Home அடடே... அப்படியா? குடும்பத்தோடு பயணம்: ஆட்டோவை சொகுசு காராக மாற்றிய மாற்றுத்திறனாளி!

குடும்பத்தோடு பயணம்: ஆட்டோவை சொகுசு காராக மாற்றிய மாற்றுத்திறனாளி!

உலகில் பிறந்த எல்லோரும் எத்தனையோ விஷயங்களைச் செய்ய ஆசைப்படுகிறார்கள், பலர் முயற்சிக்கிறார்கள், சிலருக்கு மட்டுமே நினைத்தது நிறைவேறுகிறது.

அப்படித்தான் நினைத்ததை நிறைவேற்றி இருக்கிறார் திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த 46 வயதான ரா. அருண்.

அருண் ஒரு மாற்றத் திறனாளி. ஐந்து வயதாக இருக்கும் போது போலியோவால் அவரது இடது கால் பாதிக்கப்பட்டது. சிறு வயதிலேயே அவருக்கு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் எப்படியோ தொற்றிக் கொண்டது.

ஆனால் குடும்ப வறுமை காரணமாக போலியோ பாதிப்பிற்கு உரிய சிகிச்சைகளைக் கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை. பள்ளி படிப்பையும் தொடர முடியாத சூழல்.

அவரது மொத்த குடும்பமும் பிழைப்புக்காக பல்வேறு வேலைகளை செய்தனர். அருணும் ஒருகட்டத்தில் லோடு ஆட்டோவை ஓட்டத் துவங்கினார்.

“மனைவி, குழந்தைகள் மற்றும் தம்பியின் குடும்பம் என கூட்டுக் குடும்பமாக நாங்கள் வசித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வெளியே அழைத்துச் செல்ல ஒரு வாகனம் தேவைப்பட்டது. இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க முடியாது.

சொந்தமாக ஒரு கார் வாங்கி, குடும்பத்தினரை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால், நான் மாற்றுத்திறனாளி என்பதால் கார் ஓட்டுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது” என தமது நிலையை விளக்கினார்.

“காருக்கு பதிலாக வேறு என்னென்ன வாகனங்கள் இருக்கின்றன. அவற்றில் எதையெல்லாம் நம்மால் இயக்க முடியும் என ஆராயத் தொடங்கினேன். அப்போது தான், ‘கார் ஓட்ட முடியாமல் போனால் என்ன, நம்மால் தான் ஆட்டோ ஓட்ட முடியகிறதே” எனத் தோன்றியது.

“மூன்று சக்கர வாகனமான ஆட்டோவை இயக்க இரு கைகள் மற்றும் ஒரு கால் போதுமானவை. எனவே, ஆட்டோவையே கார் போல மாற்றும் யோசனை வந்தது” என பெருமையாக நினைவுகூர்கிறார்.

“சொகுசு காரில் உள்ள அனைத்து வசதிகளும் அந்த ஆட்டோவில் இருக்க வேண்டும் என நினைத்தேன். என்னிடம் இருந்த ஆட்டோவையே இதற்கு பயன்படுத்த முடிவு செய்தேன்

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் கார் மற்றும் ஆட்டோ மறுவடிவமைப்பு குறித்து யூடியூபில் தகவல்களை திரட்ட ஆரம்பித்தேன். வாகனங்களை மறுவடிவமைப்பு செய்யும் நிறுவனங்களிடம் பேசினேன்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன மறுவடிவமைப்பு செய்யும் நபரிடம் தொடர்பு கொண்டு, எனது ஆசையையும், உடல் ரீதியான பிரச்னைகளையும் கூறினேன். எனது தேவைகளை புரிந்து கொண்டு, எனக்காகவே ஆட்டோவை மறுவடிவமைப்பு செய்தார் அவர். இப்படித்தான் இந்த அமால் டுமால் ஆட்டோ உருவானது’ என கூறுகிறார் அருண்.

மேலும் “இந்த ஆட்டோவை உருவாக்க, 1.5 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும், தமது ஆசையையும், நிலையையும் புரிந்து கொண்ட வாகன வடிவமைப்பாளர், கொடுத்த தொகைக்கும் கூடுதலாகவே ஆட்டோவை உருவாக்கியுள்ளதாகும்” நெகிழ்கிறார் அருண்.

காரில் உள்ளது போன்ற சொகுசான இருக்கைகள், ஏர் கூலர் ஃபேன், எல்சிடி தொடு திரை, ஸ்பீக்கர்கள், ரியர் கேமரா, எல்இடி விளக்குகள், தானியங்கி கதவுகள், பவர் விண்டோ, ஹேண்ட் ப்ரேக் என நவீன வசதிகள் அனைத்தும் இந்த ஆட்டோவில் இருக்கின்றன.

“நவீன வசதிகள் கொண்ட இந்த ஆட்டோவில், எனது குடும்பத்தினரோடு வெளியே சென்று வருகிறேன். ஆரம்பத்தில், ‘ஏன் இதற்காக இவ்வளவு செலவு செய்கிறீர்கள்?’ என கேட்ட குடும்பத்தினர், இப்போது போட்டிபோட்டுக்கொண்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொள்கின்றனர்”.

இடது கால் பாதிப்பால் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை தடைபட்டாலும், குடும்பத்தினரை ஒன்றாக வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆசையை இந்த ‘அமால் டுமால்’ ஆட்டோ நிறைவேற்றிவிட்டது’ என மன நிறைவோடு தெரிவிக்கிறார் அருண்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version