ஏப்ரல் 22, 2021, 1:11 காலை வியாழக்கிழமை
More

  அரசாங்கத்தின் கையில் கோயில்களின் நிலம்: ஆச்சார்யாள் பதில்!

  abinav vidhya theerthar - 1

  சிஷ்யர்: இந்து மதம் என்றால் என்ன?

  ஆச்சாரியாள்: நாம் பயன்படுத்தும் இந்து மதம் என்ற சொல் பழக்கத்தின் காரணமாக ஏற்பட்டது. சனாதன தர்மம் என்று தான் நம் மதத்திற்கு பெயர் நமது வேதத்தில் சொல்லப்பட்டதை அனுசரித்து வாழ்பவன் என்று சொல்லுவோம்.

  சிஷ்யர்: வைதிகன் என்றால் யார் என்று சற்று விபரமாக ஆச்சாரியாள் கூறுவார்களா?

  ஆச்சார்யாள்: வேத மதத்தை அனுஸரிப்பவன் வைதிகன், அவன் ஸாங்கய மதத்தையோ, நையாயிக மதத்தையோ, இல்லை வைசேஷிகத்தையோ மீமாம்ஸகத்தையோ, வேதாந்தத்தையோ அனுஸரிக்கலாம். வேதத்தைப் பிரமாணமாக வைத்து அதில் சொன்னபடி நடக்க வேண்டும் என்றிருப்பவனே வைதிகன்

  சி : பல மக்கள் வேதங்களைப் படிக்கவில்லையே. அவர்களுக்கு வேதத் தில் என்ன சொல்லியிருக்கிறது என்பது தெரியாது. அப்படியிருக்கும் போது அவர்களை எல்லாம் ‘வைதிகர்கள்’ என்று எப்படி அழைப்பது?

  ஆ : அவர்கள் வேதத்தைப் படிக்காமல் இருக்கலாம். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டவற்றைப் பிரமாணம் என்று நம்பலாமே.

  சி : வேதத்தைப் பற்றிச் சிலர் அதிகமாகக் கேட்காமலே இருந்திருக்கலாமே! அவர்களையும் நாம் வைதிகர்களென்று கூறுவது எப்படி?

  ஆ : வேதத்தில் சொன்னபடி வாழ்கிறார்களா? இல்லையா?

  சி : அப்படியென்றால்?

  ஆ : சம்பிரதாயத்தின்படி சில செயல்களைச் செய்கிறார்கள் அல்லவா? அந்தச் சம்பிரதாயம் எவ்வாறு ஏற்பட்டது? ஒரு தர்ம – அதர்ம விவேகம் மூலமாக முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். ஆதலால், ஒருவன் நான் பொய்யைச் சொல்லக் கூடாது, பிறருக்குத் துன்பம் உண்டாக்கக் கூடாது. இவ்வாறுதான் வாழ வேண்டும்’ என்ற சில நியமங்களைக் கடைப்பிடித்து வரலாம். இதற்குக் காரணம், அவனுடைய தாய், தந்தையர் அவனுக்கு அவ்வாறு சொல்லிக் கொடுத்ததுதான். அவன் தந்தைக்கு, அவனது தாத்தா சொல்லிக் கொடுத்திருக்கலாம். இவ்வாறு கிரமமாக அப்பரம்பரையில் வந்துள்ளது. ஆகவே வேதத்தில் சொல்லப்பட்டவை நேராக இல்லாவிட்டாலும், மறைமுகமாகவாவது தெரிந்து கொள்ளப்பட்டுதான் வருகின்றது. ஆகவே, அவனையும் ‘வைதிகன் என்றே சொல்லலாம்.

  சி: வேதத்தில் ஒருவனுக்கு விச்வாசமேயில்லை என்றால் அவன் வைதிகனில்லையா?

  ஆச்சார்யாள்: எவனுக்கு நம் வேதத்தில் விச்வாசம் இருக்கிறதோ, அவனை வைதிகனென்று சொன்னோம். ஒருவனது பரம்பரை வேதத்தை ஒப்புக் கொண்டு வந்திருத்தாலும், இவன் ஒப்புக் கொள்ளாவிட்டால், இப்படிப்பட்டவனை நாம் பிரஷ்டன்” (தவறியவன்) என்று கூறுவோம். அவ்வளவுதான்,

  சிஷ்யர்: சிலர், “பொது மக்களுக்கென ஏற்படுத்தப்பட்ட கிணறு, குளம், பிரார்த்தனைக்கூடங்கள் முதலியவற்றைச் சிலர்தான் உபயோகப்படுத்தலாம். மற்ற சிலர் உபயோகப்படுத்தக் கூடாது” என்று கட்டுப்பாடு செய்கின்றனர். இதனால் எவ்வளவோ மக்களுக்குக்கஷ்டம் உண்டாகிறது. இது சரியாகுமா?

  ஆச்சார்யாள்: பொதுமக்களுக்கென இருக்கும் கிணறு, குளம், பிரார்த்தனைக் கூடங்கள் முதலியவற்றை இன்னார்த்தான் உபயோகிக்கலாம், இன்னார் உப யோகிக்கக் கூடாதென்று தடுக்கக் கூடாது. அதுபோன்று தடுப்பவர்களுக்குத் தண்டனை அளித்தாலும் தவறில்லை.

  சி. சிலர் ‘இவன் கீழ் ஜாதிக்குச் சேர்ந்தவன்’ என்று சொல்லிக் கொடுமைப் படுத்துகிறார்கள், இப்படிச் செய்வது ஆசார்யாளுக்குச் சிறிதளவாவது ‘சரி’ என்று படுகிறதா?

  ஆ : நான் முன்பே கூறியதுபோல் யாருக்கு யார் துன்பம் உண்டாக்கினாலும் அது தர்மம் ஆகாது. தன்னுடைய தர்மத்தை ஒவ்வொருவனும் அனுஸரிக்க வேண்டும். சாமான்ய தர்மமாகட்டும், விசேஷ தர்மமாகட்டும், மற்றொருவனுக்குத் துன்பம் செய்தால், தன் தர்மத்தையே விட்டது போலாகும். ஆகையால் ஒருவனும், இன்னொருவனுக்குத் துன்பமிழைக்கக் கூடாது. அப்படிச் செய்தானேயானால் அவன் தர்மத்தை மீறி நடக்கிறான் என்றுதான் பொருள்.

  சிஷ்யர்: சில இடங்களில் அரசாங்கம் கோயில்களின் நிலத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

  ஆ : நான் என்றும் அமைதியில்லாத போராட்டங்களை அனுமதிப்பதில்லை. அவ்வாறு செய்தது அநியாயம் என்று தோன்றினால், அதை நாம் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தலாம். அரசாங்கத்தில் இருப்பவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் புரியும்படி சொன்னாங்க புரிந்து கொள்ள மாட்டார்கள்? கோயிலுக்குரிய நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொண்டால், அங்கு நடைபெறும் பூஜை முதலியவற்றிற்கு இடையூறு வராமல் அந்த அரசாங்கம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். கோயில் நிலங்களை எடுத்துக் கொண்டால், இவ்விஷயங்கம் அதுவே கவனித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யுமாயின் அரசாங்கத்தின் இச்செயலுக்கு நம் ஆட்சேபணை இல்லை, நிலத்தை எடுத்துக் கொண்டும் கவனிக்காமல் இருக்கிறது என்றால், அரசாங்கம் பக்தர்கள் எழுப்பிய ஆலயத்திற்கு துரோகம் செய்வது போல் ஆகிவிடும், இவ்விஷயத்தை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தி நிலைமையைச் சரி செய்ய வேண்டுமே தவிர, அமைதியில்லாத போராட்டங்களில் ஈடுபட்டால் மற்ற மக்களுக்கும் கஷ்டம். அரசாங்கமும் சம்மதிப்பதற்கு பதிலாக நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

  சி : இந்துக்கள் பசுவைப் புனிதமான பிராணியாகக் கருதுகிறார்கள். ஆனாலும் நாட்டில் பசுக்கொலை நடந்து கொண்டு வருகிறது. இதற்காக போராட்டத்தில் ஈடுபடுதல் நல்லதா?

  ஆ : பசு புனிதமான பிராணி என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். மேலும் அஹிம்சையினால்தான் நாம் நன்மையடைகிறோம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். பசுவே சாந்தமான ஒரு பிராணி. நமக்கு பசு. பாலையும் தருகிறது. அதன் சாணிகூட உபயோகப்படுவதில்லையா? ஆகவே அதை வைத்துக் கொள்வது நன்மையே பயக்கும் ஆனால், பசுக்கொலையைத் தடுக்க அமைதியில்லாத போராட்டங்களில் ஈடுபாடு வைத்துக் கொள்வதால் எல்லாம் சரியாகப் போய் விடுமா? இல்லையே. ஒவ்வொருவனும் தன்னிடத்தில் உள்ள பசுவை தானே காப்பேன், வயதானாலும் காப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டாலே இப்பசுவதை நீங்கும். பால் கொடுக்கும் காலம் கழிந்து விட்டது. இதற்கு வயதாகி விட்டது என்று ஒருவன் விரட்டி விட்டால், அப்பசுவின் கதி என்னவாகும்? போராட்டத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும், பசுவைக் காப்பது என்னும் உறுதிமொழி எடுப்பதே மேல், “பசுவைக் காக்க வேண்டும், பசுவைக் காக்க வேண்டும்” என்று பலரும் கூக்குரல் எழுப்புகின்றனர். ஆனால் அது பெயரளவுக்குத்தான்.

  அதேசமயம் சிலர் வெளியில் ஒன்றும் கூக்குரல் எழுப்பாது, தாங்களே ஒரு கோசாலை போன்று அமைத்து பசுக்களை காத்து வருவதையும் நாம் பார்க்கலாம். இந்த இருவகை மனிதர்களிலும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வகையினரே சிறந்தவர்கள் என்று கூற வேண்டும். பசுவதை செய்வது கட்டாயமாக நீக்க வேண்டும். ஆனால், அதை நீக்கும் சரியான வழி எது என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்

  சிஷ்யர்: இந்து மதத்தில் ஒவ்வொருவனும் தான் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது தனக்காக மட்டும் செய்வது போலாகாதா? பிறருக்கு என்று ஒன்றும் செய்வது போலில்லையே. இதுவே கிறிஸ்துவ மதத்தில் மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் ஆசார்யாளின் கருத்து என்ன?

  ஆச்சார்யாள்: அப்படிச் சொல்வது தவறு என்பதே என் கருத்து, நாம் நம் மோஷத்திற்கு முயற்சி செய்வது எப்படி? மனதைத் தூய்மையாக்கிய பிறகு அந்த நிலையை அடையலாம். மனதைத் தூய்மைப்படுத்தக் கருணை மிகவும் தேவை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால் கருணை இருந்தால், மனதைச் சுத்தமாக்கிக் கொண்டு தியானத்தைப் பெறலாம். கருணை என்றால் மற்றவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு சகிக்கா மல் இருப்பதுதானே? ஆகையால், இந்து மதத்தில் மற்றவன் விஷயத்தில் கருணையே காட்டச் சொல்லவில்லை என்று கூறுவது மிகவும் தவறு. நாம் அஹங்காரத்தை விட்டுவிட வேண்டுமென்றுதான் நமது சாஸ்திரம் எப்போதும் கூறுகிறது, அஹங்காரம் என்பது உடல், மனம் – இவைகளில் நான் என்ற எண்ணம். அஹங்காரத்தைப் போக்குவது தானே எல்லா மதங்களிலும் கூறப்பட்டுள்ளது? இதைப் போக்குவதற்கு கருணை தேவைதானே ஆகவே இந்து மதம் மற்றவர்களுக்கும் சேவை செய்யச் சொல்லவில்லை என்று சொல்வது தவறு. இங்கும் கருணைக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பகவானுடைய அவதாரங்களைப் பற்றி நம்முடைய இந்து மதத்தில் இருக்கிறது. பகவான் எதற்காக அவதாரம் எடுத்துக் கொண்டான்? அவனுக்கு ஏதாவது தேவையா இல்லையே. அவன் மற்றவர்களின் நன்மைக்காகத்தான், அவதாரங்களை எடுத்துக் கொண்டான். அவனையே நாம் நமது லக்ஷ்யயபுருஷனாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் காட்டிய வழியில் போவதையே லக்ஷியமாகக் கருதுகிறோம். கீதையைப் பாருங்கள்

  அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச ! நிர்மமோ நிரஹங்கார: ஸமது: கஸுக: க்ஷமீ !!

  என்ற சுலோகத்தில் ‘எவன் விஷயத்திலும் வேற்றுமை இருக்கம் கூடாது. கருணை இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருக்கிறது. நம்முடைய பிரார்த்தனையும் “லோகா: ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து” (உலகங்களில் அனைவரும் சுகமாக வாழட்டும்) என்றல்லவா இருக்கிறது? எதிரி, வேறு மதத்திற்குச் சேர்ந்தவன், வேண்டாதவன் என்ற வேறுபாடே கிடையாது, எல்லோரின் நன்மைக்காகவே நமது பிரார்த்தனை இருக்கிறது.

  ஒரு ஞானியானவன் சில சமயங்களில் பரோபகாரம் செய்யவில்லை என்றால், அவன் ஆன்மீக நிலையிலேயே இருக்கிறான். அவனுக்கு உலகம் என்பதே உண்மையில் இல்லை. அவன் உலகத்தை மீறிச் சென்றவன், அப்படிப்பட்டவனுக்கு நியமமே இல்லை. ஆனாலும் ஞானிகள் சாமான்யமாகக் கருணையே வடிவமாக இருப்பார்கள் ஞானிகளில் சிலர் தம்முடைய உடல் மூலமாகப் பரோபகாரம் செய்ய வில்லையே என்றால், அவர்கள் இவ்வுலகத்தில் இருப்பதன் மூலமே, உலகிற்கு நன்மை பயக்கிறார்கள். உடல் சேவை ஒன்று மட்டும்தான் சேவையா? ஆகவே ஞானிகளும் பிறர் நலங்கருதியே இருக்கிறார்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »