spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகொரோனாவை வெல்ல... கிராமங்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து அரசுப் பணியாளர்கள் செய்த சாதனை!

கொரோனாவை வெல்ல… கிராமங்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து அரசுப் பணியாளர்கள் செய்த சாதனை!

- Advertisement -
mannkibaat
mannkibaat

மனதின் குரல், 78ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  27.06.2021
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
   

பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி…

எனதருமை நாட்டுமக்களே, கொரோனாவுக்கு எதிராக நமது நாட்டுமக்களின் போராட்டம் தொடர்கிறது என்றாலும், இந்தப் போரில் நாமனைவரும் இணைந்து பல அசாதாரணமான இலக்குகளை அடைந்திருக்கிறோம். 

சில நாட்கள் முன்பாக நமது நாட்டில், இதுவரை நடக்காத ஒரு பணி நடந்தேறியிருக்கிறது.  ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று, தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம் நடந்தது, அதே நாளன்று நாட்டில் 86 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது, அதுவும் ஒரே நாளில். 

இத்தனை பெரிய எண்ணிக்கையில் பாரத அரசு தரப்பில், இலவச தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரே நாளன்று.  இதனைப் பற்றிய விவாதங்கள் நடைபெறுவதும் இயல்பானது தானே!!

 நண்பர்களே, ஓராண்டு முன்பாக அனைவர் முன்பாகவும் இருந்த கேள்வி – தடுப்பூசி எப்போது வரும்? என்பதே.  இன்று ஒரே நாளில் நாம் இலட்சக்கணக்கான, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை, இலவசமாக அளித்து வருகிறோம் எனும் போது, இது தானே புதிய பாரதத்தின் பலம்!!

நண்பர்களே, தடுப்பூசி தரும் பாதுகாப்பு, தேசத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும், நாம் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும்.  பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, பல அமைப்புகள், சமூக நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் முன்வந்திருக்கிறார்கள், அனைவரும் இணைந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.  சரி, நாமும் இன்று, ஒரு கிராமம் செல்வோம், அந்த கிராமத்து மக்களிடத்திலேயே நாம் உரையாற்றுவோம்.  தடுப்பூசி தொடர்பாக மத்தியப்பிரதேசத்தின் பைதூல் மாவட்டத்தின் டுலாரியா கிராமம் போவோம் வாருங்கள்.

பிரதமர் :  ஹெலோ

ராஜேஷ்:  வணக்கம்

பிரதமர்: வணக்கம் ஐயா.

ராஜேஷ்: என் பேரு ராஜேஷ் ஹிராவே, பீம்புர் ப்ளாக்கைச் சேர்ந்த டுலாரியா கிராம பஞ்சாயத்தில வசிக்கறேன்.

பிரதமர்: ராஜேஷ் அவர்களே, இப்ப உங்க கிராமத்தில, கொரோனா பெருந்தொற்றோட பாதிப்பு என்னெங்கறதை தெரிஞ்சுக்கத் தான் நான் இப்ப உங்களுக்கு ஃபோன் செஞ்சிருக்கேன்.

ராஜேஷ்: சார், இங்க கொரோனாவோட பாதிப்புன்னு சொல்லக்கூடிய வகையில எல்லாம் இல்லை.

பிரதமர்: யாருமே பாதிக்கப்படலையா என்ன?

ராஜேஷ்: ஆமாங்க.

பிரதமர்: கிராமத்தில ஜனத்தொகை எத்தனை?   கிராமத்தில எத்தனை பேர் வசிக்கறாங்க?

ராஜேஷ்: கிராமத்தில 462 ஆண்களும், 332 பெண்களும் வசிக்கறாங்க சார்.

பிரதமர்: நல்லது! ராஜேஷ் அவர்களே, நீங்க தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?

ராஜேஷ்: இல்லை சார், இன்னும் போட்டுக்கலை சார்.

பிரதமர்: அட! ஏன் இன்னும் போட்டுக்கலை?

ராஜேஷ்: சார், அது வந்து, இங்க சிலர் சொன்னாங்க, வாட்ஸப் மூலமா ஒரு பிரமையை ஏற்படுத்தி, இதனால மக்கள் பாதிக்கப்பட்டுட்டாங்க, அதனால தான் போட்டுக்கலை சார்.

பிரதமர்: அப்படீன்னா உங்க மனதிலயும் பயம் இருக்கா?

ராஜேஷ்: ஆமாம் சார், கிராமம் முழுவதிலயும் இப்படி ஒரு பரப்புரையை பரப்பிட்டாங்க சார்.

பிரதமர்: அடடடா, என்ன வேலை செஞ்சிருக்கீங்க நீங்க?  பாருங்க ராஜேஷ் அவர்களே….

ராஜேஷ்: சொல்லுங்க சார்.

பிரதமர்: உங்க கிட்டயும் சரி, கிராமங்கள்ல வசிக்கற என்னோட எல்லா சகோதர சகோதரிகள் கிட்டயும் நான் சொல்லிக்க விரும்பறது என்னென்னா, தயவு செஞ்சு உங்க மனசுலேர்ந்து பயத்தை வெளியேத்துங்க.

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்: நம்ம நாடு முழுக்கவும் 31 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க.

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்: நானும் கூட தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கிட்டாச்சுங்கறது உங்களுக்கே தெரியும் இல்லையா?

ராஜேஷ்: தெரியும் சார்.

பிரதமர்: எங்கம்மாவுக்கு கிட்டத்தட்ட 100 வயசாகுது, அவங்களும் கூட ரெண்டு தவணைகளை போட்டுக்கிட்டாங்க.  சில சமயங்கள்ல இதனால காய்ச்சல் ஏற்படலாம், ஆனா இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம் தான், இது சில மணி நேரம் வரைக்கும் தான் இருக்கும்.  ஆனா பாருங்க, தடுப்பூசி எடுத்துக்கலைன்னா அது பெரிய ஆபத்தில கொண்டு போய் விடலாம்.

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்: இதனால நீங்க உங்களை மட்டும் ஆபத்துக்கு உள்ளாக்கலை, உங்க குடும்பத்தையும் கூட அபாயத்துக்கு ஆட்படுத்தறீங்க.

ராஜேஷ்: சரிங்க.

பிரதமர்: அதனால ராஜேஷ் அவர்களே, எத்தனை சீக்கிரத்தில முடியுமோ, அத்தனை சீக்கிரமா தடுப்பூசி போட்டுக்குங்க, கிராமத்திலயும் எல்லார் கிட்டயும் சொல்லுங்க, மத்திய அரசு இலவசமா எல்லாருக்கும் தடுப்பூசி கொடுக்குது, 18 வயசுக்கு மேற்பட்டவங்க எல்லாருக்கும் தடுப்பூசி இலவசம், கண்டிப்பா போட்டுக்கணும்னு சொல்லுங்க.

ராஜேஷ்: சரிங்க சார்.

பிரதமர்: நீங்களும் கிராமவாசிங்க கிட்ட சொல்லுங்க, கிராமத்தில இப்படிப்பட்ட ஒரு பயம் இருக்க எந்த ஒரு காரணமுமே இல்லை.

ராஜேஷ்:  இதுக்கெல்லாம் என்ன காரணம்னா சார், சிலர் பொய்யான பரப்புரைகளை பரப்பி விட்டுட்டாங்க சார், இதனால மக்கள் எல்லாம் ரொம்ப பயந்து போயிட்டாங்க.  இப்ப உதாரணமா பார்த்தீங்கன்னா, நீங்க தடுப்பூசி போட்டுக்கிட்டீங்கன்னா காய்ச்சல் வரும், காய்ச்சலால நோய் அதிகம் பரவிடும், இதனால மனிதனுக்கு மரணம் கூட ஏற்படலாம் அப்படீங்கற அளவுக்கு வதந்திகளை பரப்பினாங்க.

பிரதமர்:  பார்த்தீங்களா….. இன்னைக்கு ரேடியோவும், டிவியும் இத்தனை செய்திகளை அளிக்கறாங்க, ஆகையனால மக்களுக்கு புரிய வைக்கறது ரொம்ப சுலபமாயிருக்கு.  அது மட்டுமில்லாம, ஒரு விஷயம் சொல்லவா…… பாரதத்தில பல கிராமங்கள்ல எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க, அதாவது இந்த கிராமத்தில இருக்கற 100 சதவீத மக்கள்.  இப்ப நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு சொல்றேன்….

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்:  காஷ்மீரத்தில பாந்திபுரா மாவட்டம் இருக்கு, இந்த பாந்திபுராவுல இருக்கற வ்யவன் கிராமத்து மக்கள் எல்லாரும் சேர்ந்து 100 சதவீதம் தடுப்பூசிங்கற இலக்கைத் தீர்மானம் செஞ்சு போட்டும் முடிச்சுட்டாங்க.  இன்னைக்கு காஷ்மீரத்தில இந்த கிராமத்தில 18 வயசுக்கு மேல இருக்கற எல்லாரும் தடுப்பூசி போட்டு முடிச்சாச்சு.  இதே மாதிரி நாகாலந்திலயும் மூணு கிராமங்கள்ல எல்லா கிராமவாசிகளும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்கங்கற செய்தியும் எனக்கு கிடைச்சிருக்கு.

ராஜேஷ்: ஓஹோ

பிரதமர்: ராஜேஷ் அவர்களே, நீங்களும் உங்க கிராமம், உங்க அக்கம்பக்கத்து கிராமங்கள்லயும் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்கணும், நீங்களே சொல்ற மாதிரி பலர் மனசுலயும் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கு, இது வெறும் பிரமை மட்டும் தான். 

ராஜேஷ்:  சரிங்க சார்.

பிரதமர்: அப்ப இந்த பிரமைக்கு சரியான பதிலடி என்னென்னா, நீங்க முதல்ல தடுப்பூசி போட்டுக்கிட்டு, பிறகு எல்லாருக்கும் புரிய வைக்கணும்.  நீங்க செய்வீங்கல்லே?

ராஜேஷ்:  செய்வேன் சார்.

பிரதமர்: கண்டிப்பா செய்வீங்களா?

ராஜேஷ்: கண்டிப்பா செய்வேன் சார். உங்க கிட்ட பேசினதுக்குப் பிறகு, நானும் கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கணும், மத்தவங்களையும் போட உத்வேகப்படுத்தணுங்கற உணர்வு ஏற்பட்டிருக்கு சார்.

பிரதமர்: நல்லது, கிராமத்தில வேற யாரும் அங்க இருக்காங்களா, இருந்தா அவங்க கிட்டயும் நான் பேசறேனே!

ராஜேஷ்: இருக்காங்க சார்.

பிரதமர்: யார் பேசப் போறாங்க?

கிஷோரீலால்: ஹெலோ சார்…. வணக்கம்.

பிரதமர்: வணக்கங்க, யாரு பேசறீங்க?

கிஷோரீலால்: சார், என் பேரு கிஷோரீலால் தூர்வே.

பிரதமர்: ஆங் கிஷோரீலால் அவர்களே, இப்ப ராஜேஷ் அவங்க கிட்டத் தான் நான் பேசிட்டு இருந்தேன்.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: தடுப்பூசி போட்டுக்கறது பத்தி மக்கள் பல்வேறு விதமா பேசிக்கிட்டு இருக்காங்கன்னு அவரு ரொம்ப வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தாரு.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: நீங்களும் இந்த மாதிரியா கேள்விப்பட்டீங்க?

கிஷோரீலால்: ஆமாங்க…. இப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன், அது வந்து .

பிரதமர்: என்ன கேவிப்பட்டீங்க?

கிஷோரீலால்: அது வந்து சார், இங்க பக்கத்து மாநிலம்னா அது மகாராஷ்டிரம், அங்க சில உறவுக்காரங்க, சில வதந்திகளை பரப்பினாங்க.  அதாவது தடுப்பூசி போட்டுக்கறதால எல்லாரும் இறக்கறாங்க, சிலருக்கு காய்ச்சல் வருதுன்னு எல்லாம் பரப்பினாங்க, இதனால தான் மக்கள் மனசுல பெரிய பிரமை, ஒரு பீதி இடம் பிடிச்சிருக்கு சார், அவங்க தடுப்பூசி எடுக்க மாடேங்கறாங்க.

பிரதமர்: அதில்லை… என்ன சொல்றாங்க?  இப்ப கொரோனா போயிருச்சு, இப்படியா பேசிக்கறாங்க?

கிஷோரீலால்: ஆமாங்க.

பிரதமர்: கொரோனாவால ஒண்ணும் செய்ய முடியாதுன்னா பேசிக்கறாங்க?

கிஷோரீலால்: இல்லை, கொரோனா போயிருச்சுன்னு எல்லாம் பேசிக்கறதில்லை சார், கொரோனா எல்லாம் இருக்கு, ஆனா தடுப்பூசியை யாரு போட்டுக்கறாங்களோ, அவங்களுக்கு நோய் ஏற்படுது, அவங்க இறக்கறாங்க.  இது தான் நிலைமைங்கறாங்க சார்.

பிரதமர்: சரி, அதாவது தடுப்பூசி போட்டுக்கிறதால இறக்கறாங்கன்னு பேசிக்கறாங்க, இல்லையா?

கிஷோரீலால்: எங்க பகுதி ஒரு பழங்குடியினப் பகுதி சார்.  சாதாரணமாவே இங்க மக்கள் அதிகமா அஞ்சுவாங்க…… இப்ப இப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தின காரணத்தால, யாரும் தடுப்பூசி போட்டுக்கறதில்லை சார்.

பிரதமர்: இதோ பாருங்க கிஷோரீலால் அவர்களே,

கிஷோரீலால்: சொல்லுங்க சார்.

பிரதமர்: இப்படி வதந்திகளைப் பரப்புறவங்க வதந்திகளை பரப்பிக்கிட்டுத் தான் இருப்பாங்க. ஆனா நாம உயிர்களைக் காப்பாத்தியாகணும், நம்ம கிராம மக்களைக் காப்பாத்தியாகணும், நம்ம நாட்டுமக்களைக் காப்பாத்தியாகணும். இப்ப கொரோனா போயிருச்சுன்னு யாராவது சொன்னாங்கன்னா, அந்த பிரமையில இருக்காதீங்க.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: இந்த நோய் எப்படிப்பட்டதுன்னா, இது பலவிதமா வடிவெடுக்கக்கூடியது.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: இது தன் வடிவத்தை மாத்திக்குது….. புதுசு புதுசா நிறம்  வடிவங்களை எடுத்து நம்மை பீடிக்கக்கூடியது.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: இதிலேர்ந்து தப்பிக்க நம்ம கிட்ட ரெண்டே ரெண்டு வழிகள் தான் இருக்கு.  ஒண்ணு, கொரோனாவுக்குன்னு என்ன நெறிமுறை வரையறுத்திருக்காங்களோ, அதாவது முகக்கவசம் போட்டுக் கொள்வது, சோப்பால அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, இது ஒருவகை.  ரெண்டாவது வழி என்னென்னா, முன்ன சொன்ன நெறிமுறையோட கூடவே தடுப்பூசி போட்டுக்கறது.  இதுவும் ஒரு நல்ல பாதுகாப்பு கவசம், இதன் மேல கவனம் செலுத்துங்க.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: சரி கிஷோரீலால் அவர்களே, ஒரு விஷயம் சொல்லுங்க.

கிஷோரீலால்: கேளுங்க சார்.

பிரதமர்: மக்கள் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கும் போது, நீங்க அவங்களுக்கு எப்படி புரிய வைப்பீங்க? நீங்க புரிய வைப்பீங்களா, இல்லை நீங்களும் கூட வதந்திகளுக்கு இரையாயிடுவீங்களா?

கிஷோரீலால்: என்னத்தை புரிய வைக்க சார், அவங்க அதிக எண்ணிக்கையில இருக்காங்க சார், எங்களுக்கும் பயம் ஏற்படும் தானே சார்?

பிரதமர்: இதோ பாருங்க கிஷோரீலால் அவர்களே, நான் இன்னைக்கு உங்ககூட பேசியிருக்கேன், நீங்க என்னோட நண்பர்.

கிஷோரீலால்: சரி சார்.

பிரதமர்: நீங்களும் பயப்படக்கூடாது, மத்தவங்களையும் பயத்திலேர்ந்து மீட்டெடுக்கணும்.  மீட்டெடுப்பீங்களா?

கிஷோரீலால்: செய்வேன் சார்.  மீட்டெடுப்பேன் சார்.  மக்களை பயத்திலேர்ந்து மீட்பேன் சார்.  நான் முதல்ல தடுப்பூசி போட்டுக்கறேன்.

பிரதமர்: முக்கியமா, வதந்திகளை முற்றிலுமா புறக்கணியுங்க.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: நம்ம விஞ்ஞானிகள் எத்தனை கடுமையா உழைச்சு இந்த தடுப்பூசியைத் தயாரிச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்லை!

கிஷோரீலால்: தெரியும் சார்.

பிரதமர்: ஆண்டு முழுக்க, இரவுபகல் பார்க்காம, பெரிய பெரிய விஞ்ஞானிகள்லாம் பணியாற்றியிருக்காங்க, நாம விஞ்ஞானம் மேல நம்பிக்கை வைக்கணும், விஞ்ஞானிகள் மேல நம்பிக்கை வைக்கணும்.   மேலும் பொய்களைப் பரப்பவரவங்களுக்கும் என்ன புரிய வைக்கணும்னா, ஐயா, நீங்க சொல்றா மாதிரியெல்லாம் நடக்காது, இத்தனை கோடிப் பேர்கள் தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்காங்க, ஒண்ணுமே ஆகலைங்கற போது, நீங்க எப்படி பாதிப்பு இருக்குங்கறீங்கன்னு கேளுங்க.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: இந்த வதந்திகள்டேர்ந்து எல்லாம் தப்பி விலகி நாமளும் இருக்கணும், கிராமத்தையும் காப்பாத்தணும்.

கிஷோரீலால்: சரிங்கய்யா.

பிரதமர்:  அப்புறம் ராஜேஷ் அவர்களே, கிஷோரீலால் அவர்களே, உங்களை மாதிரியான நண்பர்கள்கிட்ட நான் என்ன சொல்லிக்க விரும்பறேன்னா, நீங்க உங்க கிராமத்தில மட்டுமில்லாம, மேலும் பல கிராமங்கள்லயும் இந்த மாதிரியான வதந்திகளைத் தடுக்கற வேலையை செய்யுங்க, என் கிட்ட இது பத்தி நீங்க பேசினீங்கன்னு மேலும் நிறைய மக்கள் கிட்டயும் சொல்லுங்க.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: கண்டிப்பா சொல்லுங்க, என் பேரைச் சொல்லுங்க.

கிஷோரீலால்: சொல்றோம் சார், நாங்களும் தடுப்பூசி போட்டுக்கறோம், மத்தவங்களுக்கும் புரிய வைக்கறோம்.

பிரதமர்: கிராமம் முழுவதற்கும் என் தரப்பிலேர்ந்து நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்க, சரியா?

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: எல்லார் கிட்டயும் சொல்லுங்க, எப்ப அவங்களோட முறை வருதோ, அப்ப கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கணும்னு.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்:  கிராமத்தில இருக்கற நம்ம பெண்மனிகள், நம்ம தாய்மார்கள்-சகோதரிகள், இவங்களை எல்லாம் இந்தப் பணியில அதிகபட்சம் இணைச்சுக்குங்க, ஆக்கப்பூர்வமான வகையில அவங்களையும் உங்க பயணத்தில சேர்த்துக்குங்க.

கிஷோரீலால்: சரிங்கய்யா.

பிரதமர்: பல வேளைகள்ல தாய்மார்கள்-சகோதரிகள் சொல்லும் போது, மக்கள் சீக்கிரத்துல ஏத்துக்குவாங்க.

கிஷோரீலால்: ஆமாங்கய்யா.

பிரதமர்: உங்க கிராமத்தில தடுப்பூசி முழுமையா போட்டாச்சுன்னா, நீங்க எனக்குத் தகவல் தருவீங்களா?

கிஷோரீலால்: ஆஹா, சொல்றேன் சார்.

பிரதமர்: கண்டிப்பா சொல்வீங்களா?

கிஷோரீலால்: கண்டிப்பா சார்.

பிரதமர்: நான் உங்க கடிதம் வருதான்னு காத்திட்டு இருப்பேன், சரியா?

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: சரி ராஜேஷ் அவர்களே, கிஷோரீலால் அவர்களே, ரொம்ப ரொம்ப நன்றி.  உங்க கூட பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது.

கிஷோரீலால்: நன்றி சார். நீங்க எங்க கூட பேசினதுக்கு ரொம்ப நன்றி.  உங்களுக்கும் பலப்பல நன்றிகள் ஐயா.

நண்பர்களே, என்றைக்காவது ஒரு நாள், உலகத்திற்கே ஆய்வுக்குரிய ஒரு விஷயமாக இது ஆகும், அதாவது பாரதநாட்டின் கிராமவாசிகள், நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் எல்லாம் இந்த கொரோனா காலகட்டத்தில், எந்த வகையில் தங்களின் வல்லமையையும், புரிதலையும் வெளிப்படுத்தினார்கள் என்று. 

கிராமவாசிகள் தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்கினார்கள், வட்டாரத் தேவைகளை அனுசரித்து C protocol ஐ ஏற்படுத்தினார்கள்.  கிராமவாசிகள் யாரையும் பட்டினியோடு இரவு உறங்கச் செல்ல அனுமதிக்கவில்லை, விவசாய வேலைகளையும் நிறுத்தி வைக்கவில்லை.  அருகில் இருக்கும் நகரங்களுக்கு பால்-காய்கறிகள் என அனைத்தும் ஒவ்வொரு நாள் காலையும் சென்று கொண்டிப்பதையும் கிராமங்கள் உறுதிப்படுத்தின. 

அதாவது அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டதோடு, மற்றவர்களையும் கவனித்துக் கொண்டார்கள்.  இதே போன்று தான் நாம் தடுப்பூசி இயக்கம் விஷயத்திலும் செயல்பட்டு வர வேண்டும்.  நாமும் விழிப்போடு இருக்க வேண்டும்,  மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.  கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு கிராமத்தின் இலக்காக இருக்க வேண்டும். 

நினைவில் கொள்ளுங்கள், நான் உங்களிடத்தில் சிறப்பாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.  உங்களிடத்திலே நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள் – ஒவ்வொருவரும் வெற்றி பெற விரும்புகிறார்கள் ஆனால், இந்த முடிவான வெற்றியின் மந்திரம் என்ன? 

முடிவான வெற்றியின் மந்திரம் என்னவென்றால் அது தான் – நிரந்தரச் செயல்பாடு.  ஆகையால் நாம் சற்றும் கூட சுணக்கமாக இருந்துவிடக் கூடாது, எந்தவொரு பிரமைக்கும் மனதிலே இடம் கொடுத்தலாகாது.  நாம் இடையறாத முயற்சிகள் மேற்கொண்டு, கொரோனா மீது வெற்றி பெற்றாக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe