spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அட்டகாசமான தேர்தல் அறிக்கை!

அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அட்டகாசமான தேர்தல் அறிக்கை!

- Advertisement -

அடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே!

  • திருஞான சம்பந்தர் தேவாரம்

இந்து மக்கள் கட்சி – தமிழகம்
தேர்தல் அறிக்கை – 2021


தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
இந்துத்துவ அரசியல் புரட்சிக்களம்


இந்துத்துவ புரட்சியாளர் தமிழ்திரு. அர்ஜுன்சம்பத் அவர்களின் தலைமையில், இந்து மக்கள் கட்சி வருகின்ற 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும்.

இந்துக்களின் எழுச்சியே தமிழகத்தின் வளர்ச்சி! வளமான தமிழகம்; வலிமையான பாரதம்! ஜனநாயகம் காப்போம்! வன்முறை தவிர்ப்போம்! பயங்கரவாதம் எதிர்ப்போம்! அனைவருக்கும் சமமான சமூக நீதி! சுதேசி, கிராமிய, சர்வோதய, சுயசார்பு பொருளாதார கொள்கை! அகவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் நேர்மை ஆகிய கோட்பாடின் அடிப்படையில் பின்வரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு ராஜாக்கள். ஒருவர் சிதம்பரம் நடராஜா, மற்றவர் ஸ்ரீரங்கம் அரங்கராஜா. தமிழகத்தில் எப்போதும் அன்னை மீனாட்சியின் ஆட்சி. ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், அருளாளர்கள் என்றும் தமிழ் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறார்கள்.

2021-ல் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் இந்து வாக்கு வங்கியை உருவாக்கும். சட்டமன்றத்திற்குள் இந்துக்களுக்காக வாதாடும், போராடும், பரிந்து பேசும். ஒரு சில நபர்களையாவது சட்டமன்ற உறுப்பினராக்க வியூகங்கள் வகுக்கப்படும்.

*தமிழகத்தில் பழந்தமிழர்கள் பின்பற்றிய இந்து சமய, சனாதன தர்மத்தின் முறைப்படி ஆட்சி நடத்தப்படும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் மனுதர்மத்தின் அடிப்படையிலேயே குடிமக்கள் நலன் பேணி சிறப்பான ஆட்சி நடத்தினார்கள். எனவே மனுநீதிச் சோழன் வழியில் மனுநீதி பின்பற்றப்படும். திராவிடத்திற்கு மாற்று ஆன்மீக அரசியல் என்பதை நடைமுறைப்படுத்த இத்தேர்தலில் முயற்சி மேற்கொள்ளப்படும். ஆட்சி மாற்றம் என்பது ஒரு நிகழ்ச்சி! அரசியல் மாற்றம் என்பது புரட்சி!

*தமிழகத்திலும் மோடியின் ஆட்சி வந்திட வேண்டும்! இந்து மக்கள் கட்சி போட்டியிடுகின்ற தொகுதிகளைத் தவிர பிற தொகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரிக்கும்! பாஜக போட்டியிடுகின்ற 20 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வெற்றியடைய முழுமையாக உழைக்கும்!

*தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடாமல் பாதுகாப்பது; தமிழகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரது தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர்வது; இந்துக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வழிவகை செய்வது- என்கிற அடிப்படையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இ.ம.க. சார்பாக இந்துக்களின் முதல்வர் தமிழ்திரு.அர்ஜுன்சம்பத் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க பின்வரும் திட்டங்கள் நிறைவேற்றப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அதற்கான அடித்தளம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் திராவிட,காங்கிரஸ் கம்யூனிச, சினிமா,சாராய, இலவச அரசியல் கலாச்சாரங்கள் ஒழிக்கப்படும். இந்துத்துவ அரசியல் புரட்சி நிகழ்த்தப்படும்.

*தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, முழுமையாக அனைத்து வகை போதை பொருட்களையும் தடைசெய்தல்; கள் போதைப் பொருள் அல்ல, மக்கள் உண்ணும் உணவின் ஒரு பாகமாக அறிவிக்கப்பட்டு தென்னம்பால், பனம்பால் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்படும்.

*தமிழகத்தில் இலவசத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். ஒரு குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கி குடிமக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம். பணத்தை சுலபத் தவணையில் வட்டியில்லாமல் திரும்பச் செலுத்தலாம். கோடி ரூபாய் மூலம் தொழில் துவங்குதல், வீடு கட்டுதல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மக்களே பூர்த்தி செய்யலாம்.

*தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக்கல்வி, தாய்மொழிக்கல்வி, தாய்நாட்டுக்கல்வி, தாய்ச்சமயக்கல்வி கட்டணமின்றி வழங்கப்படும். 5-ஆம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். மும்மொழிக் கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும். அரபுமொழி படிப்பவர்களுக்கு அரசு உதவிகளை ஏற்பாடு செய்வதுபோல, இந்தி, சமஸ்கிருதம் கற்போருக்கும் அரசு ஏற்பாடு செய்யும்.

*இந்து தமிழ் ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நவோதயா பள்ளிகள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று வீதம் மத்திய அரசின் துணையுடன் ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. மாணவர்களுக்கு படிக்கும்போதே கைத்தொழில்களை கற்றுக் கொள்ளும் தொழிற்கல்வியும் அறிமுகப்படுத்தப்படும்.

*மாணவர்களுக்கான பாடத்திட்டங்களில் இந்து சமயக் கல்வி இடம்பெற வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கு ஓராண்டுக் காலம் ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்படும். தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ரெட்கிராஸ், ஸ்கவுட் உள்ளிட்ட அமைப்புகள் தடைசெய்யப்பட்டு, விரும்புகின்றவர்களுக்கு ஆர்எஸ்எஸ் ஷாகா பண்பாட்டுப் பயிற்சி நடத்த வழிவகை செய்யப்படும்.

*பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளுக்கு ஆதரவளிப்போம், விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை கொடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாய விலைநிலங்கள் விற்பனை செய்வது தடுக்கப்படும். இடுபொருட்கள், உரம் ஆகியவை வழங்கப்படும். விவசாயத்திற்கான நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும். பயிர்க் காப்பீட்டு வசதி செய்து தரப்படும்.

*வணிகமயமாகிவிட்ட ஆங்கில மருத்துவமனைகள் அரசுடமை ஆக்கப்படும். தமிழகத்தின் பாரம்பரிய வைத்தியங்களான சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட வைத்தியங்கள் மேம்படுத்தப்படும். அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டும். கிராம அளவில் மருத்துவமனை வசதிகள் செய்யப்படும்.

*தமிழகத்தில் கால்நடைச் செல்வங்கள் காப்பாற்றப்படும். பசுவதை தடைச்சட்டம் அமுல்படுத்தப்படும். விவசாயக் குடும்பத்திற்கும், நகர்ப்புறங்களில் விரும்புகின்றவர்களுக்கும், ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகள் வழங்கப்படும். நாட்டுமாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், நம்முடைய பாரம்பரிய வீட்டு விலங்குகள் பாதுகாக்கப்படும். கால்நடை மருத்துவமனை வசதிகள் மேம்படுத்தப்படும்.

*தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுத்தா சட்டம் முறைப்படுத்தப்படும். ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்.

*திருக்கோயில்கள், சுயேச்சையான அதிகாரம் பெற்ற இந்து அறவோர் வாரியம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். கோவிலை நிர்வகிக்க பக்தர்கள் சபை உருவாக்கப்பட்டு தேர்தல் நடத்தி அறங்காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கோயில் சொத்துக்கள், வருமானம் ஆகியவை இந்து சமய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

*இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படும். கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படும். அன்னதானம், கோசாலை, கல்விக்கூடங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை கோயில் வருமானம் மூலம் நடத்தப்படும். கோயில்களில் சமய வகுப்பு, சமய பிரசாரம் செய்யப்படும்.

*கோயில்களின் மூலமாக இந்து சமயப் பிரசாரம் செய்து தாய்ச் சமயம் திரும்பும் நிகழ்வுகள் நடத்தப்படும் தாய்ச் சமயம் திரும்புவோருக்கு பட்டியல் இன மக்களுக்கான சலுகைகள் இட ஒதுக்கீடு ஆகியவை வழங்கப்படும்.

*தமிழகத்தில் அரசு நிர்வாகம் வெளிப்படையானதாகவும், வேகமாகவும் செயல்பட (E-governance) மின்னணு மயமாக்கப்படும். ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு/ இறப்பு சான்றிதழ்களை இலவசமாக மின்னஞ்சல் மூலமாக பெற முடியும் என்கிற நிலை உருவாக்கப்படும். பத்திரப்பதிவுக் கட்டணங்கள், வழிகாட்டி மதிப்புக்கள் ஆகியவை குறைக்கப்படும்.

*தமிழகத்தில் ஓவியர்கள்,சிற்பிகள், பொற்கொல்லர்கள்,நாட்டிய இசைக்கலைஞர்கள்,ஓதுவார்கள், கைவினைஞர்கள்,கிராமிய கலைஞர் கள்,ஆகியோருக்கு நலவாரியம் அமைக்கப்படும்.

*நெசவாளர்கள் நலன் காக்க கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவர்; சலுகைகள் வழங்கப்படும்.

*சீருடைகள், வேஷ்டி, துண்டுகள் உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தால் கைத்தறி நெசவுக்கென்று ஒதுக்கப்பட்ட ரகங்களை விசத்தறி உள்ளிட்ட மற்றவர்கள் தயாரிக்க தடை விதிக்கப்படும்.

*இந்து மாணவர்களுக்கான கல்விக் கட்டணச் செலவை முழுமையாக அரசு ஏற்கும்.

*தமிழகத்தில் வீடு இல்லாத இந்து தமிழ்க் குடும்பங்கள் அனைவருக்கும் குடியிருப்பதற்கான வீடு கட்டித் தரப்படும்.

*இந்துக்கள் செல்லும் அனைத்து புனித யாத்திரைக்காக வசூலிக்கபடும் அனைத்து வகை வரிகளும் ரத்து செய்யப்படும். இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகள் சபரிமலை யாத்திரை, காசி யாத்திரை, கைலாய யாத்திரை, உள்ளிட்ட அனைத்து புனிதப் பயணங்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும். பாத யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

*விவசாய நலனுக்காக தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். புதிய வேளாண் சட்டங்கள் தமிழகத்தில் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படும்.

*தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும்,தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், நியாயமான சம்பளம்,விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் பெற்றுத் தர அரசு முயற்சி எடுக்கும்.

*பெண்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய பெண்கள் பாதுகாப்புப் படை அமைக்கப்படும். ஈவ்-டீசிங், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும். பெண்களை ஆபாசமாக, இழிவாகச் சித்தரிக்கும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படும்.

*தமிழக காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் தமிழக காவல் துறையைச் சீரமைக்க காவல் துறை ஆணையம் அமைக்கப்படும். காவல் துறையின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்படும். காவலர் சங்கம் அமைக்கப்படும்.

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறவேண்டும் என்கிற சட்டம் கொண்டு வரப்படும்.

*1980 ஆண்டு முதல் இன்று வரை இந்து இயக்க முழுநேர ஊழியர்கள் மற்றும் தலைவர்களின் கொலை வழக்குகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளிகள், குற்றவாளிகளைத் தூண்டி விட்டோர், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோர், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

*வீரத்துறவி ராமகோபாலன், அமரர் தாணுலிங்க நாடார் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். சென்னையில் தாணுலிங்க நாடார் சிலை அமைக்கப்படும்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள ராமகோபாலன் வாழ்ந்த இடம் நினைவிடமாக மாற்றப்படும். அந்த தெருவிற்கு இராமகோபாலன் சாலை என்று பெயர் சூட்டப்படும்.

*மத அடிப்படைவாத இயக்கங்களான எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்படும்.சீனா ஆதரவுடன் செயல்படும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட நக்சல் அமைப்புகளும் தடை செய்யப்படும்.
மோசடி மதமாற்றத்தில் ஈடுபடும் மோகன் லாசரஸ்,காருண்யா தினகரன், எஸ்ரா சற்குணம்,ஜெகத் கஸ்பர் உள்ளிட்டோர், அவர்கள் செய்துவரும் பொருளாதார மோசடிகள்,சாதி மத கலவரங்களைத் தூண்டுதல் ஆகிய காரணங்களுக்காக கைது செய்யப்படுவார்கள்.

*தாலி அகற்றும் போராட்டம், பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் என்று தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை அவமதிக்கும் திராவிடர் கழகம் தடை செய்யப்படும். கோயில்களின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நாத்திகக் கல்வெட்டுக்கள், சிலைகள் அகற்றப்படும்.

*இனவெறுப்பு கொள்கைகளை விதைத்து பிராமணர்களுக்கு எதிராக அவதூறு செய்து வரும், சாதிக் கலவரத்தை உருவாக்கும் உள்நோக்கத்துடன் செயல்படும் ஈ.வெ.ரா.வின் கொள்கைகள் தடை செய்யப்படும். பாடப் புத்தகங்களில் இருந்து ஈ.வெ.ரா.வின் நாத்திகம் மற்றும் இனவெறுப்பு கொள்கைகள் நீக்கப்படும். சென்னை மெரினா கடற்கரையில் இனி பிணங்களைப் புதைப்பதற்கு தடை விதிக்கப்படும்.

*இந்து சமயம் காக்க, தேசம் காக்க இந்துத்துவக் கொள்கைகளுக்காக சிறை சென்ற, அயோத்தி கரசேவையில் பங்கேற்ற இந்து இயக்க ஊழியர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். ஜிகாதிகளால் கொல்லப்பட்ட வீர கணேஷ், ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட இந்து தியாகிகளுக்கான தியாகிகளின் கோட்டம் அமைக்கப்படும்.

*தமிழக நதிகள் அனைத்தும் இணைக்கப்படும். தடுப்பணைகள் கசிவுநீர்க் குட்டைகள் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் புதியதாக அமைக்கப்படும்.

*ஏரிகள்,குளங்கள், குட்டைகள் ஓடைகள் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும்.

*நீர் மேலாண்மை திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறப்பாக நடைமுறைப் படுத்தப்படும்

*அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். தண்ணீர் வணிகம் முடிவுக்கு கொண்டு வரப்படும்

*நீர்வழி போக்குவரத்து மேம்படுத்தப்படும். பக்கிங்காம் கால்வாய் மீட்கப்பட்டு நீர்வழிப் போக்குவரத்தைத் துவக்குவோம்.
சென்னையில் இருந்து குமரி வரை சிறு கப்பல் போக்குவரத்து,படகுப் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் நீர்ப் போக்குவரத்து துறை மேம்படுத்தப்படும்.

*தமிழகத்தில் பசு வதை தடைச் சட்டம் கொண்டுவரப்படும்.

*உடனடியாக மோசடி மதமாற்ற தடைச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

*பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

*சிறுபான்மை சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பெரும்பான்மை- சிறுபான்மை என மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல் அனைவரும் ஒருபான்மையாக நடத்தப்படுவார்கள். சாதி, மத அடிப்படையிலான சலுகைகள் ரத்து செய்யப்படும்.

*மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும். சாதிவாரி இட ஒதுக்கீடு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆகியவை ரத்து செய்யப்படும்.

*ஆறுகளைப் பாதுகாத்திட எந்திரங்கள் மூலமாக மணல் அள்ளுவது தடை செய்யப்படும். அடிப்படைத் தேவைகளுக்கான மணலை மாட்டுவண்டிகள் மூலமாக மட்டுமே எடுக்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்படும்.

*சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், வேதியல் முறையில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள் ஆகியவை தடை செய்யப்படும். பாரம்பரியமான இயற்கை முறையில் தோல் பதனிடுதல், துணிகளுக்கு சாயம் ஏற்றுதல் உள்ளிட்ட பணிகள் மூலமாக பாரம்பரியத் தொழில்நுட்பங்கள் மீட்கப்படும்.

*நதிகளில் கழிவுநீர் கலக்கப்படுவது தடை செய்யப்படும். நதிகளின் கரைகள் பலப்படுத்தப்படும். நதிகளின் கரைகளில் 100 மீட்டர் தொலைவிற்கு காடுகளை உருவாக்குவதற்காக மரங்கள் நட்டு வளர்க்கப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நதிகளையும் நீர்நிலைகளையும் பாதுகாத்திட உறுதியோடு செயல்படுவோம்.

*நிலத்தடி நீரைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்துளைக் குழாய் கிணறு அமைப்பதற்கு அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற நிலை உருவாக்கப்படும். மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*மீனவர்கள் நலனைப் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மீனவ மக்கள், பழங்குடியின மக்கள் ஆவார்கள் இவர்களைப் பாதுகாத்திட கடல்சார் பழங்குடியின மக்கள் பட்டியல் உருவாக்கப்படும். நாட்டுப்படகு மீனவர்கள் உரிமை பாதுகாக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மீனவக் கிராமங்களை உருவாக்கி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தப் பகுதியில் கிறிஸ்தவ பிஷப்புகள் பிடியிலிருந்து மீனவ மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

*தமிழகத்தில் உள்ள மலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் சட்டவிரோத கல் குவாரி தொழில்கள் தடை செய்யப்படும். மலைகளிலும் காடுகளிலும் அமைந்துள்ள இந்துத் திருக்கோயில்களில் வழிபாடு நடத்துவதற்கு பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படும் கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வஜ்ரகிரி மலையும், பிருங்கி முனிவர் மலை அதாவது பரங்கிமலையும் மீட்கப்படும்.

*தமிழகத்திலுள்ள வனங்கள், காடுகள் பாதுகாக்கப்படும். வன வளம் பெருக்கிட நடவடிக்கை எடுக்கப்படும். வனவாழ் பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். தமிழக வனப்பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்படும். புதிதாக மரங்களை நட்டு புதிய வனங்கள் உருவாக்கப்படும். காடுகளில் மரங்களை வெட்டுவது தடை செய்யப்படும்.

*விவசாய விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடை செய்வோம். விவசாய விளைநிலங்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

*தேர்தல் சீர்திருத்தச் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். கட்சி சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் முறை, மாற்றி அமைக்கப்படும். தேர்தல் பிரசார செலவுகள் அனைத்தையும் தேர்தல் கமிஷனே ஏற்றுக்கொள்ளும்.

*ஓட்டுக்கு பணம் வாங்குவது ,பணம் கொடுப்பது இரண்டும் குற்றமாக கருதப்பட்டு தண்டனைகள் வழங்கப்படும். ஆன்லைன் மூலமாக வாக்களிக்கும் முறை ஏற்படுத்தப்படும். 100 % வாக்களிக் கவேண்டும்; வாக்களிக்காதவர்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும். கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறை பிரதிநிதித்துவம் உருவாக்கப்படும்.

*சட்டமன்ற மேலவை உருவாக்கப்படும். அந்த அவை, பட்டதாரிகள், அறிஞர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த தகுதி பெற்றவர்கள், ஆன்மீகவாதிகள் ஆகியோர் இடம் பெறும் வகையில் உருவாக்கப்படும்.

*கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு நிகழ்ச்சிகளான பிப்ரவரி 14 வேலன்டைன் டே கொண்டாட்டம் மற்றும் ஜனவரி 1 ஆங்கில கிறிஸ்தவ புத்தாண்டு மது விருந்து கொண்டாட்டங்கள் தடை செய்யப்படும். மே 1 தொழிலாளர் தினம் என்பதை மாற்றி அமைத்து, விஸ்வகர்மா ஜெயந்தி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்படும். நவம்பர் 14 நேரு பிறந்தநாள் குழந்தைகள் தினம் என்பதை மாற்றி அமைத்து, கிருஷ்ணஜெயந்தி குழந்தைகள் தினமாக மாற்றி அமைக்கப்படும்.

*சென்னை மெரினா கடற்கரைக்கு தமிழர் கடற்கரை என்று பெயர் சூட்டப்படும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வள்ளுவன் கோட்டையாக மாற்றப்படும். தமிழகம் முழுக்க உள்ள ப் பெயர்கள் தமிழ்ப்படுத்தப்படும். திருமுறைகள், பிரபந்தங்கள் உள்ளிட்ட தமிழ் வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி திருக்கோயில்களின் பெயர்கள் எழுதப்படும். தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றி தமிழகம் என்று குறிப்பிடப்படும்.

*லவ் ஜிஹாத், ரோமியோ ஜிஹாத் உள்ளிட்ட நாடகக் காதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட மாட்டாது. இந்து திருமண பதிவு சட்டங்களில் பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி சட்டத்திருத்தங்கள் மாற்றியமைக்கப்படும். திருமணத்திற்காக மதமாற்றம் என்பது மோசமானதாகும். இவை தடை செய்யப்படும்.

*திரைப்படத் துறைக்கு சென்சார் போர்டு இருப்பது போல சின்னத்திரை என்றழைக்கப்படும் தொலைக்காட்சிகளுக்கும், ஓ.டி டி. பிளாட்பார்மில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கும், திரைப்படங்களுக்கும் சென்சார் செய்வது கட்டாயமாக்கப்படும்.

*இலங்கைத் தமிழர்களுக்கு அகதிகள் முகாம் மூடப்பட்டு, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இலங்கை இந்துத் தமிழர்களின் நலன் காக்க இலங்கையில் இந்து தமிழ் ஈழம் மலர்ந்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

*தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி குறித்து அவதூறு பரப்பி வரும் கிறிஸ்தவ என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் தடை செய்யப்படும்.

*தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் வண்ணம் வெளிநாட்டு சதியின் துணையோடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கின்றார்கள்.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் காரணமாக தாமிரத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்திட, தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேற வழிவகை செய்யப்படும்.

*தமிழகத்தில் வெகுவேகமாக இந்துத் தமிழர்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களின் ஜனத்தொகை குறைந்து சிறுபான்மை ஆகிவிட்டோம். கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்தவப் பெரும்பான்மை மாவட்டமாக மாறிவிட்டது. இதேபோல மேல்விசாரம், கீழ்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மை ஆகிவிட்ட காரணத்தினால் இந்துக்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர்.
இந்துக்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் இந்து தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே இந்து தமிழர்களின் ஜனத்தொகை குறைந்து விடாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*இந்துத் தமிழர்களுக்கு கல்வி நிறுவனங்கள், பள்ளி,கல்லூரிகள் துவங்குவதற்கும்,மருத்துவமனைகள் தொடங்குவதற்கும், கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படுவது போல சலுகைகள் வழங்கப்படும்.

*இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவு புனிதத் தீவாக அறிவிக்கப்படும். ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் இராமநாதபுரத்தில் செய்து கொடுக்கப்படும். 108 தீர்த்தங்களும் மீட்கப்படும். இராமாயணத்தோடு தொடர்புடைய இராமர் பாலம் பாதுகாக்கப்படும்.

  • திரு அண்ணாமலை உள்ளிட்ட பஞ்சபூதத் தலங்கள், பழனி உள்ளிட்ட ஆறுபடை வீடுகள், நவக்கிரக திருக்கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேசங்கள் ஆகிய உலகப் புகழ்பெற்ற கோயில்கள் உள்ள ஊர்களில் பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். புனித நகர அந்தஸ்து வழங்கப்பட்டு, மது -மாமிசக் கடைகள் அகற்றப்படும். திருக்கோயில்களில் நித்திய அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும்.

*தமிழகத்தில் சென்னை தலைநகரமாக இருந்தாலும் தலைமைச் செயலகம் சட்டசபை ஆகியவை செயல்பட கூடிய வகையில், திருச்சி ஒரு தலைநகராகவும், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை அலுவலகங்கள் அடங்கிய மதுரை ஒரு தலைநகராகவும், கோவை மாவட்டம் பொருளாதார, தொழில் மேம்பாட்டுத் தலைநகராகவும் உருவாக்கப்படும். பெருகி வரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு நிர்வாகம் எளிதில் மக்களைச் சென்றடையும் வகையில் பொள்ளாச்சி,கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

*பெட்ரோல்,டீசல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டுவரப்படும். மாற்று எரிபொருள்களான எத்தனால் கலந்த எரிபொருளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம் மூலம் இயங்கும், பேட்டரி மூலம் இயங்கும், சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

*பொதுப் போக்குவரத்து வாகனங்கள்- குறிப்பாக பேருந்துகள், வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த வலியுறுத்தப்படும். சீனாவில் உள்ளது போல மிதிவண்டிப் பயன்பாடுகள் அதிகரிக்கப்படும். அரசு அலுவலக வளாகங்கள், கல்வி வளாகங்கள் மிகப்பெரிய தனியார் மற்றும் அரசு தொழிற்சாலை வளாகங்களில் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கின்ற கொள்கை அமல்படுத்தப்படும்.

*கச்சத்தீவு மீட்கப் படுவதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கச்சதீவில் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்டவை நடத்தப்படும். கச்சத்தீவில் மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe