- Ads -
Home சற்றுமுன் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட விழா… இந்து விடுதலைக்காக இப்போது!

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட விழா… இந்து விடுதலைக்காக இப்போது!

dr krishnasamy
dr krishnasamy
  • விநாயகர் சதுர்த்தி!
  • இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா!
  • சொத்தை காரணங்களை காட்டி தடை செய்யக் கூடாது!!

இந்திய தேசத்தின் உள்ளும், எல்லைக்கு அப்பாலும் உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான விழா ’விநாயகர் சதுர்த்தி’ ஆகும். மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பத்து தினங்கள் தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் அலங்கரித்து, அவற்றை ஆடல் பாடலுடன் எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதே ‘விநாயகர் சதுர்த்தி’யின் சிறப்பம்சமாகும்.

இந்துக்களின் ஒவ்வொரு விழாவிற்குள்ளும் ஏதாவது ஒரு நல்ல அடிப்படை அம்சம் அல்லது காரணம் ஒளிந்திருக்கும். இறை நம்பிக்கையைத் தாண்டி இந்துக்களின் ஒற்றுமையையும், தேச ஒற்றுமையையும் வலியுறுத்துவதே விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாகும். இந்த உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளாததால், இது குறிப்பிட்ட ஒரு தேசிய கட்சி அல்லது ஒரு முன்னணி அல்லது ஒரு சங்கத்தின் விழாவாக மட்டுமே சிலர் குறுக்கிப் பார்க்கிறார்கள். அது தவறு.

கரோனாவை காரணம் காட்டி ஆண்டுதோறும் கோடான கோடி இந்துக்களால் அனுசரிக்கப்படக் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் அடியோடு ரத்து செய்வது என்பது முறையானது அல்ல. கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், சில கூடுதல் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

vinayaka-chaturthi-madurai1

அதை விடுத்து விநாயகர் சதுர்த்தியை வீட்டிற்குள் வைத்துத் தான் கொண்டாட வேண்டும்; வெளியில் சிலை வைக்கவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லை என மாநில அரசு தெரிவிப்பதை உள்நோக்கம் கொண்டதாகவே கருத முடியும். நாங்கள் ’திராவிட அரசு’; ’விநாயகர் சதுர்த்தி’ என்பது ’ஆரிய விழா’ என்றெல்லாம் ’இன வேறுபாடு’ காட்டி அதற்குத் தடை விதிக்கப்படுமேயானால் அது அபத்தமாகிவிடும்.

விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் கொண்டாடப்படுவதற்கான அடிப்படை அம்சங்களையும்; சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய அரசியல் சூழ்நிலைகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். இந்தியாவில் ஆயிரமாயிரம் சாதிகள்; சாதிக்கொரு வீதி; வீதிக்கொரு சாமி-கோவில் என்றும்; பிராமண கடவுள், தமிழ் கடவுள், கன்னட கடவுள், தெலுங்கு கடவுள், ஆரியக் கடவுள், காரியக் கடவுள் என்றும் பிரிந்து கிடந்த இந்திய மக்களையெல்லாம் வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் ’இந்து’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வர கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்பட்டதே ’விநாயகர் சதுர்த்தி விழா’ ஆகும்.

ALSO READ:  திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

விநாயகர் சதுர்த்தியால் இந்துக்களும்; இந்துக்களால் விநாயகர் சதுர்த்தியும் அடையாளப்படுத்தப்படுகிறது. சிலர் விவரம் தெரியாமல் இவ்விழா ’வடக்கிலிருந்து வந்தது, கிழக்கிலிருந்து வந்தது’ என எக்காளம் பேசுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி வெறும் கடவுள் பக்தியை மட்டும் உருவாக்க வந்ததல்ல. இந்தியத் தேசத்தின் மீதான பக்தியை உருவாக்கவும்; கிழக்கிந்திய கம்பெனி வழியாக இந்தியத் தேசத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கான ஒரு போர்த் தந்திரமாகவுமே ’விநாயகர் சதுர்த்தி விழா’ நாடெங்கும் பிரபல்யப்படுத்தப்பட்டது.

யார் யாரோ செய்த தியாகங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் பெற்ற சுதந்திரத்தால் சொகுசாக ஆட்சியில் அமர்ந்து கொண்டவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய இந்திய அரசியல் சூழல் தெரிய வாய்ப்பில்லை. மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து, இந்திய மண்ணை அபகரித்துக் கொண்ட துருக்கியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள்; கிபி 1500-க்கு பிறகு ஐரோப்பியாவில் இருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமித்த போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்; இந்தியாவை துண்டு துண்டாக ஆட்சி செய்துகொண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் எனப் பல ஆதிக்க-அதிகார சக்திகள் ஒன்று சேர்ந்து ஏழை, எளிய இந்திய மக்கள் மீது சவாரி செய்து வந்தனர்.

ALSO READ:  மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!

90 சதவீதத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் அறியாமையிலும், வறுமையிலும் அல்லல்பட்டு, தங்கள் வாழ்க்கையை வெறுமனே கழித்துக் கொண்டிருந்தார்கள். தாங்கள் அடக்கப்படுகிறோம்; சுரண்டப்படுகிறோம்; ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரிந்திருந்தாலும் எதிர்த்துப் போராடுவதற்கோ, ஒன்றுபடுவதற்கோ போதிய மனவலிமை இல்லாமல் இருந்தார்கள். 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, இந்திய மக்கள் மீது, குறிப்பாக இந்துக்கள் மீதான ஆங்கிலேயரின் பிடி மேலும் இறுகியது. மத ரீதியான காரணங்களைத் தவிர, 20 பேருக்கு மேல் கூட்டம் கூடவோ, பேசவோ தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும், மதரீதியாக நிறுவனப்படுத்தப்பட்டு விழிப்புடன் ஒன்றுபட்டுப் போராடியதாலும்; ஆட்சியிலிருந்த இஸ்லாமிய மன்னர்களின் பின்புலத்தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ’தொழுகை’ நடத்துவதற்கான உரிமையை ’இஸ்லாமியர்கள்’ மீட்டுக் கொண்டார்கள்.

ஆனால், இந்த மண்ணின் பூர்வீக குடிமக்களான இந்துக்களுக்கு நிறுவனப்படுத்தப்பட்ட மதமோ, அமைப்போ, வலுவான அரசியல் பின்புலமோ இல்லாததால் அவர்களால் ஒன்றுபடவும் முடியவில்லை; போராடவும் முடியவில்லை; சாதாரண வழிபாட்டு உரிமைகளைக் கூட நிலை நிறுத்திக் கொள்ளவும் முடியாமல் நிர்க்கதியாய் நின்றார்கள்.

நாளுக்கு நாள் இந்துக்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தன; இந்துக்களின் பெரும்பாலான மத சம்பிரதாய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவில் பல பகுதிகளில் கட்டாய மதமாற்றங்கள் நடந்தன. மதம் மாறியவர்களும் ’உண்மையாக விசுவாசத்துடன் இல்லை’ என முத்திரை குத்தப்பட்டு கோவா மாநிலத்தில் ’Goa Inquisition’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மதமாறிய இந்துக்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர். அதனால் நாடெங்கும் இந்தியர்கள் மத்தியில் அச்சமும், பீதியும் பற்றிக் கொண்டது. அரசியல் ரீதியாகவும்; மத ரீதியாகவும் ஒன்று கூடுவதற்குக் கூட வழியில்லாமல் இருந்தது.

ALSO READ:  கெட்அவுட்ஸ்டாலின் #GetOutStalin - அண்ணாமலை தொடங்கி வைதத சமூகத்தளப் போர்!

எனவே, 1893-ல் புனே மற்றும் பம்பாய் பிராந்தியங்களில் ”Swaraj is my birth right and I shall have it – சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய சுதந்திரப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவரான ’பாலகங்காதர திலகர்’ அவர்கள் தேசப்பற்றோடு இந்தியாவின் அனைத்து கிராமங்களில் சந்து பொந்துகளிலெல்லாம் விநாயகர் சிலை வழிபாட்டையும், விநாயகர் சதுர்த்தியையும் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தார்.

gopalji

அதனால் வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள் வீதிக்கு வந்தனர். அன்று ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்று கூடுவதற்கும், சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை மீட்டுக் கொள்வதற்கும் உண்டான ஒரே மார்க்கமாக இருந்தது விநாயகர் வழிபாடு மட்டுமே.
எனவே, திலகர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவைச் சங்கம், கட்சி, அணி என யாரும் குறுக்கிப் பார்க்கக் கூடாது. ஆங்கிலேயர்களின் இந்துக்கள்-இந்தியர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக மத ரீதியாக முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டமாகவே பார்க்க வேண்டும்.

ஆகையால், இவ்வளவு சிறப்புகள் மிக்க விநாயகர் சதுர்த்தி விழாவை கரோனா காரணம் காட்டி தடை செய்வது என்பது ஏற்புடையதல்ல. விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட யாருடைய அனுமதியும் தேவையில்லை. பொது இடத்தில் வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைத்திடவுமே அரசின் அனுமதி வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி!!
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா!
சொத்தை காரணங்களை காட்டி தடை செய்யக் கூடாது!

~ டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர், புதிய தமிழகம் கட்சி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version