― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அண்ணாமலையை ஆதரித்து ‘விவசாயி’ எடப்பாடியாரின் அனல் பறக்கும் பிரசாரம்!

அண்ணாமலையை ஆதரித்து ‘விவசாயி’ எடப்பாடியாரின் அனல் பறக்கும் பிரசாரம்!

- Advertisement -

கரூர் : இஸ்லாமியர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது நமது ஜெயலலிதா அரசு மட்டுமே என்றும் கரூர் அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது வலியுறுத்திப் பேசினார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி பேருந்து நிலையத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்…

முதல்வராகப் பொறுப்பேற்றால் என்னென்ன பிரச்னைகள் இருக்கும் என்பதை எனக்கு சுட்டிக் காட்டியவர் பிரதமர் மோடி. குஜராத்தில் முதல்வராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறினார் அவர். நம் மாநிலம் ஏற்றம் பெறுவதற்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் பிரதமர் மோடி.

அமித் ஷா நமக்குத் தேவையான உதவிகளை கேட்டபோதெல்லாம் செய்து கொடுத்தார். மத்தியில் சிறந்த ஆட்சி நடக்கிறது. அவர்களோடு நாம் இணக்கமாக இருந்தால்தான் தேசிய நெடுஞ்சாலை அமைக்க ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வாரி வழங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு நடந்தாய் வாழி காவிரி திட்டம். மத்திய அரசு நமக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ளது.

காவிரி-கோதாவரி இணைப்பு மூலம் காவிரியில் அதிக தண்ணீர் கிடைக்கும். வறண்டு கிடக்கும் குளங்கள், ஏரிகள் நிரம்பி, விவசாயிகளுக்கான நீரை இந்த அரசு வழங்கும். நான் ஒரு விவசாயி.

இதைக்கூட ‘என்னை போலி விவசாயி என்கிறார் ஸ்டாலின். அவர்தான் போலி விவசாயி என்பதை கண்டுபிடித்துள்ளார். விவசாயிகளை கொச்சைப்படுத்தும் அவர் ஆளத் துடிக்கிறார். தமிழகம் வேளாண் தொழில் நிறைந்த மாநிலம். 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இதனால் அவர்களுக்குத் தேவையான திட்டங்களை வழங்கி அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும், அதுதான் எனது சிந்தனை.

இன்றைக்கு ஒரு விவசாயி முதல்வர் என்பதால் குடிமராமத்துத் திட்டத்தை கொண்டு வந்தேன். ஏரி, குளங்களை தூர்வாரி மழைக் காலங்களில் நீரை தேக்கி வைக்கிறோம். விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீராதாரத்தை பெருக்க நீர் மேலாண்மையை கொண்டு வந்தேன். இந்த திட்டத்தை செயல்படுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் 2 பேரையும், ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியாளர் 2 பேரையும் நியமித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, நதிகள், வாய்க்கால் மூலம் தண்ணீர் வீணாக எங்கெல்லாம் கடலில் கலக்கிறதோ அங்கெல்லாம் தடுப்பணை கட்டலாம் என்றேன்.

அவர்கள் கொடுத்த அறிக்கை மூலம்தான் நஞ்சைப் புகளூரில் ரூ.406 கோடியில் கதவணை கட்டுகிறோம். முக்கால் டிஎம்சி தண்ணீர் சேமிக்க உள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான நீர், குடிநீர் கிடைக்கும். விவசாயியாக இருப்பதால்தான் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். நீர்மட்டம் உயர இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற ரூ.940 கோடிக்கு திட்டப்பணிகள் நடக்கிறது.

பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பராமரிக்கப்படும் 70,000 ஏரிகளை ஒரே நேரத்தில் தூர்வார முடியாது. ஆனாலும் கொஞ்சம், கொஞ்சமாக தூர்வாரி இதுவரை 6,000 ஏரிகளை தூர்வார ரூ. 13000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது.

ஊராட்சி மன்றத்தின் கீழ் பராமரிக்கப்படும் ஏரிகள் தூர்வார ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டு குளம், குட்டைகள் தூர்வாரப் படுகிறது.

நீர் மேலாண்மையில் 2019ல் தேசிய விருது வாங்கியிருக்கிறோம். விவசாயியான நான் தமிழக முதல்வராக இருப்பதால்தான் நீர்மேலாண்மை திட்டத்தில் நீரை சேமித்து, பக்குவமாக விவசாயிகளுக்கு அளித்து, வேளாண்மை சிறந்து விளங்குகிறது. இதற்கு சான்று நாட்டில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், தமிழகம்தான் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது என்ற பெருமையைப் பெற்றுள்ளோம்.

திமுக ஆட்சியில் காவிரி பிரச்னையை கண்டு கொள்ளவே இல்லை. கபினி அணை கட்டப்படும்போது முதல்வராக இருந்த கருணாநிதி கண்டுகொள்ளவே இல்லை. இதனால்தான் பிரச்னை. குடிநீர் வேண்டுமென்றாலும் அங்கிருந்துதான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் சுமார் ரூ.462 கோடி மதிப்பில் அரவக்குறிச்சி, பரமத்தி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் காவிரி குடிநீர் திட்டம் எனது தலைமையிலான அரசுதான் செய்துள்ளது.

திமுக ஆட்சியில் கிடைத்ததா? விவசாயி என்பதால் கிராமப்புற மக்கள் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை செயல்படுத்தினேன். புஞ்சைப் புகழூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா, கொடையூர் கிராமத்தில் ரூ.4 கோடியில் முருங்கை பதப்படுத்தும் மையம் அமைய உள்ளது.

குடிசை மாற்று வாரியம் மூலம் 32 அடுக்கு மாடி வீடுகள் ரூ. 3 கோடி மதிப்பில் நடக்கிறது. வேலாயுதம்பாளையத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பில் வெற்றிலை பதப்படுத்தும் மையம் அமைய உள்ளது.

கோரைக்கு எல்பிபி வாய்க்கால் உபரி நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. சின்னதாராபுரத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் அமைய உள்ளது. தாதம்பாளையம் ஏரியை சுத்தப்படுத்தி அமராவதி நீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சின்னதாராபுரம் முதல் நஞ்சைக்காளக்குறிச்சி, கூடலூர் வரை ராஜவாய்க்கால் தூர்வாரப்பட்டு, கரைகள்கான்கிரீட் தளமாக மாற்றிமைக்கப்படும். அரவக்குறிச்சி வறட்சியான பகுதி. இங்கிருக்கும் நிலங்கள் காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் கொண்டுவந்து பாசன வசதி செய்து கொடுக்கப்படும். மிகப்பெரிய திட்டமான இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது, வறட்சியான பகுதி செழுமையான பகுதியாக மாறும்.

அதிமுகவில் ஊழல் எனக் கூறும் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை கூடவே வைத்திருக்கிறார். கரூரில் ஊழல் செய்த, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. அவரை சிறந்த வேட்பாளர் என்கிறார் ஸ்டாலின். கொடுக்கும் உறுதிமொழியை காற்றில் விடக்கூடியவர் செந்தில்பாலாஜி. கடந்த தேர்தலில் ஒவ்வொரு வீட்டுக்கும் 3 சென்ட் நிலம் கொடுப்போம் என்றார். ஆனால் கொடுத்தாரா? அதிமுக ஆட்சியில் அவரை பாடுபட்டு இந்த தொகுதியில் ஜெயிக்க வைத்தோம். ஆனால் இன்று எங்களையே கவிழ்க்க நினைக்கிறார்.இரட்டை வேடம் கொண்டவர்தான் செந்தில் பாலாஜி.

பாஜக வேட்பாளர் அண்ணாமலையை தாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு இனி வரும் ஏப்.1-ம்தேதி முதல் 24 மணி நேரமும் விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தேர்தலுக்கு முன்பாகவே இதை அறிவித்து விட்டேன். 6 சவரனுக்கு கீழ் கூட்டுறவு சங்கத்தில் கடனாக வைத்து தொகை பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கட்டணமில்லாமல் வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சியளிக்கப்பட்டு உரிமத்தை அரசே வழங்கும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்களும், வாஷிங்மெஷினும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இன்னும் பல திட்டங்கள் ஜெயலலிதா அரசு வழங்க உள்ளது.

இஸ்லாமிய பெருமக்களுக்கும் நிறைய திட்டங்கள் கொடுத்துள்ளது. ஹஜ் பயணத்திற்கு ரூ. 6 கோடி இருந்ததை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளோம். இந்த பயணத்தின்போது சென்னையில் தங்கிச் செல்ல ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் உலமாக்களுக்கு ரூ.3,000 உயர்த்தியுள்ளோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கியுள்ளோம்.

நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு விலையில்லா சந்தனம் வழங்கி வருகிறோம். நாகூர் தர்கா குளக்கரையை ரூ.4.33 கோடி மதிப்பில் சீரமைத்து வருகிறோம். இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரே அரசாங்கம் ஜெயலலிதா அரசு. இஸ்லாமியர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசு ஜெயலலிதா அரசு.

அரசியலுக்காக நாங்கள் இதை செய்யவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு, திமுகவினர் சிறுபான்மை ஓட்டுக்களை பெறுவதற்காக என்னைப்பற்றி அவதூறு பரப்புரை செய்கிறார் என்கிறார்கள். இது தவறானது என்றார் அவர்.

பிரசாரத்தில் பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை, அதிமுக கொள்கை பரப்புச் செயலர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, மாநில பிரதிநிதி விவி.செந்தில்நாதன், பாஜக மாவட்டத் தலைவர் சிவசாமி, தமாகா மாநிலத் தலைவர் எம்.ராஜேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version