October 19, 2021, 8:47 am
More

  ARTICLE - SECTIONS

  பாவத்தை பொடியாக்கி பாதம் சேர்க்கும் புருஷோத்தமன்!

  krishnar 1
  krishnar 1

  கீதை அருளிய கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தார்.

  நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, தாமரை தாங்கி, மார்பில்
  ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி அணிந்து சகலவிதமான ஆபரணங்களையும் பூண்டு தோன்றினார். பின்னர் தேவகியின் வேண்டுகோளுக்கு இணங்கி, தன்னைச் சிறு குழந்தையாக உருமாற்றி பாலகிருஷ்ணராக அவதாரம் செய்தார்.

  எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம்
  மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.

  பக்தர்களைக் காக்கவும், கொடியவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகம் தோறும் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.

  கிருஷ்ணர் ஒருமுறை நாரத மகரிஷிக்கு உபதேசிக்கும்போது, “எனதருமை நாரதா! உண்மையில் நான் என்னுடைய வைகுண்டத்தில் வசிப்பதில்லை. என்னுடைய திருநாமத்தை
  எப்போதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் துாய பக்தர்களின் நெஞ்சில் வாழ்கிறேன்,” என்றார்.

  கலிசந்தரண உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது போல், “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ; ராம ராம ஹரே ஹரே” என்னும் பதினாறு வார்த்தைகள் அடங்கிய கிருஷ்ணரின் திருநாமத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் ஒருவர் இக்கலியுகக் கேடுகளில் இருந்து விடுபடுவதுடன் அவரது பூரண அருளைப் பெறலாம்.

  மந்திரம் என்பதை ‘மன்+திரம்’ என பிரிக்க வேண்டும். ‘மன்’ என்றால் மனம்;’ திரம்’ என்றால் விடுவிப்பது என்பதாகும். அனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால் ‘ஹரே கிருஷ்ண” மந்திரத்திற்கு மகாமந்திரம் என்று பெயர்.

  கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் நள்ளிரவு வரை உண்ணாவிரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். பகவத் கீதை படிக்க வேண்டும்.கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரைப் பிரார்த்திக்க வேண்டும்.

  குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணரான குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்லோகங்களே நாராயணீயம் ஆகும். இதில், 1036 ஸ்லோகங்கள் உள்ளன. கிருஷ்ண ஜெயந்தியன்று இதைப் படிப்பதன் மூலம் கேட்ட வரம் கிடைக்கும்.

  மகாவிஷ்ணுவே! வரையறைகளுக்கு அப்பாற்பட்டவனே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படும் உயர்வான சச்சிதானந்த வடிவம் கொண்டவனே! கோபியரின் மனங்களில் இருப்பவனுமாகிய உன்னை, துன்பம் நீங்க அடியேன் பக்தியை வணங்குகிறேன்.

  மும்மூர்த்திகளில் உயர்ந்து திகழும் சர்வேஸ்வரா! கருமை நிறக்கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பது நீயே என்று சொல்லப்பட்டுள்ளது. உன்னையே
  *சங்கரரும் அதிகமாக ஆராதித்துப் போற்றியுள்ளார். உன் திருப்பாதங்களைப் போற்றுகிறேன்.

  தேவாதி தேவனே! எல்லாருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மையில்லாத பொருட்களில் விருப்பம் கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா இன்பத்தையும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென, உன் பாதங்களை வணங்குகிறேன்.

  எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடலாலும், மொழியாலும், உள்ளத்தாலும் இப்பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ அத்தனையையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன்.

  உன்னிடம் சரணடைந்தவர்கள், எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். தேவாதிதேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.

  ஜகந்நாதா! ஹரி! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு முதலியவற்றையும், நண்பர்கள், எதிரிகளையும் கூட, உன்னுடைய உருவமாகவே உள்ளத்தில் நினைக்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன்.

  பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால், வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால் மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.

  பெருமாளே! கலிகாலத்தில், உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலுமே போதும்! உன் அருளைப் பெற்று விடலாம் என்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும், இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர்.

  பாக்கியவசத்தால் இந்தக் கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக்கொள்வாய்! புருஷோத்தமா! கங்கா நதியில் குளியல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்ராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளைப் பெற்றுத்தரும்.

  இந்த எட்டு மார்க்கங்களிலும் என்னை ஈடுபடுத்தி, உன்னை அடைய அருள் செய்வாயாக.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-