October 23, 2021, 12:18 am
More

  ARTICLE - SECTIONS

  பெற்றோர்களே உஷார்! இணையத்தில் உலவும் ஆபத்து!

  woman with cell phone
  woman with cell phone

  இணையத்தில் நல்லவர்கள் போல் பேசி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை இணையத்திலோ, நேரிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை ஆங்கிலத்தில் ஆன்லைன் குரூமிங் என்றழைக்கிறார்கள்.

  இந்த பெருந்தொற்று காலத்தில் இணையத்தை பயன்படுத்தி குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான பிரச்னைகள் அதிகரித்திருப்பதாக, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

  இந்த கொரோனா காலகட்டத்தில் உக்ரைனில் 6 – 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், நான்கில் ஒருவரிடம் தங்கள் உடல் தொடர்பாக அந்தரங்கமான கேள்விகளை எழுப்பப்பட்டிருக்கின்றன அல்லது அவர்களை உடல் பாகங்கள் வெளிப்படும் விதத்தில் அந்தரங்கப் படங்கள் எடுத்து அனுப்புமாறு கேட்கப்பட்டடிருக்கின்றன என்று ஒரு புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்திருப்பதாக உக்ரைனைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான சைல்ட் ரெஸ்க்யூ சர்வீஸ் கூறுகிறது.

  12 வயதான இலோனா அடிக்கடி மிகவும் கவலையோடு இருப்பார். சில நேரங்களில் தன் அறையிலேயே பல நாட்களைப் கழிப்பார். உணவை எடுத்துக் கொள்லாமல், தன் குடும்பத்தில் யாருடனும் பேசாமல் இருப்பார்.

  net addicted - 1

  “இல்லையெனில் மிகை உணர்வில் அதிகம் சிரிப்பார், எப்போதும் என்னை கட்டியணைத்துக் கொள்வார்” என அவரது தாய் ஒக்சானா கூறுகிறார்.

  அவர்களது தனியுரிமையை காக்கும் பொருட்டு, அவர்களது வேண்டுகோளின் பேரில் இருவரின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது.

  சித்தரிக்கும் படம் மட்டுமே
  தன் மகளை ஆறு மாத காலமாக சமூக வலைத்தளம் மூலம் துன்புறுத்திய அடையாளம் தெரியாத தனிநபர் அல்லது ஒரு குழுவைக் குறித்து விளக்கத் தொடங்குகிறார் ஒக்சானா.

  கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை உக்ரைனில் தொடங்குவதற்கு முன், இது தொடங்கியது.

  “பதின்வயதுப் பிள்ளைகள் எப்படி தங்களின் சுதந்திரத்துக்கும், தங்களுக்கான ஒரு தனியுரிமைக்கும் சண்டை போடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நாங்களும் அச்சுதந்திரத்தை அவளுக்குக் கொடுத்தோம்.

  அவள் எப்போதும் பள்ளியில் சிறப்பாக செயல்படும் மாணவியாகவும், மற்றவர்களுக்கு உதவக் கூடியவராகவும், எங்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்பவராகவும் இருந்தாள். எனவே அவள் மீது அவநம்பிக்கை வரும்படி எதுவும் இல்லை”

  எப்போதும் நேர்மறையாகவும், நட்பாகவும் இருக்கும் இலோனாவிடம் ஒரு மாற்றத்தை கண்டார் அவரது தாயார். அம்மாற்றம் இலோனாவுக்கு மொபைல் போன்களுடனான நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து ஆரம்பமாகிறது.

  இலோனா மொபைல் பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என அவரது தாயார் கூறும் போதெல்லாம், இலோனா கடுமையாக எதிர்வினையாற்றினார்.

  net - 2

  “அவள் மிக அதிகமாக, அடிக்கடி தன் மொபைல் போனை பார்க்கத் தொடங்கினாள். அவள் இரவில் கூட யாருடனொ மொபைல் போனில் செய்தி அனுப்பி பேசிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன்” என்கிறார் ஒக்சானா.

  பிறகு எந்தவித எச்சரிக்கையுமின்றி இலோனாவின் மனநலம் குன்றத் தொடங்கியது.

  தனக்கு வெளியே செல்லப் பிடிக்கவில்லை என, இலோனா தன் அறையிலேயே முடங்கிக் கிடக்கத் தொடங்கினார். தனக்கு ஏதோ மாதிரி இருக்கிறது என தன் தாயிடம் கூறுவார், ஆனால் என்ன பிரச்னை என கூறமாட்டார்.

  “உக்ரைனில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் சில வாரங்களில் எல்லாம் ஒன்றாக நடந்தது. நானும் என் கணவரும் எங்களின் வேலை வாய்ப்பு மற்றும் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்தோம். அந்த நேரத்தில் எங்கள் மகளைக் குறித்து அதிக கவனம் செலுத்த முடியவில்லை.

  “பிறகு ஒரு நாள் இலோனா அழுது கொண்டே என்னிடம் வந்தாள். நீ உடல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளானாயா? எனக் கேட்டேன். “இல்லை அம்மா, ஆனால் நான் அப்படி ஒரு பிரச்னைக்கு ஆளாகி இருக்கக் கூடும்” என கூறினார் இலோனா.

  மெல்ல இலோனாவை சமாதானப்படுத்தி, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள ஒக்சானாவுக்கு சில நாட்கள் தேவைப்பட்டது.

  இலோனா தான் ஒரு 15 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராமில் நண்பரானதாகக் கருதுகிறார். குறைந்தபட்சம் அவரது இன்ஸ்டாகிராமின் புரொஃபைல் படம் அதைத்தான் காட்டுகிறது.

  அந்த படத்தில் இருப்பவர் பார்க்க அழகாக இருக்கிறார். அவர் இலோனாவை பெரிதும் புகழ்ந்து இருக்கிறார். மேலும் இலோனா எளிதில் ஒரு மாடலாகிவிடலாம் எனவும் கூறியுள்ளார். சில வாரங்களுக்கு காணொளி, இசை என இரவு நேரங்களில் எல்லாம் செய்தி பரிமாற்றம் செய்திருக்கிறார்கள்.

  net child - 3
  சித்தரிக்கும் படம் மட்டுமே

  திடீரென ஒரு நாள் இலோனாவுக்கு அந்த நண்பரிடமிருந்து பதில் வருவது நின்றது. இலோனா தன்னை புகழ்ந்த, தனக்கு நெருக்கமான அந்த உறவை திடீரென இழந்தார். இலோனா தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தார். தான் செய்த தவறு என்னவென தன்னை தானே கேட்டுக் கொள்ளத் தொடங்கினார் அச்சிறுமி. ஒருநாள் திடீரென அந்த நண்பர் பதிலளித்தார்.

  “நீ என்னை விரும்புவதாகத் தெரியவில்லை. அப்படி என்னை நேசிக்கிறாய் எனில், நீ என்னோடு இன்னும் இணக்கமாக, நெருக்கமாக இருந்திருப்பாய். அதை நீ நிரூபிக்கத் தயாரா?

  முதலில் இலோனாவின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிருமாறு கூறியுள்ளார்.

  “உன் பிறந்தநாளுக்கு பரிசளிக்கப்பட்ட பைஜாமாக்களை காட்ட முடியுமா?”

  “நீ உடற்பயிற்சி செய்வதற்கு முன் எப்படி வார்ம் அப் செய்வாய் என காணொளியை அனுப்ப முடியுமா?” என்றெல்லாம் இலோனாவிடம் கேட்டிருக்கிறார்.

  நாளாக நாளக, அந்த நண்பர், இலோனாவை உள்ளாடையோடு படமெடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார், பிறகு உள்ளாடை இல்லாமல் படமெடுத்து அனுப்புமாறும் கேட்டுள்ளார். பிறகு சுய இன்பம் காண்பது போல ஒரு நேரலை காணொளி அல்லது குளிக்கும் நேரலை காணொளிகளை அனுப்பச் சொல்லி இருக்கிறார்.

  இலோனா மறுத்த உடன், அதுவரை பேசப்பட்டு வந்த முறை தடாலடியாக மாறியது.

  தான் கூறுவதைக் கேட்கவில்லை எனில், இதுவரை இலோனா பகிர்ந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றப்படும் எனவும், இலோனாவின் பெற்றோர்களிடம் பகிரப்படும் எனவும் மிரட்டத் தொடங்கினர்.

  Screenshot 2021 0628 120508 - 4

  மேலும் இதுவரை இலோனா பகிர்ந்தது உக்ரைன் சட்டப்படி தவறு எனவும், இலோனா குறித்து காவலர்களிடம் புகாரளிக்க முடியும் எனவும் மிரட்டியுள்ளனர்.

  பல்வேறு கணக்குகளிலிருந்து, இலோனாவை மிரட்டும் தொனியிலான செய்திகள் வரத் தொடங்கின. இலோனா எங்கு வசிக்கிறார், எந்த பள்ளியில் படித்தார் என்கிற விவரங்கள் எல்லாம் தங்களுக்குத் தெரியும் என மிரட்டல் செய்திகள் குவியத் தொடங்கின.

  இச்செய்திகள் ஒரு நபரிடமிருந்து வரவில்லை, ஒரு குழுவிடமிருந்து வந்திருக்கலாம் என ஒக்சானா சந்தேகிக்கிறார்.

  இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமனால் தன்னோடு ஒரு டேட்டுக்கு வருமாறு அழைப்பு வருகிறது. இலோனாவை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள் எனவும், பயப்படக் கூடாது என இலோனாவுக்கு அனுப்பப்பட்ட செய்தி கூறுகிறது.

  “நல்லவேளை இந்த நேரத்தில்தான் அவள் என்னிடம் வந்து இது குறித்துப் பேசினாள்” என்கிறார் ஒக்சானா.

  “அவர்களைச் சந்தித்திருந்தால் அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதை என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை”

  சூழலால் ஏற்படும் மோசமான விளைவுகள்

  இணையத்தில் நல்லவர்கள் போல் பேசி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை இணையத்திலோ, நேரிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை ஆங்கிலத்தில் ஆன்லைன் குரூமிங் என்றழைக்கிறார்கள். அப்பிரச்னையில் சிக்கியவர்களில் இலோனாவும் ஒருவர்.

  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், லைக், டிக்டாக் போன்ற பல செயலிகளின் அல்காரிதம்கள், நம் பாலினம், வயது, இருக்கும் இடம், நம் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு நம் நண்பர்களை எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.

  அதே நேரத்தில் இது போன்ற இணைய விஷமிகளுக்கும் இளைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களை மிரட்ட அதே அல்காரிதம்கள் பயன்படுகின்றன.

  இணைய விஷமிகள் உடனடியாக, தாங்கள் இலக்கு வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்களை பல்வேறு இணைய மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து சேகரித்துவிடுகிறார்கள்.

  அதன் பிறகு இலக்கு வைக்கப்பட்டிருப்பவரோடு அதிகம் ஒத்துபோகும் ரீதியில் விஷயங்களை வைத்து ஒரு கணக்கை தொடங்குகிறார்கள். அது இலக்குவைக்கப்பட்டவரின் பார்வையில் படும் போது, அட நம்மைப் போல் ஒருவரா என்கிற ரீதியில் ஈர்க்கப்படுகிறார்.

  ஒருவரின் நிலை அல்லது ஒருவரது உணர்வு குறித்த கேள்விகளை (உதாரணமாக உங்கள் மனதில் இருப்பது என்ன? என்கிற ஃபேஸ்புக்கில் கேட்கப்படும் கேள்வியை) பயன்படுத்துவது எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை விஷமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள உதவும் என குழந்தைகள் உரிமை நல குழுக்கள் கூறுகின்றன.

  குறிப்பாக உணர்வு ரீதியில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுடன் இந்த இணைய விஷமிகள் தங்களை இணைத்துக் கொள்ள உதவும்.

  இந்த பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுக்க உள்ள லட்சக் கணக்கான சிறார்கள் அதிக நேரத்தை இணையத்தில் செலவழிக்கின்றனர். மெய்நிகர் வகுப்பறையில் பாடம், கேமிங், தங்கள் நண்பர்களை சந்திப்பது என எல்லாமே இணையத்தில் நடக்கின்றன.

  எனவே இணையத்தில் குழந்தைகளைத் துன்புறுத்துவதும் அதிகரித்திருப்பதாக அரசு சாரா சர்வதேச அமைப்பான ‘தி இன்டர்நெட் வாட்ச் ஆர்கனைசேஷன்’ கூறுகிறது.

  girl - 5

  குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவழித்தாலும் அவர்கள் தனிமையாகவே உணர்கின்றனர் என சர்வதேச சைபர் குற்ற காவல்துறையினர் கூறுகிறார்கள்.

  ஊரடங்கு காலத்தில் 6 – 17 வயது வரையிலானவர்களிடம் இணையத்தில் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக, உக்ரைனின் சைல்ட் ரெஸ்க்யூ சர்வீஸ், உக்ரைனின் குழந்தைகள் உரிமை ஆணையத்துடன் இணைந்து 7000-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நேர்காணல் நடத்தியது.

  அதில் நான்கில் ஒரு குழந்தை, தாங்கள் உடல் சார்ந்த அந்தரங்கமான கேள்விகளை எதிர்கொண்டது அல்லது தங்கள் உடல் பாகங்கள் தெரியும் விதத்தில் அந்தரங்கப் படங்களை அனுப்புமாறு பெருந்தொற்று காலத்தில் கூறப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

  இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் கவலையளிக்கிறது என இவ்வாய்வின் தலைமை ஆராய்ச்சியாளர் முனைவர் ஒலெனா கப்ரால்ஸ்கா விளக்குகிறார்.

  10 – 17 வயதுக்குட்பட்டவர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார். சிலரை கேமரா முன் சுய இன்பம் காணுமாறு கூறுகிறார்கள் மற்றும் சிலரை முன்பின் தெரியாத நபர்களை சந்திக்குமாறு கூறுகிறார்கள்.

  இதில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பாதிப்புக்குள்ளான குழந்தைகளில் பாதி பேர் தங்களுக்கு நேர்ந்த சம்பவத்தைக் குறித்து யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதுதான் என்கிறார் ஆராய்ச்சியாளர் கப்ரால்ஸ்கா.

  குழந்தைகள் இணையத்தில் இருக்கும் ஆபத்தான சூழலை அடையாளம் காண முடியாமல் போகலாம். அது அவர்களை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கலாம் என்கிறார்.

  ஸூம் பிரச்னை

  ஊரடங்கினால் உக்ரைனில் உள்ள இளைஞர்கள் இணையத்தில் கல்வி பயில்வது மற்றொரு பிரச்னையைக் கொண்டு வந்திருக்கிறது.

  “ஸூம் அழைப்புகளிள் தகாத காணொளிகள் மற்றும் படங்கள் பகிரப்படுவது கணிசமாக அதிகரித்திருக்கின்றன” என்கிறார் சைபர் காவல் படையின் முதன்மை ஆய்வாளர் கேப்டன் ரோமன் சோச்கா. இதை ஆங்கிலத்தில் ஸூம் பாம்பிங் என்கிறார்கள். “அப்படிப்பட்ட வழக்குகளில் ஸ்கிரீன் ஷாட்கள் இல்லை என்றாலோ, கூடுதல் ஆதாரங்கள் இல்லை என்றாலோ விசாரிப்பது மிகவும் கடினம்”

  கீவில் உள்ள லொகோஸ் மேனிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மரியாவின் மகனின் இணைய வகுப்பறையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தொடர் ஸூம் பாம்பிங்களின் போது இருந்தார். இவையனைத்தும் ஒரு மாத காலத்தில் நடந்துள்ளன.

  முதல் முறை இணைய வகுப்பறையில் மூன்று அடையாளம் தெரியாத புதிய நபர்கள் இணைந்தனர். வகுப்பறையில் இருந்த குழந்தைகளின் பெயர்களை உரக்கக் கத்தினர். வகுப்பாசிரியர் அதிர்ந்து போனார், அவர் திடீரென தவறுதலாக காணொளி கூட்டத்திலிருந்து வெளியேறினார். அந்த மூன்று பேருடன் குழந்தை தனியாக சிக்கிக் கொண்டனர்.

  net addict - 6

  இரண்டாம் முறை இதே போல நடந்த தாக்குதலில் எப்படி தன் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆபாசப் படம் காட்டப்பட்டது, எப்படி ஒரு மனிதர் கேமரா முன் நிர்வாணமாக நின்று சுய இன்பம் கண்டார் என மரியாவின் 11 வயது மகன் தன் தாயிடம் விளக்குகிறார்.

  தன் மாணவர்களில் ஒருவர் தான் காணொளி வகுப்பறையின் கடவுச் சொல்லை அது போன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களிடம் பகிர்ந்திருக்க வேண்டும் என நம்புகிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆண்ட்ரி ப்ருடாஸ்.

  அவர் இது போன்ற பல சம்பவங்கள் தொடர்பாக சைபர் காவலர்களிடம் புகாரளித்துள்ளார். ஆனால் நடந்த 15 சம்பவங்களையும் குறிப்பிடவில்லை.

  “ஸூம் பாம்பிங் என்பது இன்று எல்லா பள்ளிகளிலும் மிகவும் சகஜமாகிவிட்டது” என்கிறார் அவர். பல குழந்தைகளின் பெற்றோர்களும் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க தயாரக இல்லை என்கிறார் மரியா.

  சமூக வலைதளங்களை பாதுகாப்பான இடமாக்க வேண்டும்

  மரியாவின் மகன் உட்பட அவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு நடந்தது அநாகரீகமான வெளிப்படுத்தல் (Act of Indecent Exposure). இது ஒரு பெரிய குற்றம், ஆனால் இதன் பேரில் எந்த வழக்கும் தொடுக்கப்படவில்லை.

  இணையத்தில் ஒரு குழந்தையை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பது மற்றும் விநியோகிப்பது கடந்த பிப்ரவரி மாதம் தான் உக்ரைனில் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டது. எனவே இலோனாவுக்கு நேர்ந்த பிரச்னை அப்போது சட்டப்படி கிரிமினல் குற்றமல்ல.

  “நாங்கள் அவளின் செல்பொன் எண்ணை மாற்றிவிட்டோம். அவளது எல்லா சமூக ஊடக கணக்குகளையும் டெலிட் செய்துவிட்டோம். ஆனால் இப்போதும் வெளியே செல்லவோ, வீட்டில் தனியாக இருக்கவோ பயப்படுகிறாள்” என இலோனாவின் தாய் கூறுகிறார்.

  “இப்போதும் தனக்கு நேர்ந்ததைக் குறித்து அவள் வருத்தப்படுகிறாள். இது அவளின் எதிர்கால உறவுமுறைகளையும், அவள் மனிதர்களை நம்புவதையும் பாதிக்கும்” என்கிறார் அவளது தாயார்.

  இணைய துன்புறுத்தலில் ஒரு பாகமாக, புகைப்படங்களை இணையத்தில் காலவரையறையின்றி பரப்பலாம். இது பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கவலைக்குள்ளாக்கும். என்கிறார் குழந்தைகள் சிகிச்சை நிபுணரான ஒலெனா நாகுலா.

  இது தூக்க குறைபாடு, தீடீர் மாரடைப்பு, தற்கொலை எண்ணம், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வது போன்றவைகளை மேம்படுத்தும் என்கிறார் மருத்துவர் நாகுலா.

  இதற்கு யார் பொறுப்பு?

  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் போன்ற நிறுவனங்கள், தங்கள் தளத்தை இளைஞர்களுக்கு பாதுகாப்பான தளமாக மாற்ற முயற்சித்து வருவதாகக் கூறுகின்றனர்

  தகாத உள்ளடக்கங்களைப் பதிவிடுவோரை கண்டுபிடித்து, அப்பதிவுகளையோ, பதிவிட்ட நபரையோ நீக்கும் வகையில் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தகாத உள்ளடக்கங்களைப் பதிவிடுவதையோ, பகிர்வதையோ தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குழந்தைகள் உரிமை குழுக்கள் கூறுகின்றன.

  இதில் மிக முக்கியமான விஷயம் வயதை சரிபார்ப்பதுதான். பெரும்பாலான சமூக ஊடகங்களில் கணக்கைத் தொடங்க 13 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். சட்டப்படி 13 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் தரவுகளை, அவர்களது பாதுகாவலர்களின் அனுமதியின்றி நிறுவனங்கள் சேகரிக்க முடியாது.

  உக்ரைனில் 6 – 11 வயதுக்கு உட்பட்ட மூன்றில் ஒரு குழந்தையிடம் இன்ஸ்டாகிராம் அல்லது டிக்டாக் கணக்குகள் இருக்கின்றன என்று சைல்ட் ரெஸ்க்யூ சர்வீஸ் அமைப்பின் அறிக்கை சொல்கிறது. குழந்தைகள் போலியான பிறந்த நாளைப் பதிவு செய்கிறர்கள் அல்லது, பெரியவர்களிடம் ஒரு கணக்கை தொடங்கிக் கொடுக்கச் சொல்கிறார்கள்.

  குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் என்ன செய்யலாம்?

  கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட வாய்ப்புள்ளது.

  குழந்தைகள் தங்களின் நண்பர்களுடன் இணைவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும், அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் எதைக் குறித்தும் பேச பெரியவர்கள் அவசியம் உடனிருக்க வேண்டும்.

  குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதுகாப்பவர்கள், அவர்கள் என்ன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள், சமூக ஊடகங்களில் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்கலாம்.

  அவர்கள் எந்தப் படங்களைப் பார்த்தார்கள், எதைப் பகிர்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதிப்பது நல்லது.

  ஒரு பதின்வயது சிறுமி அல்லது சிறுவனின் ஆன்லைன் வாழ்க்கை மீது நம்பிக்கை வைப்பதும், அது குறித்து உண்மையான அக்கறை செலுத்துவதுமே அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியம்.

  குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்திய அரசின் 1098 எனும் உதவி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,578FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-