July 27, 2021, 5:10 pm
More

  ARTICLE - SECTIONS

  கடோபநிஷத் – ஓர் அறிமுகம்!

  ஜீவன் மனித சரீரத்தில் இருக்கும் காலம் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரம் அல்லது லட்சம் ஆண்டு காலம் உடல் இல்லாமலேயே ஜீவன் கழிக்க வேண்டி

  katopanishad intro

  தெலுங்கில்: சத்குரு சிவானந்த மூர்த்தி
  தமிழில்: ராஜி ரகுநாதன்

  வேத இலக்கியம் அனைத்தும் உபநிஷத்து வடிவத்தில் மகரிஷிகளால் அருளப்பட்டுள்ளது. சிருஷ்டியின் ரகசிய ஞானம் அவற்றில் நிறைந்துள்ளது. அறியாமையில் உழலும் மானுட இனத்தின் கட்டுண்ட நிலையைப் பார்த்து ஏற்பட்ட கருணையைத் தவிர அவர்களுடைய வாக்குகளுக்கு வேறு ஒரு காரணமே இல்லை.

  ‘நாம் நன்றாக இருக்கிறோம்!’ என்று எண்ணும் மானுட இனத்திற்கும் மகரிஷிகளுடைய சிருஷ்டி ரகசிய ஞானத்திற்கும் இந்த உலகளவு இடைவெளி உள்ளது.

  ருஷிகளின் போதனைகளில் ஜீவனின் மானுட தேகத்திற்கு அதீதமான நிலை குறித்த ஞானமே பிரதானமான விஷயமாக காணப்படுகிறது.

  மனிதப்பிறவி துர்லபம், அரிதானது, மிகவும் மதிப்பு மிக்கது என்ற சொற்களே ஒவ்வொரு இடத்திலும் நமக்கு காதில் விழுகிறது. இந்தச் சொற்களின் பொருளை அறிய வேண்டுமென்றால் நமக்கு தெரிய வேண்டிய ரகசியம் ஒன்று உள்ளது.

  வேதாந்த வாக்கியங்களான உபநிஷத்துகளுக்கு தத்துவ சர்ச்சைகளாலான வியாக்கியானங்கள் பல உள்ளன. அவற்றுள் ஆன்மிக சாதனைகளை எடுத்து விளக்கும் வியாக்கியானங்கள் நமக்கு பயனளிக்கக் கூடியவை.

  உபநிஷத்துக்களில் உள்ள சாதனா மார்க்கங்கள் அனைவரும் அறியும்படி கூறப்படவில்லை. விஷயத்தை பரிந்துரைக்கும் கருத்துக்கள் நிறைந்த சாதனா ரகசியங்கள் பலவும் உபநிஷத்துகளில் மறைந்துள்ளன. அவற்றை குருமுகமாக அறிய வேண்டும் என்பதால் அவ்வாறு கூறுவது நடந்துள்ளது.

  katopanishad

  அதனால் உபநிஷத்துக்களில் பரிந்துரைக்கப்பட்ட இறுதி இலக்கினை வெறும் சர்ச்சைக்கான அம்சமாகவே கணக்கிடும் வியாக்கியானங்களால் எல்லைக்குட்பட்ட பயன் மட்டுமே கிட்டும். இறுதி இலக்கை அடையும் சாதனைக்கு அடையாளமாகக் காணும்போது குருவருளால் அது அனுபவ யோக்கியமாகிறது.

  ஆன்மிக சாதனை என்பது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்தது என்பதால் சாதனாபரமாக கூறப்பட்டுள்ள குறிப்புகளை உணர்ந்து கடைபிடிப்பது பலனளிக்கக் கூடியது. தர்க்கங்களுக்கு இதனை அதிகமாக ஈடுபடுத்துவது உபயோகமற்றதாகவே முடியும்.

  வேதாந்த வாக்கியங்களான உபநிஷத்துக்கள் சாதனைக்கான அம்சங்களால் நிறைந்துள்ளது. சாதனைக்கான மார்க்கங்கள் அவற்றில் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடியதாக எளிய முறையில் கூறப்படவில்லை. கருத்துக்கள் நிறைந்த சாதனை ரகசியங்கள் பல இவற்றில் உள்ளன. அவற்றை குருமார்களிடம் பணிவுடன் கற்றறிய வேண்டும் என்பது இதன் பொருள்.

  மனிதன் பிறந்தது முதல் முக்தியைப் பெறுவது வரை கடக்க வேண்டிய நீண்ட பிறவிப் பயணத்தில் உடலோடு வாழும் காலம் ஆயிரத்தில் ஒரு அம்சம் கூட இல்லை. அதாவது நூறு ஆண்டுகள் என்று ஜீவன் மனித சரீரத்தில் இருக்கும் காலம் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரம் அல்லது லட்சம் ஆண்டு காலம் உடல் இல்லாமலேயே ஜீவன் கழிக்க வேண்டி இருக்கலாம். அதனால் தான் உத்தம கதி சம்பாதித்துக் கொள்ளும் மனிதப்பிறவி அரிதானது என்று கூறப்படுகிறது.

  உடல் இருக்கும் வரை மனிதன் தனக்காக தான் செய்து கொள்ள வேண்டிய உபகாரம் ஒன்றுள்ளது. உடல் இல்லாதபோது நம் வசத்தில் இல்லாத சித்தத்தில் கர்மபலன் மட்டுமே மறைந்திருக்கும் காலத்தில் நமக்கு நாமாக செய்து கொள்ளக் கூடியது எதுவும் இருக்காது.

  அதாவது மனம் புத்தி சித்தம் இந்திரியங்கள் எதுவும் இல்லாத தனிமைக் காலம் அது. சுகமும் துக்கமும் கலந்த அனுபவங்களும் செயலாற்ற முடியாமையும் நீண்ட கால அவஸ்தைகள். இதுவே ஜீவனின் நிலைமை.

  உடலோடு உள்ள ஜீவனின் சித்தத்தில் மட்டுமே ஆத்ம சிந்தனை, புண்ணியம் சேர்க்க வேண்டும் என்ற சங்கல்பம் போன்றவை சாத்தியப்படும். தேகம் இல்லாத சித்தத்தில் கர்மபல அனுபவத்தின் நினைவு மட்டுமே ஜீவாத்மா பெற்றிருப்பான்.

  இத்தகைய நிலை துன்பத்திற்கும் அச்சத்திற்கும் ஏதுவான கனவு நிலை போன்றது. சொப்பனாவஸ்தையில் சித்தம் அப்போது ஏற்படும் துயரத்திற்கு எதிர்ச் செயல் புரியும் சாமர்த்தியம் அற்றது. சித்தம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.

  உடலோடு இருக்கும் போது ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள சித்தம் சுக, துக்கங்களை அனுபவிக்கும் போது, எதிர்ச் செயல்களான புண்ணியம் போன்ற பல செயல்களைச் செய்யக் கூடியதாக இருக்கிறது. இதற்கு வெளி உலகத்தோடு உள்ள தொடர்பு உதவிபுரிகிறது. தானம், சாந்தி கர்மாக்கள், மருத்துவ சிகிச்சை போன்றவை அனைத்தும் சாத்தியப்படுகின்றன.

  தேகம் இல்லாத ஜீவனுக்கு உடலோடு தொடர்பு சாத்தியம் இல்லாததால் எதையும் செய்ய இயலாது. அத்தகைய சங்கல்பம் கூட சித்தத்தில் செய்ய இயலாதவனாக இருக்கிறான். இந்த பௌதீக உலகமே கர்மத்திற்கும் ஞானத்திற்கும் ஏற்புடையது.

  இனி, நசிகேதனின் விஷயத்திற்கு வந்தால்… உடலை உகுத்த அந்த ஜீவனுக்கு… சுகத்தையும் ஐசுவரியத்தையும் மறுத்து எமனிடம் உயிரின் ரகசியத்தை அறியும் வித்யையை யாசிக்கக் கூடிய விவேகச் செல்வம் வாய்த்தது எவ்வாறு?

  அவனுடைய கதையிலேயே… உடலோடு இருக்கும் போதே உள்ளிருந்து ஒரு குரல் அவனுக்கு கிடைக்கப்போகும் எம தரிசனம் மற்றும் கேட்க வேண்டிய வரங்கள் குறித்து உபதேசித்து அனுப்பியது. இந்த சம்ஸ்காரம்தான் உடலற்ற ஜீவனுக்கு சித்தம் என்ற பூமிகையில் நினைவு வடிவில் பணிபுரிந்தது.

  அப்படி இல்லாததால்தான் சத்தியவானின் ஜீவாத்மாவை யமன் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றபோது சத்தியவான் தானாகவே உயிர்பிச்சை கேட்க இயலாமல் போனான். சாவித்திரியால் மட்டுமே தன் யோக சக்தியால் பதியின் உயிரை எமனிடமிருந்து கேட்டுப் பெற முடிந்தது.

  மார்க்கண்டேயன் உடலோடு இருந்ததால்தான் யமனை தரிசித்து சிவனை சரணடைய முடிந்தது. ஸ்வப்ன அவஸ்தையில் யாராயிருந்தாலும் உடலோடு சேர்ந்து இருந்தாலும் கூட வெறும் ஜீவனாக மட்டுமே இருந்து உதவியற்று சுக துக்கங்களை அனுபவிக்க முடியும்.

  அதனால் மனித உடல் பவித்திரமானது. அரிதானது. சுவர்க்கம் நரகம் அல்லது பிரேத நிலை என்பது பலனை அனுபவிக்கும் பூமிகைகளே அன்றி கர்மங்களுக்கோ தர்மங்களுக்கோ உரித்தான பூமிகைகள் அல்ல. அதனால் கர்ம க்ஷேத்திரமும் தர்ம க்ஷேத்திரமும் மனித உடலே. ஆதலால் மனிதப் பிறவி மிக மிக உத்தமமான பூமிகையாக உள்ளது.

  அதர்மமும் பாவமும் வாழ்க்கை வழிமுறைகளாகக் கொண்டவர்கள் கூட இந்த உடலில் இருக்கும் போதே திருந்தி உயர்ந்த யோக பூமிகைகளைச் சேர முடிந்தது. வால்மீகியில் இருந்து யோகி வேமனா வரை அப்படிப்பட்டவர்கள் பலர் இந்த வேத பூமியில் பிறந்து உய்வடைந்தார்கள்.

  நசிகேதனின் கதையும் பிற வேதக் கதைகளைப் போலவே காலத்தை நிர்ணயிப்பதற்கு சாத்தியப்படவில்லை. ஆனால் ‘வாஜஸ்ரவர்’ கௌதமரின் வம்சத்தவர் என்று வம்ச பரம்பரையான ‘ஆக்யாயிகை’ கூறுகிறது. புகழ்பெற்ற கௌதம மகரிஷி ராமாயண காலத்தைச் சேர்ந்தவர் என்று நாம் அறிவோம். அதனால் அவருடைய வம்சத்தவர் ஆதலால் வாஜஸ்ரவரின் கதை இராமாயண காலத்திலோ அதன் பின்னரோ மகாபாரத காலத்திற்கு முன்பாகவே நடந்துள்ளது என்று யூகிக்க இயலும்.

  அன்றைய பிராமண யக்ஞங்களை உபாசனைக்கு உகந்ததாக மீண்டும் புனரமைப்பு செய்யும் தேவை ஏற்பட்டது என்று கருதலாம். யக்ஞம் பிராமணர்களின் ஆதீனத்தில் இருந்தாலும் அது யோக பாவனையற்று இருந்தால் வீண் என்றும் அற்ப பலனை அளிக்க காரணமாகிறது என்றும் தெளிவாக்குவது அந்தக் காலத்து பெரியவர்களின் போதனையாகத் தெரிகிறது.

  பக்தி ஞானம் வைராக்கியம் யோகம் தவம் போன்ற நற்குணங்கள், கர்மாக்களை விட உயர்ந்தவை என்பது ராமாயண காலத்திலேயே நிரூபிக்கப்பட்டது. இந்த இயல்புகளால்தான் தானாகவே வால்மீகி மகரிஷி பிரசித்தியானார். விசுவாமித்திரர் போன்றோர் தவத்தாலும் யக்ஞத்தாலும் புகழ் பெற்றார்கள்.

  பிராமண குலத்திற்கு வெறும் யக்ஞ கர்மாக்களில் மட்டும் சிரத்தை இருந்தால் போதாது என்றும் தவமும் யோகமும் முக்கியம் என்றும் போதிப்பது இப்படிப்பட்ட கதைகளின் உத்தேசமாக தோன்றுகிறது.

  அது மட்டுமல்ல அப்போதைய வர்ண அமைப்புக்கு மேற்பட்டு சத்துவ குணத்தோடு கூடிய தவமும் யோகமும் உயர்ந்தவை என்று போதிப்பது கூட இப்படிப்பட்ட கதைகளின் உள்ளர்த்தமாக இருக்கலாம்.

  சமூகத்தில் கௌரவம் ஒருபுறமிருக்க விதுரர் போன்றோர் வெறும் ஞானத்தாலேயே உத்தமர்களாக கணக்கிடப்படுவது மகாபாரதத்தில் தெளிவாகக் காணப்படுகிறது.

  இன்னும் சிறப்பு என்னவென்றால் யக்ஞம் போன்ற செயல்கள் முமுக்ஷுவான பிராமணனுக்கு சிறிது உதவக்கூடும் என்று கூட இந்தக் கதை நமக்கு தெரிவிக்கிறது. இதன் தாத்பரியமே அஸ்வமேத யாகம் போன்றவற்றில் கூட தத்துவ பார்வையை எடுத்துரைத்து, உபநிஷத்தின் கருத்தையும் பிராமண தர்மத்தையும் சமன்வயம் செய்து உயர்வான இடத்தில் சேர்த்துள்ளது.

  வேதங்கள் பூமியில் அவதரிப்பதற்கு தவம்தான் காரணம். ‘வேதயதீதி வேத:’ (தெரியச் செய்வது வேதம்) என்ற வாக்கியத்தால் வேதங்கள் விளக்கப்பட்டிருப்பதால், தவத்திற்கு ஜிஞ்ஜாசை காரணமாக இருக்கும். ஜிஞ்ஜாசை இல்லாத தவம் இருக்காது. ஆத்ம வஸ்துவின் தத்துவ ஞானமோ, சிருஷ்டி ரகசிய பேதமோ, ஒரு கோரிக்கையோ தவத்திலிருந்தே விளைந்து பலனளிக்கும். இது வேத சம்ஸ்க்ருதியின் அனாதியான பூர்வ தர்மம்.

  இனி, இன்று…?

  ஏற்கனவே கிடைத்த வேத விஞ்ஞானத்தையும் அதிலிருக்கும் ரகசியங்களையும் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்வதே தற்காலத்திற்கான தவம். அதாவது வேத ருஷிகளைப் போலின்றி வேதங்கள் கூறும் சகல இரகசியங்களையும் அனுபவத்தில் சாட்சாத்காரம் செய்து கொள்வதே இந்த யுகங்களின் தவம் என்று கூறப்படுகிறது.

  ஒரு காலத்தில் வேதங்கள் அவதரிப்பதற்கு பூமிகையாக இருந்த மகரிஷிகளின் தபோநிஷ்டை, அதற்குப்பின் வந்த யுகங்களில் சாஸ்திர ஞானம், ஞான சாதனைகளின் அங்கமாக விளங்கும் யோக கிரியைகளாக வடிவம் பெற்றது. அதாவது சத்தியத்தை சாட்சாத்காரம் செய்து கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய தவ மார்க்கம் யோக மார்க்கமே என்பது இதன் பொருள்.

  வேதம் அவதரித்த காலத்தில் இருந்த தவத்திற்கும் இன்றைய தவத்திற்கும் இதுதான் வேறுபாடு. அன்றைய தவத்திற்கு மார்க்கதரிசிகள் யாரோ, விதானங்கள் யாவையோ நமக்குத் தெரியாது. ஆனால் பின்னர் வந்த யுகங்களில் தவத்திற்கு ஒரு சாஸ்திரம் உள்ளது. ஒரு இலக்கு உள்ளது. மார்க்கதரிசி உள்ளார்கள். அப்படிப்பட்ட பிற்காலத்தைச் சேர்ந்த தவத்தின் அவதாரத்தை இந்த நசிகேதோபாக்கியானம் தெரிவிக்கிறது.

  ஆத்மஞானம் கிடைப்பதற்குக் காரணமான தவ மார்க்கம் – வேத, கர்ம மார்க்கங்கள் இணைந்தது என்று நிரூபிப்பது இந்த உபநிஷத்தின் உத்தேசம்.

  இவ்விதமாக இந்த உபநிடதம் அபூர்வமானது. அதனால் இதற்கு ஒரு பிரத்தியேக ஸ்தானம் வேதத்திலுள்ளது. தவ விதானம், பலன் போன்றவற்றை எடுத்துக் கூறுவதில் இதற்கு ஒரு புதுமை ஏற்பட்டு இந்த யுகத்தில் அத்வைதம் முதலான மதங்களின் ஸ்தாபனத்திற்காக இந்த உபநிஷத் இன்று வரை வியாக்கியானம் செய்யப்பட்டாலும் கர்ம, யோகங்களின் சமன்வயமாக இதனை விளக்க வேண்டிய தேவையுள்ளது.

  இப்படிப்பட்ட முயற்சி இங்கு முதலில் ஸ்தூலமாகவும் பின்னர் ப்ராணன் போன்ற விவரங்களோடும் இயன்ற வரை செய்யப் படுகிறது. இதில் அனேக கருத்துகளை மீண்டும் மீண்டும் வேறு வழியின்றி கூற வேண்டியுள்ளது.

  இந்த உபநிஷத்தில் சுவர்க்கத்தின் வழியான நசிகேதாக்னி கூறப்படுகிறது. சொர்க்கத்தை அடைவதற்கு மார்க்கம் இதற்கு முன்பாகவே புகழ் பெற்றிருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால்… அந்தந்த கர்மாக்கள் பரிந்துரைக்கும் அபூர்வமான பலன்கள், இறந்த ஜீவனுக்கு இடையறாது கிடைக்கும் உடனடி பலனாக முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது.

  இந்த உபநிஷத் அப்படியல்ல அதாவது புண்ணியம், பாவம் போன்ற கர்மாக்களைச் செய்த ஜீவன், தன் பூர்வ கர்மாவின் பூமிகையின் நினைவை இழந்து ஒரு புதிய மனிதனாக பிறந்து கர்மபலனை அனுபவிக்கிறான். இங்கு மற்றொரு பிறவியிலோ மற்றொரு லோகத்திலோ பூர்வ நினைவு இல்லாதிருப்பதால் சுகதுக்கங்களின் காரணம் தெரிவதில்லை. அதனால் கர்த்தா ஒருவன் போக்தா வேறொருவன் என்னும் பொய்யான எண்ணம் உலகில் ஏற்படுகிறது. இது ம்ருத்யு எனப்படும் திரையால் இரண்டு பிறவிகளும் இரு பூமிகைகளும் மறக்கப்படுவதால் ஏற்படுகிறது. இதனை வென்றுதான் ஆகவேண்டும்.

  சொர்க்கத்தை அடைவதற்கு செயல் புரிந்தாலும் மிருத்யு லோகத்தில் மிருத்யுவை வெற்றி கொண்டு சூட்சும சரீரம் அடைந்த ஜீவன், கர்மாக்களின் மூலம் சம்பாதித்த உத்தம லோகத்தில் இருந்தபடி, அந்த மேலுலகமான முக்தி மார்க்கத்தை கடைபிடிப்பது இந்த கிரியைகளின் சிறப்பு.

  அதாவது யாகம், யோகம் இரண்டையும் ஒன்றாக ஜீவனின் ஆன்மீக சாந்திக்காக பிரம்மவாதிகளான தேவர்களால் போதிக்கப்பட்டது. பிற முக்தி மார்க்கங்கள் அனைத்தும், பிற கர்ம மார்க்கங்கள் அனைத்தும் அவ்வவற்றின் தேவர்களால் அன்றி, ஸ்மிருதி கர்மங்களால் மட்டுமே பூர்வம் உபதேசிக்கப்பட்டன.

  ஆனால் இது யாக்ஞவல்கியர், வைசம்பாயனர் ஆகியோரால் அளிக்கப்பட்ட விதிமுறையை மறந்து, நேராக சூரியனிலிருந்து வேதத்தை கிரகிப்பது போன்றது. (சுக்ல யஜுர் வேதம்).

  தேவர்கள் ஈஸ்வரனின் அம்சம் ஆதலால் பூலோகத்தின் இயல்புகளான காமம், குரோதம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆதலால், சிலர் அந்த தேவர்களை சரணடைந்து ரகசிய விஞ்ஞானத்தை வேண்டினார்கள் என்று உணர வேண்டும்.

  இந்த தேவர்களுக்கு சாதனைகள் இருக்காது. இவர்கள் அனைவரும் ‘காரிய பிரம்ம ஸ்வரூபங்களே’. அதனால் யக்ஞ பலனை அளிப்பவராகவும் மற்றொரு பூமிகைகையில் முக்தி மார்க்கத்தை தரிசித்தவராகவும் நடந்து கொள்வார்கள்.
  (இன்றும் அக்னியை வணங்கும்போது ‘கர்ம ப்ரும்ம ஸ்வரூபிணே!’ என்கிறார்கள்.

  வேத விஞ்ஞானம் சகல மானுட இனத்திற்கும் தன்னைத்தான் கடைபிடிக்கச் செய்து கொண்டு இன்று விஸ்வ வியாபகம் ஆனதற்கு காரணமானது யோகம்.

  katopanishad1 - 1

  இந்த யோக வித்யை யக்ஞங்கள் அதாவது ஸ்ரௌத யக்ஞங்கள் அதிகம் வழக்கத்தில் இருந்த காலத்திலேயே ‘ஞாத்ய குரு கர்மாணி’ என்று கர்மிஷ்டிகளுக்கு போதித்து, பௌதீக யக்ஞத்தில் தத்துவமான அந்தர் திருஷ்டியை முன்பே பரிந்துரைத்தது.

  அஸ்வமேத யாகங்களில் கூட அந்தர் திருஷ்டியே போதிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

  நசிகேத வித்யையில் நசிகேத அக்னி, நசிகேத யோகம் ஒரே காலத்தில் பிரம்மஸ்வரூபரான சமவர்த்தியால் போதிக்கப்பட்டது. தேகத்தை விட்ட பிறகு ஜீவனின் நிலை எப்படிப்பட்டது என்பது இதில் நசிகேதனின் சந்தேகம். இதுவே ஜிஞ்ஞாசை.

  தந்தையின் பரிந்துரையால் கிடைத்த யோக சமாதியில் ‘அஸ்மித’ (நான் என்ற எண்ணம்) நசிக்காத சூட்சும சரீர நிலையில், இந்த ஜிஞ்ஜாசை இடைவிடாமல் தொடர்ச்சியாக இருந்த போது எமன் என்ற பெயர் கொண்ட ஈஸ்வர அம்சத்திலிருந்து இந்த யோக ரகசியத்தை நசிகேதன் பெற்றான்.

  இதற்கு முதற்களம் பௌத்தாலகர் செய்த தியாகம். செல்வத்தை தியாகம் செய்ததோடு யாக பலனையும் தியாகம் செய்தார். யாக பசுவுக்குச் சமமான புத்திரனையும் தியாகம் செய்தார். அதனால் அவருக்கு வாக்கு சித்தி கிடைத்தது.

  புத்திரனுக்குத் தன் அமோகமான வாக்கினால் அபூர்வமான யோக சித்தியை அருளினார். அது பிறருக்கு யோக மார்க்கத்தால் சிறிது சிறிதாகவே கிடைக்கக்கூடியது. இது பௌத்தாலகருக்கு கர்மபலம், தனம், சந்தானம் என்ற மூன்றையும் தியாகம் செய்ததால் கிடைத்த பிரம்மஸ்திதி. அப்படிப்பட்ட உத்தமமான பயனால் தேவதத்தனான குமாரனுக்கு யோக பிராப்தி கிடைத்தது.

  தந்தையும் மகனும் பெற்ற இந்த அபூர்வமான அருள் வேதத்தில் நித்திய தத்துவத்தை அடைந்து ஒரு அற்புதமான உபநிஷத்தைக் கூட அருளியுள்ளது. பௌத்தாலகரின் அம்ருதத்துவம் மோட்சமே. நசிகேதனின் இலாபம் மோட்ச மார்க்கம்.

  (இந்த ‘கடயோகம்’ என்ற நூலில் அறிஞர்களால் விரிவாக விவாதித்து அதிக அளவு வியாக்கியானம் செய்யப்பட்ட துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைத சித்தாந்தங்கள், சாங்கிய, யோக தரிசனங்கள், பாதராயண சூத்திர வியாக்கியானங்கள் முதலியவற்றை நூலாசிரியர் ஶ்ரீசத்குரு சிவானந்த மூர்த்தி விரிவாக விவாதித்துள்ளதாக தெரிவிக்கிறார்).

  (Source: கடயோகமு என்ற நூலின் முன்னுரையிலிருந்து)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  26FollowersFollow
  74FollowersFollow
  1,318FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-