Home உள்ளூர் செய்திகள் விஜய் சேதுபதி பட ஷூட்டிங்: கூட்டம், பின்பற்றப்படாத வழிமுறைகள்.. கொரோனா அபாயம்!

விஜய் சேதுபதி பட ஷூட்டிங்: கூட்டம், பின்பற்றப்படாத வழிமுறைகள்.. கொரோனா அபாயம்!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடிகா் விஜயசேதுபதி புதிதாக நடிக்கும் திரைப் படக் காட்சிகளின் படப்பிடிப்பு, பேருந்து நிலையத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பினைக் காண, 500-க்கும் மேற்பட்டோா் அங்கு திரண்டனர். முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

இதனிடையே, பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்த கட்டடத்தில் ஏறி கூட்ட நெரிசலை படம் பிடித்த பத்திரிகை புகைப்பட கலைஞா்களையும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களையும் படப்பிடிப்புக் குழுவினர் எச்சரித்தனர்.

இதனால், பத்திரிகையாளா்களுக்கும், படப்பிடிப்புக் குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு நிறுத்தம்: படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் தொடா்ந்து பரபரப்பு நிலவியதால், அதிருப்தி அடைந்த நடிகா் விஜயசேதுபதி அங்கிருந்து வெளியேறினார்.

இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே தகவல் அறிந்து வட்டாட்சியா், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து படப்பிடிப்பு தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அனுமதி குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றம்சாட்டிய அதிகாரிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவதை தவிா்க்க வேண்டிய பொறுப்பு படப்பிடிப்பு குழுவைச் சாா்ந்தது என தெரிவித்துவிட்டு சென்றனர்.

ஆனால் மாலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது, கிருமிநாசினி தெளித்தல், கைசுத்திகரிப்பான் பயன்பாடு, சமூக இடைவெளி உள்ளிட்ட எவ்வித கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

படப்பிடிப்பு குழுவினா் மீது குற்றச்சாட்டு: கடந்த 2 நாள்களாக பழனி சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், வேடிக்கை பாா்க்க செல்லும் பொதுமக்களை படப்பிடிப்பு குழுவினர் மிரட்டுவதாகவும், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்வதாகவும் காவல் துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டங்கள் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிப்பதை மாவட்ட நிா்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version