ஏப்ரல் 20, 2021, 9:48 காலை செவ்வாய்க்கிழமை
More

  ஆட்சியைத் தீர்மானிக்கும் அரசியல் மார்கெட்டிங் வியாபாரம்!

  90 களில் நடந்த தேர்தல்களில் லவலேசம் பிறந்த இந்த மேட்டர் லகலகலகவென்று வளர்ந்து வரும் தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து லம்ப்பாக பக்த கோடிகளுக்கு

  ipac - 1

  கடந்த 90 களில் நடந்த தேர்தல்களில் லவலேசம் பிறந்த இந்த மேட்டர் லகலகலகவென்று வளர்ந்து வரும் தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து லம்ப்பாக பக்த கோடிகளுக்கு காட்சியளிக்கப்போகிறது.

  அரசியல் மார்க்கெட்டிங் (Political marketing) உலக தேர்தல் களம் எங்கும் பெருகியிருக்கிறது. மார்க்கெட்டிங்கில் மற்ற விஷயங்களைப் போல் இதுவும் அமெரிக்காவில் தொடங்கியதுதான். 1953-ம் ஆண்டு நடந்த அந்நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஒன்றில்தான் அரசியல் மார்க்கெட்டிங்குக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது. அந்தத் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் ’ட்வைட் ஐசன்ஹவர்’ போட்டியிட்டார். இவர் லேசுபட்டவர் அல்ல. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படையின் தளபதியாக விளங்கி வெற்றி வாகை சூடியவர்.

  தேர்தலில் வெற்றி பெற இது மட்டும் போதாது என்று புரிந்துகொண்ட இவர், விளம்பர விற்பன்னர் ‘ராஸர் ரீவ்ஸ்’ என்பவரது உதவியை நாடினார். ரீவ்ஸ் விளம்பர வித்தைகளைக் கரைத்துக் குடித்தவர். விற்கும் பொருளுக்கு ஒரு தனித்தன்மை (Unique selling propoisition) வேண்டும், அதை விளம்பரங்கள் பிரதிபலிக்கவேண்டும் என்ற சித்தாந்தத்தை படைத்தவர். ஜனாதிபதி வேட்பாளரைக்கூட ஜரிகைவேஷ்டி, ஜமக்காளம் போல் ஜாலியாய் பிராண்ட் செய்து விற்க முடியும் என்று நம்பும் ஜகஜ்ஜால கில்லாடி!

  தேர்தல் என்ற மார்க்கெட்டில் மக்கள்தான் வாடிக்கையாளர்கள், போட்டியிடும் கட்சிகள்தான் பிராண்டுகள், வேட்பாளர்கள்தான் போட்டியாளர்கள். வெற்றி பெற விழையும் வேட்பாளர் தன் தனித்தன்மையை தெளிவாக்கும் விதத்தில் மார்க்கெட்டிங் செய்து டீவியில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று ரீவ்ஸ் விளக்க ஐசன்ஹவருக்கோ பயம். டீவி விளம்பரமெல்லாம் ஜனநாயகத்தில் சரிவருமா, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, இப்படி செய்வது நம்மை ரிவர்ஸில் தாக்குமா என்று கவலைப்பட்டார். அவருக்கு ரீவ்ஸ் மார்க்கெட்டிங் சித்தாந்தத்தை கீதோபதேசமாய் விளக்கி டீவி என்பது ஜனநாயகத்தின் குரல், அரசியலின் ஆதாரம் என்று சமாதானப்படுத்தி ‘அமெரிக்காவிற்கு விடையளிக்கிறார் ஐசன்ஹவர்’ என்ற வாசகத்தோடு விளம்பரப்படுத்தினார்.

  என்ன ஆனது? ஐசன்ஹவர் என்ற பிராண்ட் வாடிக்கையாளர் என்ற மக்கள் கவனத்தை ஈர்க்க ‘ஆஹா, இவரல்லவா நம்மை ஆள வேண்டிய அருட்பெருஞ் சோதி’ என்று அவர்கள் ஆரவாரமாக ஆதரவு கரம் நீட்ட, பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்காவின் முப்பத்தி நான் காவது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் கோலாகலமாக குடியேறினார் ட்வைட் ஐசன்ஹவர். உலகத் தேர்தல்களில் உன்னத சக்தியாக மாறப் போகும் அரசியல் மார்க்கெட்டிங் என்ற சித்தாந்தம் அமோகமாக அரங்கேறியது.

  தேர்தலில் வெற்றி பெறுவதை மூச்சு விடுவதைவிட இன்றியமையாத பணியாக நினைக்கும் இந்திய அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட இயலை சும்மா விடுவார்களா. ஐசன்ஹவருக்கு ஒரு ரீவ்ஸ் கிடைத்தது போல் நம் கட்சி வெற்றி பெறச் செய்ய ஒருவர் கிடைக்கமாட்டாரா என்று இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவும் ஆலோசகர் முதல் விளம்பர கம்பெனிகள் வரை தேடி அலைகின்றன. ஓப்பனாய் செய்தால் வில்லங்கமாய் முடியும் என்று ரகசியமாய் தொடங்கிய இந்த விஷயம், இன்று விவாதப் பொருளாய் மாறும் அளவிற்கு பெப்பரப்பே என்று விரிந்து வளர்ந்திருக்கிறது. சேவை செய்ய அரசியலுக்கு வருகிறேன் என்று வாய் கிழியச் சொல்பவர்கள் முதல் என் பேரப் பிள்ளைகளுக்கும் சேர்த்து சம்பாதிக்க வருகிறேன் என்பதை பட்டவர்தனமாக்கும் அரசியல்வாதிகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல.

  இன்னுமும்கூட ஒன்று செய்யலாம். நம் நாட்டு எம்பிஏ கோர்ஸ்களில் அரசியல் மார்க்கெட்டிங்கை ஒரு பாடமாக சேர்த்து அதை முறையாக கற்றுக்கொடுக்கலாம். நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும். காலியாய் கிடக்கும் பல காலேஜ்களில் அட்மிஷன் அதிகமாகும். கட்சிகளோடு மக்களில் சிலரும் சம்பாதிப்பார்கள். இப்படி செய்வதால் நாட்டில் ஒரு வேளை தேனும் தினைமாவும் பெருக்கெடுத்து ஓடினாலும் ஓடலாம். யார் கண்டது.

  தேர்தல் வியாபாரம், வியாபார அரசியல், அடி முட்டாள்களையும் அரசியலில் தலைவர்களாக ஜோடிப்பது, நேர்மையற்றவர்களையும் தகுதியற்றவர்களையும் அரசியல் வியாபாரம் மூலமாக உயர்ந்த இடத்தில் நிறுவத்துவது என்ற நாட்டை பாழடிக்கும் நடவடிக்களைப் படிக்க கல்வி நிலையங்களில் எம்.பி.ஏ., போன்ற வகுப்புகளை ஆரம்பித்து நாட்டில் பொது வாழ்வையும், அரசியலையும் கேவலப்படுத்தி நாசப்படுத்துகின்ற படிப்பையும் இனி கல்வி நிலையங்களில் எதிர்காலத்தில் போதிப்பார்கள் என்ற கேவலமான நிலை உருவாகும்.

  தேர்தல் யுத்தி, தேர்தல் வியாபாரம், அரசியல் வியாபாரிகள், மார்க்கெட்டிங் குறித்த ஆய்வுகள் ஜனநாயகத்தை
  புதைக்க வருகிறது….

  வாழ்க மார்க்கெட்டிங். வளர்க ஜனநாயகம்!

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,)

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »