spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்லௌகீகத்தில் இருப்பவர்கள் பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள்: ஆச்சார்யாள்!

லௌகீகத்தில் இருப்பவர்கள் பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள்: ஆச்சார்யாள்!

- Advertisement -
abinavavidhyadhirthar-4
abinavavidhyadhirthar-4

சிஷ்யர்: சாஸ்திரங்களை முழுதுமாக நன்கு படிக்க வேண்டும் என்பது மோட்சத்தை விரும்பும் ஒருவனுக்குத் தேவையா?

ஆச்சாரியாள்: எவ்வளவு தூரத்திற்கு அது அவன் சந்தேகங்களை தீர்க்க வேண்டியிருக்கிறதோ பிறகு அவனுக்கு தத்துவ அறிவை உண்டாக்க எந்த அளவிற்கு தேவைப்படுகிறதோ அவ்வளவிற்கு சாஸ்திரங்களைப் அளிப்பது தேவையாகிறது.

சிஷ்யர்: ஆச்சாரியாள் மோட்சத்தை விரும்பும் சிஷ்யனுக்கு எந்தெந்த புத்தகங்களை படிக்கும்படி கட்டளையிடுவீர்கள்?

ஆச்சாரியாள்: ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவனுக்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும். அதைப் படிக்கும்போது கௌடபாதரின் காரிகையையும், சங்கர பாஷ்யத்தையும் படிக்கலாம். மாண்டூக்ய உபநிஷத்தைப் பற்றி முக்திகோபநிஷத்தில்

“மாண்டூக்ய மேகமேவாலம்
முமுக்ஷூணாம் விமுகாதயே”

( மாண்டூக்யம் ஒன்றே எவன் மோட்சத்தை விரும்புகிறானோ அவனுக்கு மோட்சம் கொடுப்பதற்கு போதும்) என்று கூறப்பட்டிருக்கிறது. யோகவாஸிஷ்டமும் உத்தமமான புத்தகம். மாண்டூக்ய உபநிஷத் வேதத்தின் பாகம் ஆனதினால் தகுதி உள்ளவர்களே அதை படிக்க முடியும் என்றாலும் யோகவாஸிஷ்டத்தை எல்லாரும் படிக்கலாம். இதை உபநயனம் ஆகியிருந்தால் தான் படிக்கலாம் என்ற நியமம் இல்லை‌. மேலும் பகவானே உபதேசித்த உத்தமமான பகவத்கீதையை படிக்கலாம். மேற்கொண்டு சங்கரரின் புத்தகங்களையோ, வித்யாரண்யரின் பஞ்சசதியையோ படிக்கலாம்‌.

சிஷ்யர்: சாஸ்திர அத்யயனம் எதற்காக உபதேசம் செய்யப் பட்டிருக்கிறது?

ஆச்சாரியாள்: சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக. சந்தேகங்கள், நாம் சாஸ்திரங்களின் அபிப்பிராயங்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால் மட்டுமின்றி, மற்றவர்களிடம் பேசுவது முதலியவற்றால் ஏற்படலாம் ஆகவே சாஸ்திரங்களைப் படிப்பது இது போன்ற சந்தேகங்களை தீர்த்து விடும்‌ மேலும் தத்துவத்திலும் விசுவாசம் உறுதியாக ஏற்படும்‌ அத்யயனம் செய்வதினால் தான் குரு உபதேசிக்கும் தத்துவத்திலும் முன் சொன்னது போல் சாஸ்திரங்கள் உபதேசிக்கும் தத்துவத்திலும் விசுவாசம் தீர்மானமாக ஏற்படும்‌.

சிஷ்யர்: ஒருவருக்கு குரு செல்வதில் தீவிரமான சிரத்தை இருந்து அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தால் அவனுக்கும் சாஸ்திர அத்யயனம் தேவையா?

ஆச்சார்யாள்: அவ்வளவு தீவிரமான சிரத்தை இருந்தால் அம்மாதிரி சிஷ்யனுக்கு சாஸ்திரங்களை தெரிந்து கொள்வது என்பது தத்துவத்தை அறிய அவ்வளவு தேவை இல்லை.

சிஷ்யர்: எவ்வளவு நாட்களுக்கு ஒருவன் சாஸ்திரத்தை அத்யயனம் செய்து கொண்டிருக்க வேண்டும்?

ஆச்சார்யாள்: எதுவரையில் ஒருவனுக்கு தத்துவத்தில் விசுவாசம் வரவில்லையோ அது வரை செய்து கொண்டிருக்க வேண்டும் அந்த நிலை அடைந்த பிறகு

“பலாலமிவ தான்யார்த்தீ த்யஜேத் க்ரந்த மசேஷத:”

( எப்படி நெல்லை விரும்புவன் உமியை எறிந்து விடுகிறானோ, அதேபோல் ஒரு அளவுக்கு மேல் வந்த பிறகு ஒருவன் புத்தகங்களை விட்டுவிடலாம்)

சிஷ்யர்: லௌகீக பந்தங்கள் பலவிதமாக இருப்பவர்கள் எவ்விதமான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பது ஆச்சாரியாளின் கருத்து?

ஆச்சாரியாள்: அவர்கள் தினந்தோறும் பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தையாவது பாராயணம் செய்து வரலாம். வித்யாரண்யரின் பஞ்சதசீயையும் சிறிதளவு பாராயணம் செய்து வரலாம். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மிகவும் நல்லது. தினமும் அதை பாராயணம் செய்பவர்கள் ஸ்ரேயஸை அடைவார்கள்.

சிஷ்யர்: பகவத்கீதையில் ஆச்சாரியாருக்கு பிடித்தமான சில ஸ்லோகங்களைக் கூறுவார்களா?

ஆச்சாரியாள்:
“அத்வேஸ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச!
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ!! ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிச்சய:!
மய்யர்ப்பிதமனோபுத்திர் யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:!!”
(எவன் ஒருவன் எவ்விடத்திலும் துவேஷம் வைத்துக் கொள்வதில்லையோ எல்லோர் இடத்திலும் மித்ர பாவத்துடனும் கருணையுடனும் இருக்கிறானோ எவன் பற்றுதலும் அகங்காரமும் இல்லாமல் இருக்கிறானோ சுகத்திலும் துக்கத்திலும் சமமாக இருக்கிறானோ எவன் எல்லோரையும் க்ஷமிக்கிறானோ எவன் திருப்தியுடன் இருக்கிறானோ எவனது புத்தியும் மனமும் என்னிடத்திலே இருக்கின்றனவோ அப்படிப்பட்ட பக்தன் எனக்குப் பிரியமானவன்.)

இந்த ஸ்லோகங்களில் மூலமாக பகவானுக்கு எப்படிப்பட்ட பக்தன் மிகவும் பிரியமானவன் என்று பார்க்கலாம். நாமும் அதேபோல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

சிஷ்யர்: இந்த ஸ்லோகங்கள் ஒரு ஞானியின் லட்சணங்களை அல்லவா குறிக்கின்றன. இப்படி இருக்கும் போது எவன் மோட்சத்தை விரும்புகிறானோ அவனுக்கு இந்த ஸ்லோகங்கள் பிரயோஜனம் அளிக்குமா?

ஆச்சாரியாள்: ஞானிக்கு என்று சொல்லப்பட்ட தன்மைகள் மற்றவர்களை அந்நிலையை அடைய செய்யக் காரணமாக இருக்கின்றன என்று சங்கரரே தெளிவாக கூறியிருக்கிறார். மேலும் பகவானுக்குரிய உபதேசப்படி அனைவரும் துவேஷம் இல்லாமல் கருணையுடன் இருப்பார்களேயானால் உலகம் அமைதியுடன் இருக்கும்.

சிஷ்யர்: சாஸ்திரங்கள் கலியுகத்தில் சில செயல்களை செய்ய வேண்டாம் என்று சொல்கின்றன. ஆனால் கிருதயுகம் போன்றவற்றில் இவற்றைச் செய்யக் கூடாது என்று கூறவில்லை. இதற்கு காரணம் என்ன?

ஆச்சரியாள்: சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வளவு தான் நாம் சாஸ்திரங்களில் கூறியதற்கு பொருள் கூறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் ஆனாலும், சாஸ்திரங்களில் கூறப்பட்டவற்றை மாற்றுவதற்கும் அதில் கூறப்பட்டிருப்பவைக்குக் காரணம் கூறவும் நமக்கு அதிகாரம் இல்லை. சாமர்த்தியமும் இல்லை. நான் இந்த பீடத்தில் இருப்பதால் கிட்டத்தட்ட ஒரு நீதிபதியின் நிலையில் உள்ளேன். நீதிபதி உலகிற்கும் சட்டங்களின்படி தான் தீர்ப்பு கூற முடியும். அவன் தானாகவே சட்டங்களை உண்டாக்க முடியாது. அதே போல் நான் புதிதாக சாஸ்திரக் கட்டளைகளை உண்டாக்கவில்லை. ஆனால் அங்கு கூறப்பட்டு இருப்பவற்றின் அர்த்தம் தான் கூற முடியும். ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி என்னிடம் கேட்டுப் பயனில்லை. ஸ்மிருதி புத்தகங்களை எழுதியவர்களை தான் கேட்க முடியும்.

சிஷ்யர்: எவர்களுக்கு உபநயனம் ஆகவில்லையோ அவர்கள் உபநிஷத்துகளின் மொழிபெயர்ப்புக்களையாவது படித்து புரிந்து கொள்ளலாமா?

ஆச்சாரியாள்: அதில் ஒரு தவறும் இருப்பதாக தெரியவில்லை.

சிஷ்யர்: யோக வாசிஷ்டம் புராணம் இராமாயணம் போன்ற புத்தகங்களை எல்லோரும் படிக்கலாமா?

ஆச்சாரியாள்: எல்லோரும் படித்து பயன் அடையலாம்.

சிஷ்யர்: உபநயனமானால் தான் வேதங்களை கற்க முடியும். பலர் பிராமணர்களாக இல்லாததால் அவர்களுக்கு வேத அத்யயனம் செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆதலால் அவர்களுக்கு மோட்சம் அடைவதற்கு வாய்ப்பில்லை. இம்மாதிரி சிலர் எதிராக கேள்வி எழுப்புகிறார்கள் இது சரியா?

ஆச்சாரியாள்: எவனுக்கு உபநயனமாகி இருக்கிறதோ அவன் தான் ஞானம் பெற முடியும் என்று யார் சொன்னார்கள்? விதுரர் ஒரு மகாத்மாவாக இருந்தார். அவர் த்விஜர் இல்லையே. (இரு பிறவிப் பெற்றவர்) வேத அத்யயனம் செய்ய கூடாது என்பதற்காக மோட்ச வழியில் செல்லக்கூடாது என்று பொருளில்லை. உபநிஷத்துக்களில் உள்ள கருத்தை நாம் யோக வாசிஷ்டம் விசாரஸாரம் போன்ற புத்தகங்களில் காணலாம். எல்லோருமே இம்மாதிரி புத்தகங்களைப் படித்து ஞானத்தை அவசியம் பெறலாம். எல்லோருக்கும் ஞானம் பெற தகுதி உண்டு‌. சங்கர பகவத்பாதாள் இவ்விஷயத்தை தீர்மானமாக கூறியிருக்கிறார்.

சிஷ்யர்: எல்லோருக்கும் கர்மயோகம் செய்வதற்கும் பக்தியில் ஈடுபடுவதற்கும் தகுதி உண்டா?

ஆச்சாரியாள்: இவன் அவன் என்ற வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் கர்மயோகம் செய்வதற்கும் பக்தியை வளர்த்துக் கொள்ளவும் தகுதியுண்டு. எல்லோரும் தன் மனதை புனிதமாக்கி கொண்டு ஞானத்தை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe