சென்னை: எப்படியும் முதலீட்டாளருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.. என்னை விட்டு விடுங்கள் என்று போலீஸாரிடம் பெண் தொழிலதிபர் நர்மதா கூறியுள்ளார். அவர் போலீஸாரிடம் கூறியபோது, வங்கியில் தான் வாங்கிய கடனுக்கு ஏராளமான கார்களை பறிமுதல் செய்து விட்டனர் என்றும், தொழிலை விரிவுபடுத்த வேறு வழியின்றி அகலக்கால் வைத்தால் முதலீட்டு திட்டத்தை முன்வைத்ததும் இந்தப் பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்த பலருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு 3 மாதத்தில் எப்படியும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றும் கூறிய நர்மதா, போலீஸாரிடம் என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். ஆனால், நர்மதா மீது மோசடி புகார்களை ஏமாந்தவர்கள் பெருமளவில் அளித்து வருகின்றனர். எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், மோசடிகள் தொடர்பாக நர்மதாவிடம் மேலும் விசாரணை நடத்தவுள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று அல்லது நாளை மத்திய குற்றப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். [su_divider] சென்னை கோயம்பேடு, பிருந்தாவன் நகர், முல்லைத் தெருவில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் தொழில் அதிபர் நர்மதா (34). இந்த நிறுவனத்தில் 170 கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் மீது, சூளைமேடு வீரபாண்டியன்நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அவர் அளித்த புகார் மனுவில், சில மாதங்களுக்கு முன்பு “இந்தியா டிராக் கால் டாக்ஸி’ நிறுவனத்தில் இருந்து எனது செல்லிடப்பேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 36 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை படித்துப் பார்த்த எனக்கு, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என நினைத்தேன். இதையடுத்து நான், எனது மனைவி அமுதா, உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 34 பேர் ரூ.34 லட்சம் முதலீடு செய்தோம். சில மாதங்களுக்கு மட்டும் எங்களுக்கு சரியாக பணம் வந்ததும். ஆனால் அதன் பின்னர் பணம் வரவில்லை. எங்களது பணத்தை கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை, பணத்தையும் தரவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று – குறிப்பிடப்பட்டிருந்தது. அவருடன் மேலும் 5 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அந்த மனுக்களில்… தொழில் அதிபர் நர்மதா கடந்த 2010–ம் ஆண்டு முதல், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம். எங்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நர்மதா ஒரு தகவலை அனுப்பினார். வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று அறிவிப்பு வெளியிட்டார். வாடிக்கையாளர் முதலீட்டுத் திட்டம் என்று அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித் தரப்படும் என்றும், அத்துடன் தங்கக் காசு பரிசாகக் கிடைக்கும் என்றும், ஓர் ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். செல்போன் எஸ்.எம்.எஸ். அறிவிப்புகளைத் தொடர்ந்து நாங்கள் நர்மதாவை நேரில் சென்று பார்த்துப் பேசினோம். அவரது அறிவிப்பு மட்டும் கவர்ச்சியாக இல்லை. அவரது கவர்ச்சியான பேச்சும் எங்களை அவரது மோசடி வலையில் சிக்க வைத்து விட்டது. லட்சம், லட்சமாக அவரிடம் பணத்தைக் கொண்டு கொட்டினோம். நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்கக் காசு பரிசாகக் கொடுத்தார். இதனால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், நர்மதாவிடம் முதலீட்டுப் பணத்தை கோடி, கோடியாகக் கொட்டினார்கள். ஒரு சிலருக்கு முதலீட்டுப் பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார். பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வங்கி காசோலை பெற்றவர்களுக்கு ஒன்றுமில்லை. காசோலைகளுக்கு நர்மதாவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. அவை திரும்பி வந்தன. எங்களது வயிற்றில் அடித்து கொள்ளை அடித்த முதலீட்டுப் பணத்தில், நர்மதா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது மோசடிகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ.46 கோடி வரை இருக்கும். நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை செய்யும் பரத்குமார் (வயது 24) மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, தொழிலதிபர் நர்மதா மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் நர்மதா மீதும், அவரது நிறுவன மேலாளர் பரத்குமார் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, நர்மதாவும், பரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நர்மதாவின் அலுவலகம் கோயம்பேட்டிலும், வீடு சென்னை முகலிவாக்கத்திலும் உள்ளது. அவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், முக்கூர் கிராமம். அவரது தந்தை இந்து அறநிலையத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பி.எஸ்சி. பட்டதாரியான நர்மதா திருமணம் ஆனவர். தனது கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நர்மதாவுடன் கைதான அவரது மேலாளர் பரத்குமார் பி.எஸ்சி. பட்டதாரி. திருமணமாகாதவர். சென்னை பிராட்வேயில் வசிக்கிறார். இவர் ஒரு நடன நடிகரும்கூட! தனியார் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர்–1 நடன நிகழ்ச்சியில் முதல் பரிசைப் பெற்றவர். நர்மதா இவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார். நர்மதாவின் வலதுகரமாகச் செயல்பட்ட பரத்குமார், அவரது மோசடிகளுக்கும் துணை போயுள்ளார். சென்னையில் இந்த மோசடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.