ஏப்ரல் 18, 2021, 10:08 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  மார்ச் 21: இன்று உலக காடுகள் தினம்!

  அறியச் செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக காடுகள் தினத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

  elephant assam forest
  elephant assam forest

  கட்டுரை: – ராஜி ரகுநாதன்

  நவீன தலைமுறையினருக்கு காடுகளின் பயன் மற்றும் முக்கியத்துவம் குறித்து அறியச் செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக காடுகள் தினத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

  தூய்மையான காற்று, சுத்தமான நீர் இவற்றை இழந்து விட்டு முன்னேற்றத்தை சாதித்து விட்டோம் என்று கூறுவது நகைப்புக்கு இடமானது. வசதிகளையும் சுகங்களையும் பெருக்கிக் கொண்டு மன அமைதியை இழந்து நிற்கிறோம் என்றால் தவறு யாருடையது என்பதை சிந்திக்க வேண்டும்.

  மனிதன் செய்யும் மிகப் பெரும் தவறு மரங்களை வெட்டுவதே. அதன் மூலம் நிலத்தை பாலைவனமாக்குகிறான். இயற்கை வளம், நாட்டு முன்னேற்றம் இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. காற்று, நிலம், நீர் என்ற மூன்று அடிப்படை வசதிகளுக்கும் மூலம் மரங்களே.

  “நான் ஒரு குருவியை வளர்த்தேன். ஆனால் அது பறந்து விட்டது. நான் ஒரு அணிலை வளர்த்தேன். அதுவும் ஓடிவிட்டது. பின்னர் நான் ஒரு மரம் வளர்த்தேன். அவை இரண்டும் திரும்பி வந்தன” என்ற அழகிய கவிதையை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எழுதியுள்ளார்.

  இயற்கைச் செல்வங்களான காடுகள், நீர் நிலைகள், பறவைகள், விலங்குகள், ஜீவராசிகள் அனைத்தும் மனித வாழ்வுக்குத் தேவையான பொக்கிஷங்கள். இவற்றின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் சமநிலை மீது ஆதாரப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் காரணமாக சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. இது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

  Nallamala forest side e1561991249647
  Nallamala forest side e1561991249647

  மனிதன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளவன். தன் இஷ்டத்திற்கு இயற்கைச் செல்வத்தை அனுபவிக்கும் உரிமை மனிதனுக்கு கிடையாது. இயற்கையை அன்போடு நோக்கம் இயல்பு ஆறறிவு படைத்த மனிதனின் கடமை.

  சீதாதேவி வனவாசத்தின்போது காடுகளில் வசித்த போதும் செடிகளை நட்டு தன் அன்பை வெளிப்படுத்தினாள். அதேபோல் பார்வதிதேவியும் தவம் இயற்றும் போது தினமும் மரங்களுக்கு நீர் ஊற்றுவது, மலர்க் கொடிகளை வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டாள். தவ வாழ்க்கையில் மரங்களை வளர்ப்பது ஒரு பகுதியாக கடைபிடிக்கப்பட்டது. ஞானத்தின் இருப்பிடமாக விளங்கிய முனிவர்களின் குடில்கள் இயற்கை அன்னையின் மடியில் விளங்கிய வைபவத்தை புராணங்கள் விளக்குகின்றன.

  இயற்கையும் உயிரினங்களும் படைப்பின் இரு கண்கள். உயிரினங்கள் தோன்றிய போது அவை உயிர் வாழத் தேவையான உணவும் சுவாசிக்க தேவையான காற்றும் காடுகளிலிருந்து கிட்டின. மனிதன் சமுதாயப் பிராணியாக முன்னேற முற்பட்டபோது காட்டு மரங்களை வீடு கட்டவும், கருவிகளாக உருவாக்கவும், மருத்துவ மூலிகைகளாகவும் பயன்படுத்த தொடங்கினான். நவீன வாழ்வின் தேவைக்கேற்ப மரங்களின் பயன்பாடும் பங்கும் விரிந்து கொண்டே வந்தது.

  nallamalai forest
  nallamalai forest

  அமைதியான மனித வாழ்க்கைக்கு பூங்காக்களும் சாலையோர மரங்களும் இன்றியமையாத இடம் பிடித்தன. அரசர்கள் நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் நட்டனர் என்று சிறுவயது பாடங்களில் படித்துள்ளோம்.

  நகர்ப்புற வாழ்வின் நெருக்கடிகளை சுமக்கும் மனிதன் ஓய்வுக்கு மரங்கள் அடர்ந்த சோலைகளை நாடுகிறான்.

  மண் அரிப்புகளைத் தடுத்து, சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாத்து, வனவிலங்குகளை ஆதரித்து சூழலுக்கு ஏற்ப மரங்கள் தரும் நன்மைகள் பல.

  “ஒரு ஏக்கர் காடு, ஆறு டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, நான்கு டன் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது 18 பேரின் வருடாந்திர தேவைகளை பூர்த்தி செய்யப் போதுமானது” என்று கண்டறிந்து யுஎஸ் வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

  “மரங்கள், புதர்கள் மற்றும் செடிகள் நிலத்தின் தூசியை அகற்றி கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்ற மாசுபடுத்திகளை உறிஞ்சுவதன் மூலம் காற்றை வடிகட்டுகின்றன. அவ்வாறு ஆரோக்கியமற்ற துகள்களை காற்று உறிஞ்சிய பின், மழை அவற்றைக் கழுவுகிறது” என்பது ஆராய்ச்சியின் விளைவாக கண்டறியப்பட்டுள்ளது.

  மரத்தின் இலைகள் சூரியனின் கதிரியக்கச் சக்தியை உறிஞ்சி வடிகட்டுகின்றன. கோடையில் பூமியை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றன. மரங்கள் மழை நீரை உறிஞ்சி நிலத்தில் சேமித்து வைக்கின்றன. தொலைதூர வேர்கள் மண்ணைப் பிடித்து வைத்து மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றன. இது நிலத்தடி நீரை சேமிப்பதற்கு உதவுகிறது. ரசாயனங்கள் நீரோடையில் கலப்பதை தடுக்கிறது. பழுத்து விழுந்த இலைகள் மண்ணை வளப்படுத்தி சிறந்த உரமாகின்றன.

  தாவர உணவுண்ணும் விலங்குகளான ஆடு, மாடு, யானை, ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றுக்கு இலைகளே ஊட்டச்சத்தாக உள்ளன. மேலும் தேன் சேகரிப்புக்கு மலர்களே மூலாதாரம். பல பறவைகளும் விலங்குகளும் பழங்களை நம்பியே வாழ்கின்றன. நூற்றுக்கணக்கான பறவைகள் மரங்களையே தம் வீடுகளாகக் கருதி நிம்மதியாக வாழ்கின்றன.

  கம்பீரமாகவும் அழகாகவும் உள்ள மரங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் ஆறுதல் அளித்து கவலைகளை மறக்கச் செய்கின்றன. வலிமைக்கும் நீண்ட ஆயுளுக்கும் சான்றாக மரங்கள் நிற்கின்றன.

  மரம் நடு விழாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நாடு முழுவதும் பல அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது வரவேற்க வேண்டிய விஷயம்.

  பூமி வெப்பமயமாதல், ஓசோன் திரையில் துளைகள் விழுவது போன்ற செய்திகளை அடிக்கடி கேட்கின்றோம். இவை சுற்றுச்சூழல் சம நிலையை இழப்பதால் ஏற்படும் பரிதாபங்கள். காடுகளை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதன் மூலம் இவற்றிலிருந்து பூமியை காப்பாற்ற முடியும்.

  சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் செடிகளுக்கும் உயிர் உள்ளது என்ற உயர்ந்த உண்மையை பரிசோதனை மூலம் நிரூபித்தார். செடிகள் மனிதனுடைய அன்பையும் வெறுப்பையும் புரிந்து கொள்ளக் கூடியவை என்று கூறி அற்புதமான ஆராய்ச்சிகளை நடத்தி விளக்கினார்.

  வீட்டுத் தொட்டியில் வளரும் ஒரு செடி வீட்டில் வசிக்கும் நான்கு பேருக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள் இருந்தால் ஏர்கண்டிஷன் கூட தேவையில்லை. மின்சார செலவும் குறையும்.

  தூய்மையான பூமியை நம் எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்வது நம் பொறுப்பு அல்லவா? அதற்கு முதல்படியாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரங்களை நட்டு பாதுகாப்போம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »