June 21, 2021, 3:22 am
More

  ARTICLE - SECTIONS

  அயராத சேவை! உலக செவிலியர் தினம்!

  nurse5
  nurse5

  இன்று உலக செவிலியர் தினம்.

  மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

  பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னதத் தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

  1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூர முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

  இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

  நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல். நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார்.

  nurse3
  nurse3

  பிரிட்டனில் செல்வச்செழிப்பு மிக்க உயர்குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளிகளைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.

  அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் காலத்தில் செவிலியர், உயர் செல்வக் குடும்பங்களில் சமையல்காரியாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

  nurse2
  nurse2

  பிளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார்.

  1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் பிளாரன்ஸ் ராணுவப் படையினரைக் குணப்படுத்தினார்.

  nightingale
  nightingale

  இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தங்களை காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் பிளாரன்ஸைக் கவுரவித்தனர்.

  மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன.

  போரிலிருந்து நாடு திரும்பிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார்.

  Florence
  Florence

  நாடு திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவப்படுத்த விரும்பினர். அவருக்குப் பொன்னும், பொருளும் வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம்’ என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

  இந்த தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவுகூரும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை நாம் அனைவரும் பாராட்டுவது மிக அவசியம்.

  nurse1
  nurse1

  இந்த கொரோனா காலத்தில், தங்கள் உயிரையும் துச்சமென கருதி, சுகாதாரப்பணியாளர்கள் இரவும், பகலும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற பாடுபடுகின்றனர்.

  இவர்களில், நர்சுகளின் பங்களிப்பு மிகப்பெரிது. பல கொரோனா வார்டுகளில், நர்சுகளே நோயாளிகளை அருகில் சென்று கவனிக்கின்றனர். தொற்று பயத்தால், டூட்டி முடிந்தாலும், ஹாஸ்டல்களில் சில நாட்கள் தங்கிய பிறகே, சில நர்சுகள் வீட்டுக்கு செல்ல வேண்டியதுள்ளது.

  குழந்தைகளை பிரிந்து, பலர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் கடமையே கண் என உழைத்து வருகின்றனர். ‘கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்பதற்காக, என் பெண் குழந்தைக்கு, தாய்ப்பாலே கொடுக்க முடியாமல் தவித்திருக்கிறேன்’ என்று தழுதழுக்கிறார், பெயர் வெளியிட விரும்பாத நர்ஸ் ஒருவர்.

  nurse
  nurse

  டெல்பின் ஜேம்ஸ், கே.ஜி., மருத்துவமனை: சேவை புரிய கடவுள் எங்களுக்கு கொடுத்த வாய்ப்பாகவே இப்பணியை நினைக்கிறோம்.

  எங்கள் கண் முன் இறப்பை பார்ப்பதும், நோயாளிகள் இடமின்றி திரும்பிச் செல்வதும், எங்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் செவிலியர்களாக இருப்பதால்தான், இந்த சவாலை சமாளிக்கிறோம். அதனால் பெருமை கொள்கிறோம்.

  மஞ்சுளா, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை: ஆஸ்பத்திரிக்கு எளிதாக கிளம்பி வந்து விடலாம். திரும்ப வீட்டுக்குள் நுழையும் முன், குளித்து வேறு ஆடைகளை அணிந்து, பழைய ஆளாக மாறுவதற்குள் மிகுந்த சிரமம். என்னதான் சுத்தப்படுத்திக் கொண்டாலும், குழந்தைகளிடம் நெருங்க பயமாக இருக்கிறது.

  ராஜலட்சுமி, ராமகிருஷ்ணா மருத்துவமனை: நோயாளிகளை எங்கள் உறவாக நினைக்கிறோம். கொரோனா காலத்தில் அணியும், பி.பி.டி., கிட்டால் வியர்வை உடலை நனைக்கிறது. நாள் முழுக்க நின்று கொண்டே இருக்க வேண்டும். சிறு தவறு நடந்தால் கூட, உறக்கத்தின் போது கூட, நினைவு வந்து கொண்டே இருக்கும். அதனால் அர்ப்பணிப்போடும், கவனமாகவும் பணி மேற்கொள்கிறோம்.

  அருள்மொழி, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை: வெளிநோயாளிகள் பிரிவில் (கொரோனா வார்டு) பணிபுரிகிறேன். இரவு 7:00 மணிக்கு நுழைந்தால் காலை 7:00 மணி வரை ஒரு நிமிடம் கூட, இடைவெளியின்றி பணிபுரிய வேண்டியிருக்கிறது. அனைவரையும் எங்கள் உறவுகளாக பரிவுடனே பார்க்கிறோம். ஆனாலும் நோயாளிகளின் உறவினர்கள், கவனிப்பதில்லை என்று சொல்வது மிகுந்த வேதனையை தருகிறது.

  nurse4
  nurse4

  புவனேஸ்வரி, சத்யா மெடிக்கல் சென்டர்:நோயாளிக்கு ஏற்படும் கஷ்டத்தை முழுமையாக உணருபவர்கள்நாங்கள். இதனால், எங்களுக்குள் இருக்கும் இன்ப துன்பத்தை எல்லாம், மருத்துவமனைக்குள் நுழைந்து விட்டால் மறந்து விடுவோம்.
  சிகிச்சை முடிந்து அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகும் வரை, அவர்களின் நலனே எங்கள் நலன்.

  கலாமணி, அரசு துணை சுகாதார நிலையம் மத்திபாளையம்: பிரசவ வேதனையில் வரும் கர்ப்பிணிகளை ஆசுவாசப்படுத்தி, குழந்தையை பெற்றெடுக்கச்செய்வதற்குள், நாங்களே பிரசவித்த உணர்வு ஏற்படும். ஒவ்வொரு கர்ப்பிணியும் படும் வேதனையையும், துயரத்தையும் அந்த நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-