உல்லாச கப்பல் ஒன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலில் போதை பார்ட்டி நடந்ததாகவும் அதில் ஷாருக்கான் மகன் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் ஷாருக்கான் மகனிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தில்லியை சேர்ந்த நிறுவனமொன்று ஃபேஷன் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து க்ரே ஆர்க் என்ற பெயரில் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்திருந்தது.
மும்பையிலிருந்து எம்பிரஸ் என்ற சொகுசு உல்லாச கப்பல் நேற்று பிரபலங்களுடன் பயணம் செய்தது. இந்த கப்பல் நடுக்கடலில் பயணம் செய்யும் போது திடீரென போதை பார்ட்டி நடந்ததாகவும் அதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனி படகு ஒன்றில் எம்பிரஸ் கப்பலை நெருங்கி அதில் சோதனை செய்தனர்.
அப்போது கோகைன் உள்பட தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை ஒரு சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
சினிமா மற்றும் தொழிலதிபர்களின் வாரிசுகள் அந்த போதை பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்பட்டதை அடுத்து அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் போதைப்பொருள் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இவர்களில் ஒருவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் ஆரியன் என்று கூறப்படுவது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் ஷாருக்கான் மகனை கைது செய்யவில்லை என்றும் அவர் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி விவகாரத்தில் 8 பேரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடுகடலில் உல்லாசக் கப்பலில் பிரபலங்களின் வாரிசுகள் போதை பார்ட்டி நடத்திய விவகாரம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.