spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்எது தர்மம்..? ஆச்சார்யாள் பதில்!

எது தர்மம்..? ஆச்சார்யாள் பதில்!

- Advertisement -
abinav vidhya theerthar
abinav vidhya theerthar

சிஷ்யன் : எது தர்மம் எது அதர்மம் என்று எவ்வாறு தீர்மானம் செய்வது

ஆசார்யாள் : சாஸ்திரங்களில் ‘இதைச் செய்’ என்று சொன்னால் அது தர்மம் ஆகும். இதைச் செய்ய வேண்டாம்’ என்று சொன்னால், அது அதர்மமாகும். தர்மத்தை எவ்வாறு தீர்மானம் செய்ய வேண்டும் என்பதற்கு மனு

வேத: ஸ்ம்ருதி: ஸதாசார: ஸ்வஸ்ய ச ப்ரியமாத்மன:
ஏதச்சதுர்விதம் ப்ராஹு: ஸாக்ஷாத்தர்மஸ்ய லக்ஷணம் ||

(வேதம், வேதத்தைக் கொண்டு இயற்றப்பட்ட ஸ்ம்ருதி புத்தகங்கள் மஹான்களின் ஆசாரம், நம் மனச்சாட்சியின் திருப்தி ஆகிய இவை நான்கும் தர்மத்தின் லக்ஷணமாக இருக்கின்றன) என்று கூறுகிறார்.

அனைத்துத் தர்மத்திற்கும் மூலகாரணம் வேதமாகும். வேதத்தின் ஆதாரமாக ஸ்ம்ருதி இருப்பதால் அதுவும் பிரமாணமாகும், இதை அனுஸரித்து வந்திருக்கும், பரம்பரை ஆசாரமும் பிரமாணமாகும். இது எல்லாவற்றையும் தவிர நம் ஆத்ம திருப்தியும் பிரமாணமாகும் இவையே எது தர்மம் எது அதர்மம் என்று தீர்மானம் செய்ய, நமக்கு உதவும் பிரமாணங்கள்.

சி : ஒரே விஷயம், ஒரு சமயத்தில் தர்மமாகவும், மற்றொரு சமயத்தில் அதர்மமாகவும் இருக்கிறது. இம்மாதிரி சமயங்களில் எப்படித் தீர்மானம் செய்வது?

ஆ : உண்மைதான். சில சமயங்களில் ஒரே செயல் தர்மமாகவும் இன்னொரு சமயத்தில் அதர்மமாகவும் தோன்றலாம். இவையெல்லாம் நாம் தீர்மானம் செய்ய, சாஸ்திரங்களையே நாட வேண்டும். பின் எது சரியென்று தோன்றுகிறதோ, அவ்வாறு செய்ய வேண்டும். ஒரு வீட்டில் திருடிய ஒருவன், கைது செய்யப்பட்டால் ‘நான் ஒரு பணக்காரன் வீட்டிலிருந்துதான் திருடினேன். அதனால் அவனுக்கும் ஒருவிதமான துன்பமுமிருக்காது. அதிகமான நஷ்டமுமில்லை . எனக்கோ அதனால் உணவு கிடைக்க வாய்ப்பும் கிடைத்தது. ஆதலால் இவ்வாறு திருடியதால் என்ன தவறு’ என்று வாதாடலாம். இதை நீதிபதி ஏற்றுக் கொள்வாரா? மாட்டார். ஏனென்றால், அது சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டதற்கு நேர்மாறானது. அது சட்டப் புத்தகத்தின்படி தவறு. ஆதலால் அவனுக்குத் தண்டனை அளிக்கத்தான் செய்வார். அதேபோல், நம் வேதத்தில் எது சரி என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அதுதான் தர்மமாகும். எது தவறென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறதோ அது அதர்மமா கும். நாமே தீர்மானம் செய்துகொள்ள நமக்கு அதிகாரம் இல்லை.
ஏனென்றால், நமக்கு அந்த அளவிற்கு ஞானமில்லை. ‘அடுத்த
பிறவியில் இதைச் செய்தால், அது சுகம் கொடுக்கும், இது துன்பத்தை விளைவிக்கும்’ என்ற அறிவு நமக்கு இல்லாததால் நாம் தர்ம, அதர்மம் பற்றி தீர்மானம் செய்ய முடியாது.

சி : ஒருவன் தன்னையே அறியாமல் ஒரு தவறு செய்தால் அவன் அதற்கும் பொறுப்பாளியா?

ஆ : பொறுப்பாளி என்றால் எந்த வகையில்?

சி : அவன் அதன் காரணமாக பாவத்தை அடைவானா?

ஆ. அவனுக்கு அதைச் செய்யும்போது தவறென்று தெரியாமலிருந்தால் அவ்வளவு பாவம் கிடையாது. இவ்வாறு நாம் தெரியாமல் தவறு செய்வதெல்லாம் நாம் செய்யும் ஸந்தியாவந்தனத்தின் மூலமாகவே நாசமடைகிறது. அதற்கொன்றும் விசேஷமாகப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் ஒருவனுக்கு ஒன்று தவறு என்று தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருந்தும் வேண்டுமென்றே தெரிந்து கொள்ளாமல் இருந்தானானால், இதுபோன்று பாவமில்லை என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாகாது. ஒருவன் ஓரளவிற்கு இது சரி, இது தவறு எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். தன்னையறியாமல் ஏதாவது தவறு செய்தால், இறைவனைப் பிரார்த்தித்தால் அவன் மன்னித்து விடுவான் என்று வைத்துக் கொள்ளலாம்

எல்லோருக்கும் சமமாக தர்மங்கள் இருந்தால் சௌகர்யமாக இருக்காதா? ஒருவனுக்கு இது தர்மம், மற்றவனுக்கு அது தர்மம் என்பது தேவையா?

ஆ : ஆம், எல்லோருக்கும் ஒரே சட்டையைக் கொடுத்து நீங்களனைவரும் இதை அணிந்து கொள்ளுங்கள் என்று சொன்னால் அணிந்து கொள்ள முடியுமா? ஆகவே வெவ்வேறு அதிகாரிகளுக்கு வெவ்வேறு விதமான தர்மம் கூற வேண்டும், ஆதலால்தான் சாஸ்திரங்களில் வெவ்வேறு ஜனங்களுக்கு வெவ்வேறு விதமான தர்மம் கூறியிருக்கிறார்கள் ஆனால் எல்லோருக்கும் சாமான்ய தர்மங்கள் இருக்கின்றன, விசேஷமான தர்மங்களில் வித்யாசமிருக்கலாம். ‘சிலர் விசேஷ தர்மத்தையும் சாமான்ய தர்மத்தையும் அனுஷ்டிக்க வேண்டும் என்றிருக்கும் சாமான்ய தர்மம் எல்லோருக்கும் சமமாக இருக்கிறது.

சி: சாமான்ய தர்மம் என்றால் என்ன?

ஆ : மனுவே இதற்கு விளக்கம் கூறி

அஹிம்ஸா ஸத்யமஸ்தேயம் செளசமிந்த்ரிய நிக்ரஹ:
ஏதம் ஸாமாஸிகம் தர்மம் சாதுர்வர்ண்யேsப்ரவீன்மனு:

(அஹிம்சை, உண்மை பேசுதல், திருடாமலிருத்தல், சுத்தமாக இருப்பது, இந்திரியங்களை அடக்குவது என்பவை மனு தெரிவித்தபடி எல்லோருக்கும் உள்ள சாமான்ய தர்மங்களாகும்) என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒருவன் மனதாலும் மற்றொருவனுக்குக் கஷ்டத்தை நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அது அஹிம்சை ஆகாது அடித்தால்தான் ஹிம்சை என்று அர்த்தமில்லை. மனதால் கேடு நினைத்தலும் தவறுதான், அடுத்தது ஸத்யம். எவ்விஷயம் ஒருவனுக்குக் கஷ்டம் உண்டாக்குவதில்லையோ, மேலும் எவ்விஷயம் உண்மையாக இருக்கிறதோ அதுதான் ஸத்யமாகும். சிலர் உண்மை பேசினாலும், மற்றவர்களுக்குத் துன்பமுண்டாக்கும் வகையில் பேசினால் இது உண்மை என்ற வகைக்குச் சேராது. சிலர் கேட்பதற்கு இனிமையாய் இருப்பதைப் பேசினாலும், அது பொய்யென்றால், அதுவும் உண்மை என்ற வகைக்குச் சேராது. ஆகவே உண்மை என்பது மற்றவர்களின் நன்மைக்காகவும் மேலும் அது ஸத்யமாகவும் இருக்க வேண்டும் அடுத்தது அஸ்தேயம் – மற்றவரின் பொருளைத் திருடாமலிருப்பது அஸ்தேயம் எனப்படும். திருடக் கூடாதென்றால் மனதாலும் பிறர் பொருளை விரும்பக் கூடாது. ‘எவனிடம் எது இருக்கிறதோ, அது அவனிடத்திலேயே இருக்கட்டும். நம்மிடத்தில் இருப்பது நம்மிடம் இருக்கட்டும். விருப்பமிருந்தால் பிறருக்குக் கொடுப்போம்’ என்ற எண்ணம் வேண்டும். ஒன்றைத் திருட வேண்டும் என மனதால் நினைத்தாலும் அது அஸ்தேயமாகாது.
செளசம்’ என்பது சுத்தமாக இருப்பது. இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உடல் தூய்மை. ஸ்நானம், புனிதமான ஆடைக்களைத் தரிப்பது போன்றவை உடல் தூய்மைக்குச் சேரும், இரண்டாவது மனத்தூய்மை, ஆடைகள் நன்றாக இருக்கலாம். ஆனால், உள் மனம் தூய்மையாக இல்லாவிட்டால், அது உண்மையான சௌசமாகாது.

இந்திரிய நிக்ரஹம்’ என்பது அடுத்தது. ஒரு பொருளைப் பார்த்தாலோ, ஓர் ஓசையைக் கேட்டாலோ மனது அங்குப் போக வேண்டுமென நினைக்கலாம். ஆனால், அதைப் போகவிடாமல் தடுப்பதுதான் இந்திரிய நிக்ரஹம், இந்திரியங்கள் அல்லது புலன்களின் அடக்கமே இந்திரிய நிக்ரஹம் என்று கூறப்படுகிறது. மேற்சொல்லப்பட்ட நாமங்கள் அனைவருக்கும் சமம். ‘இவன் அவன் என்று வித்யாசம் இல்லாதது.

சி:சாமான்ய தர்மத்தை அனுஷ்டித்தால் ஏதாவது பலனிருக்குமா?

சி: ஆம். தர்மத்தை அனுஷ்டித்தால் பலன் அவசியம் இருக்கும். யார் கடைப்பிடித்தாலும் பலனுண்டு. ஆகவே மனிதனாய்ப் பிறந்த யாவரும் சாமான்ய தர்மத்தை அவசியம் அனுஸரிக்க வேண்டும்

சி: எவ்வளவோ மனிதர்கள் அதர்மத்தைச் செய்வதை நாம் காண்கிறோம். ஆனால்
தற்போது அவர்கள் நன்மையே அடைந்து கொண்டிருப்பதை காண்கிறோம். இதற்குக் காரணம் முற்பிறவியில் செய்த கர்மா வென்று சொல்லலாம். ஆனால் அவர்கள் செய்யும் அதர்மம் அவர்களுக்குப் பலனளிப்பதாகவே தெரியவில்லையே!

ஆ: – அதர்மம் பலன் தருவதேயில்லை என்று சொல்வது தப்பு, அது பலன் தரும்.
ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு தரும். இறைவனுக்குக் கருணை அதிகம், ஒருவன் திருந்துவதற்குச் சமயம் தருகிறான். அப்படியும் இருந்துவிட்டால் தண்டிக்கிறான். தர்மமும், அதர்மமும்
உடனே பலன் தருவதில்லை. இதனால்தான் மனு,

நாதர்மச்சரிதோ லோகே ஸத்ய: பத்தி கௌரிவ
சனைராவர்தமானஸ்து கர்துர்மூலானி க்ருந்ததி
(செய்யப்பட்ட அதர்மம் பால் கறப்பதற்குத் தயாராயிருக்கும் பசுவைப் போல் உடனடியாகப் பலனளிப்பதில்லை. ஆனால் நிலத்தில் தெளிக்கப்பட்ட விதைகளைப் போல் கிரமமாகப் பலனளித்து அதர்மம் செய்தவனை அடியோடு அழிக்கிறது) என்று கூறியிருக்கிறார், அதர்மம் செய்தால் பலன் கிடைப்பதில்லை என்று நீ சந்தேகப்பட்டாயே, இதற்கு நம் ஸ்ம்ருதியை இயற்றியவர்களே கூறியுள்ளனர். மனுவே,

அதர்மேணைத்தே தாவத்ததோ பத்ராணி பச்வதி தது: யத்னாஞ்ஜயதி ஸமூலஸ்து விநச்யதி||

துரோகம் போன்ற அதர்மத்தினால் ஒருவன் நன்மை அடைந்தவன் போலிருக்கிறான். பிறகு செல்வமெல்லாம் பெற்றுச் செழிப்பான வாழ்வை அடைகிறான். பிறகு எதிரிகளை வெல்கிறான், கடைசியில் அடியோடு அழிவடைகிறான்) என்று கூறியிருக்கிறார்

ப : தர்மம் செய்வது மிகவும் கடினமாக இருந்தால் என்ன செய்வது?

ஆ: எவ்வளவு துன்பமிருந்தாலும் மனதை அதர்மம் பக்கம் போகவிடக் கூடாது. முயற்சி செய்தாவது தர்மத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால், தர்மம் இப்பொழுதோ பிறகோ பலனளித்து நமக்கு நன்மையைக் கொடுக்கும், நாம் இறந்த பிறகு நம் உடலை விட்டுவிட்டு நம் உறவினர்கள் சென்று விடுவார்கள். அதற்குப் பின்னும் நம்முடன் வருவது நாம் செய்த தர்மமும் அதர்மமுமாகும். அதேபோல் பரலோகத்திலும் மறுபிறவியிலும் நம்மைக் காப்பது தர்மம்தான். தர்மத்தைக் காப்பாற்றுபவன் என்றும் கைவிடப்பட மாட்டான். ஆதலால்தான்

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

(தர்மத்தைச் செய்பவனை, தர்மம் காப்பாற்றுகிறது) என்று சொல்லப்பட்டுள்ளது. இது மிகவும் ஸத்யமானது. இப்போது பலன் தெரியாவிட்டாலும் பின்னர் பலன் அவசியமிருக்கும். மேலும் தர்மம் செய்ய வேண்டியது நம் கடமை. “இறைவன் நமக்கு எல்லாவிதமான வசதிகளையும் நன்மைகளையும் அளித்திருக்கிறானே தாய் வயிற்றில் எவ்விதமான உதவி இல்லாத சமயத்திலும் என்னைக் காப்பாற்றினானோ அவனுக்கு
நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டாமா” என்று கருதியாவது ஒருவன் வேதத்தில் கொடுத்துள்ள உபதேசப்படி நடக்க வேண்டும், அதுவே தர்மம் இந்தக் கண்ணோட்டத்தோடாவது தர்மத்தை ஒருவன் அனுஸரிக்க வேண்டும்.

சி: யாகம் போன்றவற்றைச் செய்வதற்கு நிறைய செல்வம் தேவைப்படும் றது. ஆதலால் ஏழையானவனுக்கு தர்மத்தைச் செய்ய அதிகம் வாய்ப்பு இல்லை என்று பொருளா

ஆ : இல்லை. சாஸ்திரங்களில் எவ்வளவு ஒருவனுக்குச் சக்தியிருக்கிறதோ. அவ்வளவுக்கு ஒருவன் தர்மத்தைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. தர்மத்தைச் செய்ய, விசேஷமாகச் செல்வமுள்ளவன் ஒரு ஆலயத்தைக் கட்டலாம். ஒருவனுக்குச் செல்வமில்லை என்றால் அவன் செல்வந்தர்கள் கட்டிய கோவிலுக்குச் சென்று கடவுளின் ஸந்தி தியில் நமஸ்காரம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். ஆகவே இரண்டு விதமான மக்களுக்கும் தர்மம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அது எவ்விதமான தர்மம் என்பதில்தான் வேறுபாடுள்ளது. பணமில்லாதவன் ஒருவன் ஒரு ரூபாய் தானம் செய்தால், அவனுக்கு உத்தமமான பலன் கிடைக்கும். ஆனால், இலட்ச ரூபாய் உள்ள ஒரு செல்வந்தனும் தானும் எட்டணாவோ, ஒரு ரூபாயோ தானம் செய்கிறேன் என்று சொன்னால், அவனுக்கு அந்த அளவிற்குப் பலன் கிடைக்காது.

சி : நாம் உலகில் சிலரைப் பார்க்கிறோம். அவர்கள் அனுஷ்டானம் முதலி யவற்றை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களைத் துன்புறுத்துகிறார்கள். இப்படிச் செய்தால் இது தர்மமா?

ஆ : இல்லவே இல்லை. அப்படிச் செய்தால், அவர்கள் வேஷம் போடுவது போல்தானிருக்கும். சாஸ்திரத்திலேயே

ச்லோகார்தேன ப்ரவஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி:
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம் |

(நான் பாதிச் சுலோகத்தில், கோடிக்கணக்கான புத்தகங்களில் சொல்லப்பட்டவற்றைத் தெரிவிக்கிறேன். பிறருக்கு உதவியளிப்பது
புண்ணியமாகும். பிறரைத் துன்புறுத்துவது பாவமாகும்) என்று கூறப் பட்டுள்ளது. ஆதலால் மற்றவனுக்கு ஒருவன் துன்பம் உண்டாக்கிக் கொண்டிருந்தால், அது பாவத்தையே நிச்சயம் தரும். ஆனால் ஒருவன், ‘தர்மம் செய்வது அவனுக்குச் சகிக்கவில்லை, நான் தர்மம் செய்யாவிட்டால்தான் அவனுக்குச் சந்தோஷம்’ என நினைத்து தர்மத்தை செய்யாமலிருந்தால் அதுவும் பொருத்தமில்லை. ஏனென்றால் “ஒருவனுக்கும் துன்பம் உண்டாக்காமல் தர்மம் செய்ய வேண்டும் எனச் சாஸ்திரம் சொல்கிறதே” என்று அவன் கூறலாம். ஆனால் ஒருவனுக்கும்’ என்பது எந்த நல்ல மனிதனுக்கும்’ என்ற பொருளில் இங்கு வருகிறது. இதனால் மற்றவனுக்குத் துன்பம் உண்டாக்க வேண்டும் என்பதும் அர்த்தமில்லை. நாம் செய்யும் பகவத் பூஜை நாஸ்திகன் ஒருவனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அக்காரணத்திற்காக நாம் பூஜையை விடக்கூடாது. செய்துகொண்டே போகலாம். அவனையும் வீணாகத் திட்டாமல் இருந்து விடலாம். இவ்வாறு நடந்து கொள்வதே சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe