Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் பங்குனி உத்திரம்: ஊடல் உவகை கூடல் காட்டும் அரங்கன்!

பங்குனி உத்திரம்: ஊடல் உவகை கூடல் காட்டும் அரங்கன்!

IMG 20210327 WA0020

ஊடலும் கூடலும் இல்லாத இல்லறமோ வீடோ கிடையாது.

ஆனானப்பட்ட ஸ்ரீரங்கம் அரங்க பெருமாளே துணைவியுடன் ஊடலில் அடிவாங்கும்போது நாமல்லாம் எம்மாத்திரம்..!

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட ஊடலையும் கூடலையும் அழகாக சொல்கின்றன புராணங்கள்..!

ஒரு பங்குனி உத்திரநாளில் நடந்தேறிய இதைதான், பங்குனி உத்திரம் என்று சிறப்பாக ஸ்ரீரங்கம் கோவிலில் கொண்டாடு கின்றனர்..!

தர்மத்தின் தலைவனான அரங்கன் அரங்கமாநகரில் தர்ம அடி வாங்க போகிறார் பங்குனி உத்திரநாளில்..

அவரது தர்ம பத்தினி கையால்தான்!

உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக்கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார்..

அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலெட்சுமியின் அனுமதியின் பெயரில் தான்
உறையூர்நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்!

புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறார்.
ஆஹா நம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி ‘எங்கே நான் அணிவித்த மோதிரம், புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா?
எனக்கேட்டு நம்மை தொலைத்து விடுவாளே என்ன செய்வது ‘ என தவிக்கிறார்..

காவிரிக்குப்போய் பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்கள் எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறார்; தானும் தேடுகிறார்.

ஒன்றும் கிடைக்கவில்லை!

இந்தக்காட்சிகள் இன்று அம்மா மண்டபம் காவிரியில் காணக்கிடைக்கும

தப்புபண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான் அரங்கன்.

ஆகவே ஓசைப்படாமல், (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார்.

தாயாருக்கா தெரியாமல்போகும் அரங்கனின் தந்திரம்?

டமால் என வாசற்கதவை சாத்திவிடுகிறாள்.

அரங்கன் ஏமாற்றமாய் நகர்கிறான்.

மறுபடி கதவைத் திறந்து வைக்கிறாள் அரங்க நாயகி.

‘ஆஹா நல்ல சந்தர்ப்பம் வேகமாய் போய்விடுவோம்’ என அரங்கனின் பல்லக்கு அவசர அவசரமாய் வாசல் கதவருகில் வரவும் மறுபடி ‘டமால்’…

சரி இனி பல்லக்கில் மறைந்து கொண்டு விடுவோம். வெறும் பல்லக்குதான் வருகிறதென அவள் வழிவிடாமலா போய்விடுவாள்? என பல்லக்கில் தன்னை திரைத்துணியால் மறைத்துக்கொள்கிறான் அரங்கன்.

‘ம்ம் மெல்ல ஓசையின்றி உள்ளே செல்லுங்கள்’ என அடியார்களுக்கு ஆணையிடுகிறான்.

அவர்களும் பூனைப்பாதம் வைத்து நடந்து வாசற்கதவருகில்போகும்போது உள்ளிருந்து வெண்ணைக் கட்டிகள் வீசப்படுகின்றன. புஷ்பங்களையும் சிறு இலைகளையும் தன் அடியார்களைவிட்டு அரங்கனின் பல்லக்கு மீது அடிக்க சொல்கிறாள் அன்னை.

சண்டை துவங்குகிறது!

ப்ரணய கலகம் என்று பெயர்.

தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர்.

பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.

தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து
பின்னோக்கி நடக்கிறார்.

சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார்.

உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்…

படார்….உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது….

இப்படியே மூன்று முறை!

ஒரே கலாட்டா தான் !

கடைசியில் மட்டையடி ஆரம்பமாகிறது!

மிகவும் மெல்லிய வாழை மட்டை…அதை வைத்து ஒரு சாத்து!

மட்டையடி உற்சவம் என்பது இதுதான். பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும். விஷயம் நம்மாழ்வாருக்கு போகிறது .. சமாதானம் பண்ண நம்மாழ்வாருக்கு தூதுபோகிறது.

நம்மாழ்வாரின் பல்லக்கு, வீட்டு வாசலுக்கு வருகிறது.

அண்ணலின் பல்லக்கை ஏறிடுகிறார்.

பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!

அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?
வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே
இவருக்குத் தாளவில்லையே!

இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்? கம்சனின் வயிற்றில் நெருப்பென்ன நின்றான்?நம்மாழ்வார் தாயாரைப் பார்த்துக்கேட்கிறார்.

“அரங்கவல்லியே!நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்? அப்போ சரியென்று சொல்லிவிட்டு,
இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?

”பங்குனி உத்திரம், உன் பிறந்த நாள் வேறு. இன்று உன்னோடு இருக்க ஓடி வந்தவனை இப்படிக்காயப்படுத்தலாமா ..
அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டேன் என்று உன் கணவனைக் கரும்பென்னும்
தொண்டரடிப்பொடி ஆழ்வார்தான், இப்படி நீ அண்ணலை அலட்சியம் செய்வதைத்தாங்குவாரா? அடியார்கள் மனம் சற்று வாடினாலும் நீதான் பொறுத்துக் கொள்ள முடியுமா? ஆகையினால் மகளே, அரங்கனை மன்னித்து ஏற்று சேர்ந்திரு. உன் சேர்த்தி வைபவமான இன்றைய உத்திரத்திருநாளை வையகம் கொண்டாடட்டும்!” என்பதாக அருளினார்.

அன்னையின் மனம் சமாதானமாகிறது. அண்ணலை அன்னை நோக்க அவரும் அன்புடன் நோக்க, அங்கு ஒரு காதல் காவியம் அரங்கேறுகிறது.

பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.

அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி! கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்;

உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, ஏன் இவ்வளவு நாழி? என்று தான் கேட்பாள்.

அதனால் தான் பங்குனி உத்திர விழா அவள் வீட்டின் உள்ளேயே அந்த நாழி கேட்டான் வாசலிலேயே நடக்கிறது.

இவை அனைத்தும் ஶ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் கண் கொள்ளா காட்சி அல்லவா. அனைவரும் காணும் அழகு தரிசனம்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!

அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை.

கோவில்மட்டுமா. ஊரே கொண்டாடும் திருவிழா இது..

வீட்டுக்குவீடு செம்மண் கோலமிட்டு, சக்கரைப்பொங்கல் செய்து கொண்டாடும் அற்புத நாள் இந்த பங்குனி உத்தர திருநாள்…

இரவு முழுவதும் சேர்த்தி மண்டபத்தில் சேர்ந்து அருளிப்பிற்கு பிறகு, விடிந்ததும் அன்னையை அவள் சந்நிதிக்கு அனுப்பிவிட்டு அரங்கன் கோரதம் ஏறி வீதி உலா வருவார்….

வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டிய நிகழ்வு இது….

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version