  இடங்களின் சீரமைப்பு,  ஈராண்டுகளுக்கு முன்னமேயே செய்யப்பட்டு விட்டது.  

இந்த சந்தர்ப்பத்தின் போது எனக்கு,  டாண்டீ போகக்கூடிய,  பெரும்பேறு கிடைத்தது.   அண்டமானிலே,  அந்தத் தீவிலே,  நேதாஜி…. சுபாஷ் போஸ் அவர்கள்,  தேசத்தின் முதல்,  தேசத்தின் முதல் சுதந்திர அரசாங்கம் அமைத்து,  மூவண்ணக் கொடியேற்றினார்.   நமது தேசம்,  அந்த மறக்கவொண்ணா வரலாற்றுக்கும் கூட,  விமரிசையான வடிவம் கொடுத்திருக்கிறது.   அண்டமான் நிகோபார் தீவுக்கூட்டங்களுக்கு,  சுதந்திரப் போராட்டங்களின் பெயர்களே  வைக்கப்பட்டிருக்கின்றன.  

ஆஸாத் ஹிந்த் அரசாங்கத்தின்,  75 ஆண்டுக்கால நிறைவையொட்டி,  செங்கோட்டையிலேயே கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   மூவண்னக் கொடி ஏற்றப்பட்டது,  நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு சிரத்தாஞ்சலிகள் அளிக்கப்பட்டன.   குஜராத்திலே,  சர்தார் படேலுக்கென உலகிலேயே மிக உயரமான உருவச்சிலை,  அவருடைய சாகாப் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி வருகிறது.   ஜலியான்வாலாபாகின்,  நினைவுச் சின்னமாகட்டும்,  அல்லது பைக்கா போராட்டத்தின் நினைவுச் சின்னமாகட்டும்,  அனைத்தின் தொடர்பாகவும் பணிகள் நடந்திருக்கின்றன

பாபாசாஹேப் அம்பேட்கருடன் தொடர்புடைய,  70 ஆண்டுக்காலமாக நிறைவேறாமல் இருந்த,  இவற்றின் மேம்பாடும்,  பஞ்சதீர்த்தம் என்ற வடிவில் தேசம் நிறைவேற்றியது.   இவற்றுடன் கூடவே,  தேசத்தின் ப்ழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை,  தேசத்திடம் கொண்டு சேர்க்க,  வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க,  நம்முடைய பழங்குடியிகளின் போராட்டத்தை இணைக்கும் வகையிலே,   தேசத்தில் அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.  

நண்பர்களே,  சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றினைப் போலவே,  சுதந்திரமடைந்து 75 ஆண்டுக்காலப் பயணத்தை,  சாமான்ய மக்களின் உழைப்பு,  புதுமைகள் கண்டுபிடிப்பு,  தொழில்முனைவின் பிரதிபலிப்பாக இருக்கிறது.    நம் நாட்டவர் உள்நாட்டிலே இருப்பவராக இருந்தாலும்,  அல்லது அயல்நாடுகளிலே.   நாம் நமது உழைப்பால் நம்மை நிலைநாட்டியிருக்கிறோம்.   நம்முடைய அரசியல் சட்டம்,  இதன் மீது நாம் பெருமையடைகிறோம்.  

நம்முடைய ஜனநாயக,  பாரம்பரியம் குறித்து நாம் பெருமையடைகிறோம்.   ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா.   இன்றும் கூட,  ஜனநாயகத்துக்கு வலுகூட்டும் வகையிலே,  முன்னேறி வருகின்றது.   ஞானம் விஞ்ஞானத்தில் தன்னிறைவான பாரதம்,  இன்று செவ்வாய் தொடங்கி சந்திரன் வரையிலும்,  தனது முத்திரையைப் பதித்து வருகிறது.   இன்று பாரத இராணுவத்தின் வல்லமை,  அளவே இல்லாதது. 

பொருளாதார ரீதியாகவும் கூட,  நாம் விரைவாக முன்னேறி வருகிறோம்.   இன்று பாரதத்தின் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு,  உலகத்தையே,  ஈர்க்கக்கூடிய மையமாக ஆகியிருக்கிறது.   விவாதப் பொருளாகியிருக்கிறது.   இன்று உலகின் அனைத்து மேடைகளிலும்,  பாரதத்தின் திறமைகள்,  மேலும் பாரதத்தின் திறன்கள் பற்றிய பேச்சே ஒலிக்கிறது.  28.14  இன்று பாரதம் பற்றாக்குறை என்ற அவலத்திலிருந்து வெளியேறி, 130 கோடிமக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வேகத்தில்,  முன்னேறி வருகிறது.  

நண்பர்களே,  மேலும் நம்முடைய,  ஒரு நற்பேறு என்னவென்றால்,  சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகள்,  மற்றும்,  நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளின்,  125ஆம் ஆண்டினை,  நான் இணைந்தே கொண்டாட இருக்கிறோம்.   இந்த இணைவு,  தேதிகளுடையது மட்டுமல்ல,  மாறாக கடந்தகாலம், மற்றும் எதிர்கால இந்தியாவின்  தொலைநோக்கு பற்றிய அரும்சங்கமம்.   நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூறியிருந்தார் – அதாவது பாரதத்தின் விடுதலைப் போராட்டம்,  வெறும்,  ப்ரிட்டிஷாரின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது மட்டுமல்ல. 

ஆனால்,  உலகளாவிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பெரும்போர் என்றார்.   நேதாஜி அவர்கள்,  பாரதத்தின் விடுதலையை மனித சமூகம் முழுமைக்கும்,  அவசியமானது என்றார்.  காலப் போக்கிலே,  நேதாஜியின் இந்தக் கூற்று,  சரியென்று நிரூபணமானது.   பாரதம் விடுதலை அடைந்தது;  உலகின் பிற நாடுகளிலும் கூட,  விடுதலை கோரும் குரல்கள் ஓங்கத் தொடங்கின,  மேலும் மிகக் குறைந்த காலத்தில்,  ஏகாதிபத்திய கொடுங்கோல் நொறுங்கியது.  

மேலும் நண்பர்களே,  இன்றும் கூட,  பாரதத்தின் சாதனைகள்,  இவை நம்முடையவை மட்டுமல்ல,  ஆனால் இவை உலகனைத்திற்கும் ஒளி சேர்ப்பவை.   மனித சமூகம் முழுமைக்கும் நம்பிக்கை அளிக்கவல்லவை. 

பாரதத்தின் தற்சார்பு நிரம்பிய,  நம்முடைய வளர்ச்சிப் பயணம்,  உலகின் வளர்ச்சிப் பயணத்துக்கு வேகம் அளிக்க இருக்கின்றது.   கொரோனா காலத்திலே,  இது நம் கண்முன்னேயே மெய்யென நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கின்றது.   மனித சமூகத்தைப் பெருந்தொற்றின் சங்கடத்திலிருந்து வெளிக் கொண்டுவர,  தடுப்பூசி உருவாக்கத்தில்,  பாரதத்தின் தற்சார்புத்தன்மையால்,  உலகனைத்திற்கும் நன்மை விளைந்து வருகிறது.   இன்று பாரதத்தின் வசம்,  தடுப்பூசி தயாரிக்கும் திறன் இருக்கிறது.   ஆக வசுதைவ குடும்பகம் உணர்வால்,  அனைவரின் துயரையும்,  துடைப்பதில் நாம் உதவிகரமாக இருக்கிறோம். 

நாம் யாருக்கும் துயரத்தை அளிக்கவில்லை.   ஆனால்,  மற்றவர்களின் துயரத்தைக் குறைக்க, நம்மை அர்ப்பணித்து வருகிறோம்.   இதுதான் பாரதத்தின் கொள்கை.   இதுவே பாரதத்தின் நீடித்த கோட்பாடு.   இதுதான் தற்சார்பு பாரதத்தின் தத்துவ ஞானம்.   இன்று,  உலகநாடுகளனைத்தும்,  பாரதத்துக்கு நன்றி பாராட்டி வருகின்றன,  பாரதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றன.   இது தான், புதிய பாரதம் என்ற சூரியோதயத்தின், முதன்மைக் கிரணங்கள்.   இதுதான்,  நமது பிரகாசமான எதிர்காலத்தின்,  முதல் ஒளிக்கீற்று.    

நண்பர்களே,  கீதையிலே,   நண்பர்களே,  கீதையிலே, ஸ்ரீக்ருஷ்ணன் கூறியிருக்கிறார் –  சமதுக்க சுகம் திரம்சோ.  சமதுக்க,  சுகம்,  திரம்சோ.  அம்ருதத்வாய கல்பதே.   அதாவது யார் சுகதுக்கத்தை, ஓய்வு அழுத்தத்தின் போதும்,  பொறுமையோடு,  பாதிப்படையாமல் சமநிலையில் எதிர்கொள்கிறானோ,  அவனே,  அமிழ்தினை அடைகின்றான், அமரநிலையை எய்துகிறான்  அம்ருத மஹோத்சவத்தால் பாரதத்தின்,  ஒளிமயமான எதிர்கால அமிழ்தினை அடைய நம்முடைய,  பாதையிலே,  இந்த மந்திரமே,  நம்முடைய கருத்தூக்கம்.   வாருங்கள்,  நாமனைவரும் மனவுறுதிப்பாட்டோடு,  இந்த தேசிய வேள்வியில்,  நம்முடைய பங்களிப்பை நல்குவோம். 

நண்பர்களே,  சுதந்திரத்தின் அம்ருத மஹோத்சவ வேளையிலே,  நாட்டுமக்களின் ஆலோசனைகளின்படி,  அவர்களுடைய அடிப்படை எண்ணங்களின்படி,  எண்ணில்லா அளவில்லா கருத்துக்கள் வெளிப்படும்.   இப்போது எடுத்துக்காட்டாக,  நான் வந்து கொண்டிருக்கும் போது என் மனதிலும் ஒன்று தோன்றியது.   மக்களின் பங்களிப்பு,  சாமான்ய மக்களை ஒருங்கிணைப்பது,  தேசத்தின் எந்த ஒரு குடிமகனும் இந்த, அமிர்ந்த மஹோத்சவத்திலிருந்து விடுபட்டுப் போகக் கூடாது.  

சரி இப்போது,  ஒரு சின்ன எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.   அனைத்து பள்ளிக்கல்லூரிகளும்,  சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய 75 விஷயங்களைத் தொகுக்க வேண்டும்.   ஒவ்வொரு பள்ளியும் தீர்மானிக்கட்டும்,  அதாவது நமது பள்ளி,  விடுதலைப் போராட்டத்தின் இந்த 75 விஷயங்களை தொகுப்போம் என்று.  75 குழுக்களை ஏற்படுத்தலாம்,  இந்த சம்பவங்கள் குறித்து இந்த 75 மாணவர்களோ குழுக்களோ,  இதிலே,  800-900 மாணவர்கள் இருக்கலாம்.   ஒரு பள்ளி தனித்தே கூடச் செய்யலாம்.   நம்முடைய சிறுவர் பள்ளிகளின் சின்னச்சின்ன குழந்தைகள் இருப்பார்கள்.   ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் இருப்பார்கள்.

விடுதலை வேள்வியோடு தொடர்புடைய 75 மாமனிதர்களின் பட்டியலைத் தயாரிக்கட்டும்.  அவர்களின் உடைஉடுப்புகள்…… போலவே.  அவர்களின் ஒரு வாக்கியத்தை சொல்லட்டும்.   போட்டிகள் நடக்கட்டும்.   பள்ளிகளிலே,  பாரதத்தின் வரைபடத்திலே,  விடுதலை வேள்வியோடு தொடர்புடைய 75 இடங்களைக் குறிக்கலாம்.   குழந்தைகளிடம் சொல்லலாம்…. சொல்லு தம்பி…. பார்டோலி எங்கே இருக்கிறது?   சம்பாரண் எங்கே உள்ளது?   சட்டக்கல்லூரி மாணவமாணவியர்,  இப்படி 75 விஷயங்களை எடுக்கலாம் இதுவே அனைத்துக் கல்லூரிகளிடமும் என் வேண்டுகோள்.   அனைத்து சட்டக்கல்லூரிகளிடமும் வேண்டுகிறேன்.   75 சம்பவங்களை இனம் காணுங்கள்.   விடுதலைப் போராட்டம்,  நடைபெற்ற வேளையிலே,  அப்போது,  சட்டரீதியான போராட்டம் எப்படி நடந்தது?    நீதிக்கான போராட்டம் எப்படி நடந்தது?   யாரெல்லாம் வழக்காடிப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்? 

சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காப்பாற்ற எப்படிப்பட்ட முயல்வுகள் நடந்தன?   ஆங்கிலேய அதிகாரத்தின்,  வழிமுறைகள் என்ன என்ற அனைத்து விஷயங்களையும்,   நம்மால் எழுத முடியும்.  யாருக்கு நாடகங்களில் பிடிப்பு உள்ளதோ அவர்கள் நாடகங்களை எழுதலாம்.  நுண்கலை மாணவர்கள் போராட்டம் குறித்த சித்திரங்கள் தீட்டலாம்.   யார் மனதில்,  கவிதை வடிக்கலாம் என்று தோன்றுகிறதோ,  அவர்கள் பாடல்கள் எழுதட்டும்.   தொடக்கத்தீல் இவை கையால் எழுதப்படட்டும்.  பின்னர் இவற்றுக்கு,  டிஜிட்டல் வடிவம் கொடுக்கலாம்.

என் விருப்பம்,  இப்படி ஒவ்வொரு பள்ளி… கல்லூரியினுடைய முயல்வும்,  பள்ளிக் கல்லூரியின் மரபாக ஆக வேண்டும்.   ஆகஸ்ட் 15ற்குள்ளாக,  பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதே முயல்வாக இருக்க வேண்டும்.   இந்த நிலையிலே முழுமையான வகையிலே கருத்தியல்,  அடிப்படை தயாராகி விடும்.   பின்னர் இவை,  மாவட்ட அளவில் மாநில அளவில் தேசிய அளவில் போட்டியில் ஈடுபடலாம்.     நம்முடைய இளைஞர்கள்,  நம்முடைய அறிஞர்கள்,  இந்த சவாலை மேற்கொள்ள வேண்டும், 

நமது விடுதலை வேள்வியின் நாயகர்களைப் பற்றி வடிக்கும் பணியில்,  தேசத்தின் முயல்வுகளை நிறைவு செய்வோம் என்று.   விடுதலை வேள்வியின் போதும்,  அதற்குப் பிறகும்,  நம்முடைய சமூகத்தின் சாதனைகள் அனைத்தையும்,  நாம் உலக அரங்கிலே வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.   நான் கலை இலக்கியம் நடனம் திரைத்துறை,  மற்றும் டிஜிட்டல்,  கேளிக்கையோடு தொடர்புடையோரிடமும் வேண்டிக் கொள்கிறேன்.

நம்முடைய கடந்த காலத்தில் ஏராளமான கதைகள் இரைந்து கிடக்கின்றன.   இவற்றைத் தேடுங்கள்,  இவற்றுக்கு உயிர் கொடுங்கள்.   வருங்காலத் தலைமுறையினருக்காக இவற்றை தயார் செய்யுங்கள்.   கடந்த காலத்திலிருந்து கற்று வருங்காலத்த்தை நிறுவும் பொறுப்பினை,  நமது இளைஞர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.   அறிவியலாகட்டும் தொழில்நுட்பமாகட்டும் மருத்துவமாகட்டும் அரசியலாகட்டும் கலையாகட்டும் கலாச்சாரமாகட்டும்,  நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும்,  உங்கள் துறையில் நாளை வரவிருக்கும் நாள்,  எப்படி சிறப்பாக இருக்க முடியும்,  என்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

நான் முழுமையாக நம்புகிறேன்,  நமது 130 கோடி நாட்டுமக்கள்,  விடுதலையின் இந்த அம்ருத் மஹோத்சவத்தோடு இணையும் போது,  இலட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களோடு இணையும் போது,  அப்போது பாரதம்,  மிகப் பெரிய இலக்குகளையும் எளிதாக அடையும்.  

நாம்,  தேசத்தின் பொருட்டு,  தேசத்திற்காக,  சமுதாயத்திற்காக,  ஒவ்வொரு இந்தியரும் தேசத்திற்காக ஒரு அடி முன்வைத்தால்,  அப்போது தேசம்,  130 கோடி அடிகள் முன்னேறிச் செல்லும்.   பாரதம்  மீண்டுமொருமுறை,  தற்சார்பு நிலையை எட்டும்.  உலகத்திற்கு புதியதொரு திசையைக் காட்டும்.   இந்த நல்விருப்பங்களோடு நான்,  இன்று டாண்டீ யாத்திரையில் பங்கெடுக்கவிருக்கும்,  ஒரு வகையிலே,  படாடோபம் ஏதுமின்றி,  சிறிய அளவில் இதன் தொடக்கம் நடக்க இருக்கிறது. 

ஆனால் நாட்கள் செல்லச் செல்லச் செல்ல கடந்து செல்லச் செல்ல,  நாம் ஆகஸ்ட் மாதம் 15ஐ எட்டும் போது,  இது ஒருவகையில் இந்தியா முழுவதையும் தனக்குள்ளே கரைத்துக் கொண்டு விடும்.   அத்தனை பெரிய கொண்டாட்டமாக மாறிவிடும்.   இதுவே எனது நம்பிக்கை.  ஒவ்வொரு குடிமகனுடைய உறுதிப்பாடாகும்,  ஒவ்வொரு நிறுவனத்தின் உறுதிப்பாடாகும்,  ஒவொரு அமைப்பின் உறுதிப்பாடாகும்.   தேசத்தை முன்னெடுத்துச் செல்வது உறுதிப்பாடாகும்.   விடுதலை விரும்பிகளுக்கு,  நினைவாஞ்சலிகளை அளிக்க,  இதுவே வழியாகும்.

நான் இந்த….. விருப்பங்களோடு,  இந்த நல்விருப்பங்களோடு,  நான் மீண்டும் ஒருமுறை,  உங்களனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.   என்னோடு இணைந்து சொல்லுங்கள் பாரத் மாதா கீ…… ஜெய். வந்தே மாதரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe