spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தியானத்தின் பயன்.. ஆச்சார்யாள் பதில்!

தியானத்தின் பயன்.. ஆச்சார்யாள் பதில்!

- Advertisement -

சிஷ்யன் : தியானமென்றால் என்ன?

ஆசார்யாள் : தியானம் என்றால் மனதை ஒருநிலைப்படுத்துவது பொருள். எப்போது மனம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துமே அது தியானம் எனப்படும்.

சி : தியானத்தின் முக்கியப் பயனென்ன?

ஆ : மனதை ஒருநிலைப்படுத்துவதில் பழக்கமிருந்தால், இறைவன் பக்கமே தன் மனதைச் செலுத்தி, அதைப் புனிதமாக்கி விடலாம். அதன் பிறகு குணமும், ஆகாரமும் இல்லாத ஆத்மாவின் பக்கம் அதைத் திருப்பிவிடலாம். இப்படிச் செய்வதன் மூலம், ஒருவன் தியானத்திலேயே மிக உயர்ந்த நிலையான நிர்விகல்ப ஸமாதியை அடைந்து அங்கு ஆத்ம தத்துவத்தின் அறிவையும் பெறலாம்.

சி : தியானம் செய்வது நன்மை பயப்பதானாலும் அதைப் பயிற்சி செய்வது மிகவும் கடினமாயிருப்பது ஏன்?

ஆ : வேறென்ன, அதை அடக்குவது கடினமாக இருப்பதே காரணம்

சி : மனதை எவ்வாறு அடக்குவது?

ஆ: ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதுபோல் அப்யாஸத்தினாலும், வைராக்யத்தினாலும் மனதை அடக்கலாம்.

சி: தியானத்திற்குத் தடைகளாக எவையெல்லாம் இருக்கின்றன?

ஆ: நீ. தியானம் செய்யும்போது உள்ள தடைகளைப் பற்றிக் கேட்கிறாயா? அல்லது மற்ற சமயங்களில் ஏற்படும் தடைகளைப் பற்றிக் கேட்கிறாயா?

சி : தியானம் செய்யும் வேளையில் ஒருவன் ஸமாதியை அடையவிடாமல் தடுக்கும் தடைகளைப் பற்றிக் கேட்கிறேன்.

ஆ: தடைகளில் முதலாவது விக்ஷேபம். அதாவது மனம் கண்ட திசைகளில் ஓடிக் கொண்டிருக்கும். இதுதான் முதல் தடை, இரண்டாவது என்னவென்றால், விக்ஷேபமில்லாவிட்டாலும், தூக்கம் போல் மனம் ஒருவித ஜடத்தன்மையை அடைவதாகும். இவ்வாறு இருப்பினும் அது மோசம்தான். தூக்கம்போல் ஜடத்தன்மை ஏற்பட்டால் ஒருவன் உத்தம நிலைமையை அடையமாட்டான். ஸகஷாயம் என்ற நிலை மூன்றாவது தடையாகும். அந்த நிலையில் விசேஷபமுமிருக்காது மேலும் மனம் ஜடமாகவும் இருக்காது. அங்கே ஒருவிதமான இன்பமி ருந்தாலும், ஆசையின் விதை நாசமடைவதில்லை. மேலும், அந்நிலை ஸமாதியைப் போலிருக்காது. இந்நிலையிலும் ஒருவன் கவனத்தோடு இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்துத்தான் கௌடபாதர்,

லயே ஸம்போதயேச்சித்தம் விகஷிப்தம் சமயேத்புன:
ஸகஷாயம் விஜானீயாத்ஸமப்ராப்தம் ந சாலயேத் ||

(தூக்கத்தில் மனம் இருந்தால், அதை எழுப்ப வேண்டும். பொருட்களில் விக்ஷேபம் அடைந்தால், அதை அமைதிப்படுத்த வேண்டும் ஆசையின் வேருடனிருந்தால் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் சமநிலையிலிருந்தால் அதை அசையாமல் விட்டுவிட வேண்டும்.) என்று கூறியிருக்கிறார்.

சி: விக்ஷேபத்திலிருந்து மனதை எப்படி அடக்குவது?

ஆ : நாம் எதை தியானம் செய்ய வேண்டுமோ அதன் மேலேயே மனதை மீண்டும் மீண்டும் திருப்ப வேண்டும். வைராக்யம் அதிகமாக ஆக இந்த விக்ஷேபம் குறைந்து கொண்டு வரும். தியானம் செய்யும் வேலையில் தியானம்தான் அவசியம் என்று பாவித்துச் செய்ய வேண்டும் தியானம் செய்யக்கூடிய உருவமோ, சப்தமோ உண்மையாகவே அங்கு இருக்கிறது என்று பாவனை செய்து கொண்டால், அது தியானத்திற்கு உதவியாக இருக்கும்.

சி : மனமானது ஜடமான நிலையை அடைந்து அதன் மூலம் பாதிக்கப்பட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆ : கவனித்துப் பார்த்தால், மனம் தற்போது ஜடமாகிக் கொண்டிருக்கிறது தூக்கத்தின் பக்கம் செல்கிறது என்று ஒருவன் தெரிந்து கொள்ளலாம். அப்படித் தெரியும் வேளையில், முயற்சி செய்து, மனம் தூக்கம் போல் இருப்பதைத் தவிர்க்கலாம். இதற்காக செய்கின்ற ஜபத்தை, இன்னும் தீவிரமாகச் செய்து கொண்டு வரலாம். அவ்வாறு செய்தால் மனம் மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பி விடும். என்ன செய்தாலும் மனம் ஜடத்தன்மையான லயத்திலேயே சென்று கொண்டிருந்தால், சற்று நேரம் எழுந்து நடந்து விட்டு மீண்டும் தியானத்திற்கு அமரலாம் சில சமயங்களில் மனதிற்குச் சற்று நேரம் ஓய்வு தேவைப்படும். இது போன்ற சமயங்களில் வலுக்கட்டாயமாக மனதை தியானத்திற்கு ஈடுபடுத்தக் கூடாது. சற்று நேரத்திற்குப் பிறகே தியானத்திற்கு அமர வேண்டும். இல்லாவிடில், மனதிற்குக் கஷ்டமேற்படும், இதற்காக சோம்பேறித்தனம் காரணமாக மனம் முக்கால்வாசி நேரங்களிலும் தியானத்தில் ஈடுபடுவதில்லை என்றால், அப்போது அதை அவசியம் ஈடுபடச் செய்து பழகிக்கொள்ள வேண்டும்

சி : தியானம் செய்யும்போது ஜபம் செய்வது தேவையா?

ஆ : ஸகுண உபாஸனை செய்யும்போது முதன் முதலில் ஓரளவுக்கு ஜபம் செய்வது தேவை என்றே சொல்லலாம். மனதை ஒருநிலைப்படுத்த ஜபம் பெரிதும் உதவுகிறது. மனமானது எப்போது தியானம் செய்யப்படும் உருவத்தில் ஒன்றி விட்டதோ அப்போது ஜபம் தானாகவே நின்று விடும். ஆகவே நாம் ஜபம் செய்வதை முயற்சியுடன் நிறுத்தத் தேவையில்லை

சி: ஓர் உருவத்தின் மேல் எவ்வாறு தியானம் செய்வது?

ஆ: தியானத்தைப் பற்றி ஒவ்வொருவனுக்கும் தனித்தனியாகத்தான் கூற வேண்டும். எல்லோருக்கும் ஒரே போல் நியமங்களைக் கூற முடியாது கேட்டதற்காக ஒரு முறையைச் சொல்கிறேன். ஒருவனது இஷ்ட தேவதையை அவன் தன் உள்ளத்தில் தாமரை மீது அமர்ந்திருப்பதாக தியானம் செய்து வரலாம். அந்த ரூபத்திலேயே அவன் கவனம் செலுத்துவது கடினமானால் முதலில் தனக்கு முன்பு, தன் இஷ்ட தேவதை யன் சித்திரத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படத்தையே நோக்கியவாறு சிறிது நேரம் ஜபம் செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பிறகு கண்களை மூடி, படத்திலுள்ள தேவதையை அங்கு பார்ப்பதாகத் தியானம் செய்ய முயல வேண்டும். சற்று நேரம் வரை மனம் அலையாமல் நிற்கலாம். ஆனால் மனம் அலைய ஆரம்பித்துவிட்டது என்றால் கண்களைத் திறந்து மீண்டும் அச்சித்திரத்தைப் பார்த்துக் கொள்ளலாம். பிறகு மீண்டும் கண்களை மூடி தியானம் செய்ய வேண் னடும். இதுபோல் முயற்சி செய்து கொண்டு போனால், தேவதையின் உருவம் படத்தைப் பார்க்காமலேயே மனதில் நின்றுவிடும். இங்கு நான் சொன்னது தியானத்தின் ஒரு முறை. இவ்வாறுதான் அனைவரும் செய்ய வேண்டுமென்று அர்த்தமில்லை. பதஞ்ஜலி மஹரிஷி தனது யோக ஸூத்ரத்தில்

யதாபிமதத்யானாத்வா

(எப்படிப் பிடிக்குமோ, அப்படித் தியானம் செய்து கொள்ளலாம்) என்றார். ஸகுண தியானம் மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. எந்த இஷ்ட தேவதையின் உருவத்தில் மனம் ஒன்றுமோ, அதிலேயே தியா னம் செய்யலாம், சப்தத்தின் மீதும் தியானம் செய்வது மற்றொரு வகை குருவானவர், தனது சிஷ்யனுக்கு எது சரி என்று தீர்மானித்து அதற்கேற்ப உபதேசிப்பார்.

சி : உடல் நலம் சரியில்லாத சமயங்களில் தியானம் செய்தல் தவறா?

ஆ : அது உடல்நிலையைப் பொருத்து இருக்கிறது. தியானத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களால் எப்போது வேண்டுமானாலும், தியானத்தைச் செய்ய முடியும். ஆனால், அதைப் பயிற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளவர்கள், தமது உடல் நிலையைப் பொருத்து தியானம் செய்யலாம். தியானம் எவ்வளவு நேரம் செய்கிறோமோ, அவ்வளவுக்கு அது நல்லது. அதற்காக மனத்திற்குச் சிரமம் உண்டா வகையில் செய்யக் கூடாது. தியானம் செய்வதில் நிபுணர்களாய் இருப் பவர்கள், மணிக்கணக்காகச் செய்யலாம். ஆனால் தியானமே வராதவன் தானும் ஆறு மணி நேரம் உட்காருகிறேன் என்றால், அது கடைசியில் அவனுக்கு வெறுப்பைத்தான் தரும். மேலும் தலைவலியோ வேறு வலியோ உண்டாக்கக்கூடும்

சி : நிர்குண தியானத்தை எவ்வாறு செய்வது?

ஆ : நிர்குண தியானம் செய்யும் பொழுது உருவத்தையோ சப்தத்தையோ உபயோகப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆன்மீக வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களுக்கு நிர்குண தியானம் மிகவும் பொருத்தமானது. எதற்கு உருவமும் ஸகுணமும் பயன்படுத்துவதில்லையோ அதுவே நிர்குண தியானம் எனப்படும், நிர்குண தியானம் தியானத்திலேயே உயர்ந்த நிலையான நிர்விகல்ப ஸமாதிக்குக் கொண்டுவிடும். எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இங்கேயும் ஒருவிதமாகச் சொல்ல முடியாது. இதற்கு ஒரு முறை என்னவென்றால் முதலில் மனதில் தோன்றும் எண்ணங்களை ‘எனக்கும் இந்த எண்ணங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை ‘ என்று அவைகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருப்பது. இதன் மூலம் மன எண்ணங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற பாவனை ஏற்படும். இப்படி ஏற்பட்டால், மனதில் தோன்றும் எண்ணங்கள் தாமாகவே அடங்கிவிடும், மற்றொரு க்ரமம் என்னவென்றால், தான் ஸச்சிதானந்தவடிவான ஆத்மா என்று கருதுவது. இன்னொரு க்ரமம் என்னவென்றால், வலுக்கட்டாயமாக அனைத்து எண்ணங்களையும் அடக்கி வைத்து தான் ஸச்சிதானந்த வடிவான ஆத்மா என்று எண்ணுவது. இது போன்ற நிர்குண தியானம் தொடங்கும் காலத்தில் உடலின் ஞாபகம் போய்விடும். பிறகு எண்ணங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று எண்ணங்களை அடக்கிவிட்டால் உத்தமமான நிலையை
அடையலாம்

சி: சில சமயம் தியானம் செய்யும்போது உடலில் துடிப்பு ஏற்படுகிறது இதற்குக் காரணமென்ன?

ஆ: சாமான்யமாக உடலில் பலமில்லை என்று அர்த்தம், இல்லாவிட்டால் உடலில் விசேஷமான சக்திகளின் அம்சம் தெரிகிறது எனப் பொருள் குண்டலினி சக்தியின் ப்ரபாவம் என்ற காரணமாகவும் இருக்கலாம் ஆதலால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தியானத்தைச் செய்து கொண்டே போகலாம்

சி : தியானம் எம்மாதிரி இடத்தில் செய்ய வேண்டும்?

ஆ : எங்கு சப்தங்கள் இல்லையோ அங்கு தியானம் செய்ய வேண்டும்

சி: ஏதாவது ஆஸனத்தில் அமர வேண்டும் என்ற தேவையிருக்கிறதா?

ஆ : ஆஸனத்தில் அமருவது நல்லது என்றே கூறலாம். கிருஷ்ண பகவானே கீதையில்

சைலாஜின குசோத்தரம்

எனக் கூறுகிறார். தர்ப்பையாலான ஆஸனத்தின் மேல் மான்தோலை விரித்து அதன்மேல் துணியை விரித்து இவ்வாறு செய்யப்பட்ட ஆஸனத்தில் அமருதல் நல்லது. தியானம் செய்யும்பொழுது முதுகும், கழுத்தும் நிமிர்ந்து இருக்க வேண்டும். அதை மட்டும் கவனித்துக் கொள்ள வேண்டும்

சி பலர் சிரத்தையுடன் தியானத்தை விரும்புகிறார்கள். ஆனாலும், அவர்களால் தியானத்தை ஒழுங்காகச் செய்ய முடிவதில்லையே?

அவர்கள் தியானத்தை மிகவும் நேசிக்கிறார்கள் என்று தோன்றலாம். ஆனால், உண்மையிலேயே அப்படித்தானா? முக்கால்வாசிப் பேர்களின் விஷயத்தில் ‘இல்லை’ என்பதே பதிலாகும். அவர்களின் வாழ்க்கையைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் தியானத்திற்கு முக்கியமான ஸ்தானம் அளிக்கப்படுவதில்லை என்று தெரியும். அவர்களின் வாழ்வில் தூக்கம், உணவு, அலுவலகம், தேர்வு போன்றவைகளுக்கு தியானத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அலுவலகத்திற்கு நேரமாகி விட்டால் தியானத்தின் கதி அவ்வளவுதான், மேலும், அவர்கள் தியானத்திற்கென அமரும்போதும், “இப்போது எனக்கு வேறோர் எண்ணமும் தேவையில்லை. லோகத்தில் என் உட னலுக்குச் சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும், சம்பந்தப்படாததாய் இருந்ததாலும், எது வேண்டுமானாலும் நடக்கட்டும். எனக்கு இப்போது தியானம்தான் தேவை’ என்ற எண்ணத்துடன் அமருவதில்லை. இதைத் தவிர முற்பிறவியில் தியானத்தை அதிகமாகச் செய்திருக்காதவர்களுக்கு இப்பிறவியில் தியானம் கடினமாக இருக்கிறது. அதேபோல் முற்பிறவியில் தியானத்தை நன்கு பயிற்சி செய்தவர்களுக்குத் தற்போது தியானம் வரும். முதல் முறை ஆற்றில் இறங்கும் ஒருவனுக்கு நீச்சலடிப்பது மிகவும் கடினம், ஆனால் பழகப் பழக அது சகஜமாகி விடும். அதே போல் தான் இங்கும்.

சி : தியானத்திற்கு அமரும்போது ‘இப்போது நான் எந்த ஒரு லௌகீக கவலைக்கும், யோசனைக்கும் இடம் கொடுக்கப் போவதில்லை என்று மனதில் தீர்மானத்துடன் இருப்பது தியானத்திற்கு உதவுமா?

ஆ : ஆம், உதவும்

சி: தீவிரமான வைராக்யமுள்ளவனுக்கு லௌக்க யோசனைகளை மறப்பது சுலபமாக இருக்க வேண்டுமல்லவா? சிலருக்குத் தீவிரமான வைராக்யமிருப்பதைக் காண்கிறோம். ஆனால், அதேசமயம் அவர்களால்கூட நன்கு தியானம் செய்ய முடிவதில்லையே! இதற்கு என்ன காரணம் என்று ஆச்சார்யாள் தெளிவுப்படுத்துவார்ளா?

ஆ: சாமான்யமாக, வைராக்யம் அதிகமாகப் பெற்றிருப்பவர்களுக்கு தியானம் சுலபமாகவே வரும். சிலபேர், தாம் முற்பிறவிகளில் நன்கு தியானத்தைப் பயிற்சி செய்யாத காரணத்தினால், தற்போது தியானம் செய்ய முடிவதில்லை என்று கூறலாம்.

சி-: தியானம் செய்யும் முயற்சியில் ஒருவன் மீண்டும் மீண்டும் தோல்வியையே அடைந்து கொண்டிருந்தால், அவனுக்கு உற்சாகம் போய் வெறுப்பு ஏற்படாதா?

ஆ: ஒருவன் ஆன்மீக ஸாதனைகளின் போது வெறுப்பு உண்டாக இடங்கொடுப்பது தனது வழியில் தானே தடைக்கல்லாக நிற்பதைப் போலாகும். மிகவும் அல்பமான ஒரு பட்டத்தைப் பெறுவதற்காக, பல வருடங்கள் கல்லூரி முதலியவைகளுக்குச் சென்று படிக்க வேண்டி வருகிறது சாதாரணமான ஒரு லௌகீக விஷயத்திலேயே பல வருடங்களுக்கு முயற்சி தேவைப்படுகிறதென்றால், மிகவும் ஸூக்ஷ்க்மமாகவும், உத்தமமாகவும் இருக்கும் தியானத்தைப் பெறுவதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளைப்பற்றி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? பட்டம் பெறுவதற்காக செய்யும் முயற்சிகளில் ஒரு சிறு பகுதியைக்கூட தியானத்திற்காக மக்கள் செய்யாவிட்டாலும், அதை செய்யும்போது வெறுப்பு வேறு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இது எவ்வளவுக்கு நியாயம் என்று நீயே பார்த்துக் கொள்ளலாம். பதஞ்சலி மஹரிஷி தமது யோக ஸூத்ரங்களில்,

ஸது தீர்ககாலநைரந்தர்ய ஸத்காராஸேவிதோ த்ருடபூமி:

நீண்ட காலம் விடாமல் சிரத்தையுடன் முயற்சி செய்தால், அந்த உத்தமமானதும் ஸ்திரமானதுமான நிலையைப் பெறலாம்’ என்று கூறியிருக்கிறார். சில நாட்களிலேயோ சில மாதங்களிலேயோ ஒருவன் தியானம் வரப்பெறலாம் என்றால் பதஞ்சலி இதுபோன்று கூறியிருக்கமாட்டார்.

சி: நன்கு தியானம் வரப்பெறுபவர்களுக்கும் சில கஷ்டங்கள் இருக்கிறதே. அவர்களுக்குச் சில காலங்களில் தியானம் மிகவும் விசேஷமாக வருகிறது. சில சமயங்களில் அவ்வளவு நன்றாக வருவதில்லை, என்று கூறுகிறார்கள். எப்போதும் நன்கு தியானம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆ : உடல் நலமின்மை, உணவு நிலங்கள் இல்லாமல் இருப்பது. சோம்பேறித்தனம், கவலைகள், ஆசைகள் முதலியவை தியானத்திற்குத் தடைகளாக இருக்கின்றன. ஆகவே, இத்தடைகளை நாமே முயன்று நீக்கிக் கொண்டால், தியானம் நன்கு வரும். சிறிது காலத்திற்குச் சரியாக வரவில்லையென்றால், பிரச்னையை மறந்துவிட்டு முயற்சிகளை மேலும் மேற்கொள்ளலாம். ஆனால், ஏதாவது ஒரு விசேஷமான தடையினால்தான் தியானம் கெடுகிறதென்றால், அதை குருவின் உபதேசத்தின்படி முயற்சி செய்து, நீக்கிக்கொள்ள வேண்டும். தினமும், ஸுர்யோதயத்திற்கு முன்பும், ஸூர்யாஸ்தமனத்திற்குப் பின்பும் மனம் இயற்கையாகவே அமைதியுடன் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அம்மாதிரி சமயங்களில் தியானம் செய்வது நல்லது.

சி : காமங்களை அடக்குவதற்கு தியானம் மட்டும் போதுமா?

ஆ : தியானத்தின் உத்தமமான நிலையான ஸமாதி எவர்களுக்கு வருகிறதோ அவர்கள் வெறும் தியானம் மூலமாகவே ஆசைகளை அழித்து விடலாம். ஆனால் மற்றவர்களுக்கு தியானம் ஒன்று மட்டும் போதாது தியானம் செய்யாத நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் லௌகீக ஸம்ஸ்காரங்கள் ஏற்படுவதால், இவை தியானத்தின்போது உண்டாகும் ஸம்ஸ்காரங்களை மறைத்து விடுகின்றன. ஆகவே அந்த சமயங்களிலும் ‘பொருட்களிலிருந்து இன்பம் கிடைக்காது’ என்று தோஷ திருஷ்டி கொண்டு நோக்குவது வைராக்யத்தை மிகவும் உண்டாக்குகிறது. தினந்தோறும் சாஸ்திரப் புத்தகங்களைப் படித்து, அவைகளில் கூறப்பட்ட கருத்துக்களைச் சிந்திப்பது காமங்களை வெல்வதற்கு மிக வும் உதவியளிக்கிறது, மஹான்களின் ஸஹவாசமும் ஆசையை வெல்வதற்கு மிகவும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe