
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவில், கோமதி அம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது. ஆனால், தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற இந்து முன்னணியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணி தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து, இந்து முன்னணிமாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார், மாநில செயலர் கா.குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 75 பேர் கைது செய்யப் பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடித்தபசு திருவிழா கொண்டாடப் பட்டது. ஆயினும், கொரோனாவைக் காரணம் காட்டி பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து, கோயில் வாசல் பூட்டப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை பக்ரீத் தொழுகை நடத்த அனுமதி அளித்த தமிழக அரசு, கோவில்களை மட்டும் பூட்டுவது பாரபட்சமானது எனக் கூறி ஆலய நுழைவுப் போராட்டத்தை இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்தனர்.
இதன்படி, இன்று காலை சங்கரன்கோவிலில் இந்து முன்னணி அமைப்பினர் திரண்டனர். இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், துணைத்தலைவர் முருகன் , திருமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இசக்கிமுத்து, சங்கரன்கோவில் நகர தலைவர் விக்னேஷ், செங்கோட்டை ஒன்றிய தலைவர் குளத்தூரான், தென்காசி நகரத்தலைவர் நாராயணன் உட்பட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்!
தொடர்ந்து தேரடியிலிருந்து கோவிலை நோக்கிச் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!
இதனைத் தொடர்ந்து இந்துமுன்னணி நிர்வாகிகள் 75பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் சங்கரன்கோவில் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நேரம், சங்கரன்கோயில் மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிப் போன கோமதியம்மனின் தரிசனத்துக்காக கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோவில் பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டு, மிகுந்த மனவேதனையுடன் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சாபம் விட்டபடியே திரும்பிச் சென்றனர்.