சென்னை: மத்திய ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் குறித்து எல்லோரையும் முந்திக் கொண்டு வரவேற்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல் எதையோ சூசகமாகத் தெரிவிக்கிறது என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை: பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில சந்தேகங்களைக் கேட்டபோது, அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பிய நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் சென்று கோபித்துக் கொண்டதாகச் செய்தி வந்திருக்கிறதே, இது எதைக் காட்டுகிறது? அவர்கள் நடந்து கொண்டது, “நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன், நீ அழுவதைப் போல அழு” என்பதைப் போலத் தான் இருக்கிறது. குற்றவாளிகள் தரப்பினருக்காக வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும்போது, அவ்வப்போது அதற்கு ஆதாரத்துடன் பதில் அளிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், எதுவும் தெரியாததைப் போல அமர்ந்திருக்கிறார். நீதிபதியே அதைப் பலமுறை நேரடியாகச் சுட்டிக் காட்டியும், அரசு விசாரணை அதிகாரியும், அரசு வழக்கறிஞரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. நடப்பது, அ.தி.மு.க. அரசு, அந்த அரசின் கீழ் பணி யாற்றுபவர் விசாரணை அதிகாரி. அ.தி.மு.க. அரசுக்காக வாதாட அ.தி.மு.க. அரசினால், வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்தான் பவானி சிங். அதுவும் பவானி சிங் கோரிக்கை எதையும் வைக்காத நிலையில், அவசர அவசரமாக அரசு வழக்கறிஞராக நியமிக்க ஒப்புதல் தந்ததுதான் அ.தி.மு.க. அரசு. அந்த பவானி சிங்தான் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கில் வாதம் செய்யப் போகிறார்! ஜெயலலிதா ஏற்கனவே கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவதற்காக மனு தாக்கல் செய்தபோது, இந்தப் பவானி சிங்தான் முதலில் அவரை ஜாமீனில்விடக் கூடாது என்றும், பிறகு ஜாமீனில் விடலாம் என்றும் இரண்டு வெவ்வேறான கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவித்தவர். தற்போது அவர் எவ்வாறு வாதாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சுரேஷ் பிரபுவின் மத்திய ரயில்வே பட்ஜெட்டையும், அருண் ஜெட்லியின் பொது பட்ஜெட்டையும், எல்லோரையும் முந்திக் கொண்டு ஜெயலலிதா வரவேற்று அறிக்கை கொடுத்தது எதைக் காட்டுகிறது? தமிழக அரசின் சார்பில் முதலமைச்சராகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் பன்னீர்செல்வம், மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் பற்றியோ, பொது பட்ஜெட் பற்றியோ கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், ஏன் வாயையே திறக்காத நிலையில், வீட்டிலிருந்து வெளியேயே வராத, முன்னாள் முதலமைச்சர், நீதிமன்றத்தால் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், எல்லோரையும் முந்திக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகளை வரவேற்று அறிக்கை கொடுத்திருப்பதும், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு எல்லோரையும் முந்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருப்பதும், மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் அ.தி.மு.க. தெரிவிக்காமல் இருப்பதும், ஏன், ஜெயலலிதாவின் வீட்டிற்கே வந்து மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்த்துப் பேசுவதும், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதைப்போல எதையோ “சூசகமாக” தெரிவிக்கின்றது. இது பற்றி ஒரு நாளேடு 1-3-2015 அன்று “பா.ஜ.க.வுடன் நெருங்கும் அ.தி.மு.க.” என்ற தலைப்பில் செய்தியே வெளியிட்டுள்ளது. காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறைக் குழுவை உடனடியாக அமைக்க நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தியதாகப் பெருமைப்பட்டுக் கொண் டிருக்கிறார்களே? நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் பற்றி நான் கூறுவதைவிட ஏடுகளில் வெளிவந்த செய்தியையே கூறுகிறேன். நீங்களும் படித்து மகிழ்ச்சியடையுங்கள். “சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், “தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப் பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய அ.தி.மு.க. எம்.பி.யைப் பார்த்து, ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்துத் தீர்த்தது. ராஜ்ய சபாவில் தமிழக எம்.பி.யான விஜிலா சத்யானந்திற்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், சில வார்த்தைகளைப் பேசி விட்டு, திடீரென “சிந்து நதியின் மிசை நிலவினிலே…” என ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தார். மூன்று நிமிட ஒதுக்கீட்டில் பாடுவதற்கு 2 நிமிடம் எடுத்துக் கொண்டவர், மீதமுள்ள ஒரு நிமிடத்தில் 3 முறை “அம்மா நாமம்” உச்சரித்தார். ஒட்டு மொத்த சபையும் “அம்மா, அம்மா” என எடுத்துக் கொடுத்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க. எம்.பி., சிவா எழுந்து, மிக சீரியசாக, “மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான நல்லுறவைக் கட்டிக் காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இது மாத்திரமல்ல; கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியில், “போதுமான எம்.பி.க்கள் பலம் இருந்தும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேச முன்வராமல், பின் வாங்கியதன் மூலம், தனக்குரிய முக்கியத்துவத்தை அ.தி.மு.க. தாரை வார்த்துள்ளது. பேச வரும்படி திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்தும் கூட, வாய்தா கேட்டது தெரிய வந்துள்ளது. 6வது இடத்தில் பேசியிருக்க வேண்டிய அ.தி.மு.க. 20வது நபராக பங்கேற்க நேர்ந்தது. இதன்மூலம், தன் முக்கியத்துவத்தை அந்தக் கட்சி தாரை வார்த்துள்ளது என்றே கூற வேண்டும்” என்று எழுதியிருந்தது. இதுதான் அ.தி.மு.க.வின் நாடாளுமன்றச் செயல்பாடு. தமிழகக் காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதனால் கூடுதல் பணியால் மற்ற அதிகாரிகள் திணறுவதாகவும் செய்தி வந்திருக்கிறதே? காவல் துறையிலே மாத்திரமல்ல; அரசுத் துறைகள் அனைத்திலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாகவும், அந்த இடங்கள் எல்லாம் எதையோ “எதிர்பார்த்து” நிரப்பப்படாமல் உள்ளதாகவும் பேசப்படுகிறது. காவல் துறையைப் பொறுத்து 1-1-2015 அன்று 21 ஆயிரத்து 100 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. வேலைக்காக இத்தனை இலட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்களோ இல்லையோ, அ.தி.மு.க. ஆட்சியினர் வந்ததும் வராததுமாக பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பி, அவர்களில் பலரின் சாவுக்கும் காரணமாக இருந்து, தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்திலே உள்ளது. மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டண உயர்வு செய்திருப்பதால் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் நஷ்டம் ஏற்படும் என்று செய்தி வந்திருக்கிறதே? இந்த ஆண்டு 26 ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணத்தை 0.9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். இதில் சிமெண்டுக்கு 2.3 சதவிகிதம், நிலக்கரிக்கு 6.3 சதவிகிதம், மண்ணெண்ணெய், எல்.பி.ஜி., மற்றும் இரும்பு உருக்கு ஆகியவற்றுக்கு 0.9 சதவிகிதம், உரம், பருப்பு மற்றும் தானிய வகைகளுக்கு 10 சதவிகிதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை ரயிலில் கொண்டு வருவதற்காக தமிழக மின் வாரியம் ஆண்டுதோறும், மத்திய ரயில்வே துறைக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் செலுத்துகிறது. தற்போது, நிலக்கரியை சரக்கு ரயிலில் கொண்டு வருவதற்கான கட்டணம் 6.3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பொது பட்ஜெட்டில் சேவை வரி 12 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக மின் வாரியத்திற்கு நடப்பாண்டில், சரக்கு ரயில் கட்டணத்தில் 125 கோடி ரூபாயும், “கிளீன் எனர்ஜி” வரி 275 கோடி ரூபாயும் என கூடுதலாக 400 கோடி ரூபாய் செலவு ஏற்படும். “கழுத்துக்கு மேல் போய்விட்டது, சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன” என்று தான் நமது ஆட்சியினர் நினைப்பார்கள்.
பட்ஜெட் குறித்த ஜெயலலிதா கருத்து ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனக் காட்டுகிறது: கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari