
சதுரகிரி மலைக்கு நாளை பிரதோஷம் முதல், பௌர்ணமி நாள் வரை, 3 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாளில் இருந்து, தொடர்ச்சியாக 4 நாட்கள் என, மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அனைத்து கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இந்த வாரமும் கோவில்கள் திறப்பதற்கான தடை தொடர்கிறது. எனவே நாளை வெள்ளி கிழமை, மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை ஆவணி மாத, வளர்பிறை பிரதோஷம் நாள் என்பதால் சதுரகிரிமலைக்குச் செல்ல பக்தர்கள் தயாராகிவந்த நிலையில், நாளை (20ம் தேதி) வெள்ளி கிழமையில் இருந்து, பௌர்ணமி நாளான (22ம் தேதி) ஞாயிறு கிழமை வரை, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
திங்கள் கிழமை பக்தர்கள், மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
நாளை பிரதோஷம், சனிக் கிழமை ஓணம் பண்டிகை, ஞாயிறு கிழமை பௌர்ணமி நாட்களில், கோவில்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால், இதனை நம்பி இருக்கும் பூ மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், சிறு வியாபாரிகள் உட்பட பலதரப்பட்டவர்களும் விடுமுறை நாட்களில் கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.