November 27, 2021, 9:31 am
More

  வியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்!

  jupiter.jps
  jupiter.jps

  சூரியக் குடும்பத்தில் உள்ள விண் கற்களை ஆராய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா வரிசையாக ஏவவுள்ள விண்கலன்களில் ஒன்றுதான் லூசி.

  மனித குலத்தின் நதிமூலத்தை அறியவும், புவியில் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் பற்றி அறியவும் எப்போதாவது மண்ணைத் தோண்டும்போது கிடைக்கும் புதைபடிவங்கள் பெரிய அளவு உதவி செய்துள்ளன.

  அதைப் போல சூரியக் குடும்பத்தின் பிறப்பு ரகசியத்தை அறிய உதவி செய்யும் புதைபடிவங்கள் என்று கருதப்படும் விண்கல் கூட்டத்தை ஆராய வியாழன் கோள் நோக்கி சனிக்கிழமை கிளம்பியது நாசாவின் லூசி விண்கலம்.

  இந்த லூசி என்ற பெயரிலேயே ஒரு சுவாரசியமான கதை உள்ளது.
  ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மனிதப் புதை படிவத்துக்கு லூசி என்று பெயர் வைத்தார்கள்.

  இந்த லூசியை ஆராய்ந்தபோதுதான், நமது மனித இனமாகிய ஹோமோ சேபியன்ஸ் எப்படி தோன்றியது என்பது பற்றிய ஆராய்ச்சிக்கு பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன.

  அதைப் போல சூரியக் குடும்பத்தின் தோற்றத்தின் ரகசியத்தை கண்டறியும் என்பதற்காகவே வியாழனை நோக்கி கிளம்பும் விண்கலத்துக்கு லூசி என்று பெயர் சூட்டியது நாசா.

  சூரியனை சுற்றிவரும் வியாழனுக்கு முன்னும் பின்னும் ஒரு பெரும் கூட்டமாக விண் கற்ககள் வலம் வருகின்றன.

  வியாழனைச் சூழ்ந்து பயணிக்கும் இந்த விண்கல் கூட்டத்திலே சூரியக் குடும்பத்தின் பிறப்பு, பரிணாமம் ஆகியவற்றுக்கான ரகசியம் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

  குயவர்கள் பானை செய்யும்போது மீந்த மண் கட்டிகள் போல, கோள்கள் உருவானபோது மீந்தவையே இந்த விண் கற்கள் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

  டிராஜன்கள் என்று அழைக்கப்படும் இந்த விண்கற்களை ஆராயவே ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரல் விண்வெளி நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இந்திய நேரப்படி சுமார் 3 மணிக்கு புறப்பட்டது லூசியின் பயணம்.

  மனித குலத்தின் தோற்றம், பரிணாமம் ஆகியவற்றைப் பற்றி நாம் ஆராய்ந்து அறிந்துகொள்ள உதவிய லூசி என்னும் புதைபடிவ எலும்புக் கூட்டின் படம்.
  இந்த ஆராய்ச்சிக்காக 12 ஆண்டுகளுக்கு, 98.1 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளது நாசா. இந்த கால கட்டத்தில் ஏழு ட்ராஜன் விண்கற்களை லூசி ஆராயும்.

  “இந்த டிராஜன் விண்கற்கள் வியாழனை 60 டிகிரி கோணத்தில் முன்னும் பின்னுமாக சூழ்ந்து பயணிக்கின்றன,” என்று விளக்குகிறார் லூசி விண்கலத்தின் முதன்மை ஆய்வாளர் ஹால் லெவிசன். கொலரோடா, பௌல்டரில் உள்ள சௌத்வெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்தவர் இவர்.

  “வியாழன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையும் இந்த விண்கற்கள் மீது செயல்படுவதால் அவை அதே இடத்தில் உள்ளன. சூரியக் குடும்பம் பிறந்த காலத்தில் அந்த இடத்தில் ஒரு பொருளை நீங்கள் விட்டிருந்தால் அது அங்கேயே இருந்திருக்கும். எனவே, கோள்கள் எதில் இருந்து பிறந்தனவோ அவற்றின் புதைபடிவம்தான் இந்த விண்கற்கள்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார் அவர்.

  ஒரு மாநகரம் அளவுக்கு அல்லது அதைவிடப் பெரியதான இந்த விண்கற்களின் வடிவம், கட்டமைப்பு, மேற்பரப்புக் கூறுகள், வெப்பநிலை, இவை எதனால் ஆனவை என்ற விவரங்களை தன் கருவிகளைக் கொண்டு லூசி ஆராயும்.

  வாயுக் கோளான வியாழனை சுற்றிவரும் நிலவு என்னவிதமான பொருள்களால் ஆனதோ அதே விதமான பொருள்களால் இந்த ட்ராஜன் விண்கற்களும் ஆனவை என்றால் சூரியனில் இருந்து வியாழன் உருவான அதே தூரத்தில்தான் இவையும் உருவாகியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால், அப்படி இருக்காது என்பதுதான் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.

  1.5 டன் எடையுள்ள லூசி விண்கலத்துக்கு 12 ஆண்டு காலத்துக்கு நிதி ஒதுக்கீடு முதல் கட்டமாக செய்யப்பட்டுள்ளது.
  “ஒரு வேளை வியாழனுக்கு அப்பால் உள்ள குய்பெர் பெல்ட் (Kuiper Belt) என்று அறியப்படும் பகுதியில் காணப்படுவது போன்ற பொருள்களால் அந்த விண்கற்கள் ஆகியிருக்குமானால், அவை அந்தப் பகுதியில் உருவாகி பின்னர் ஒரு ஈர்ப்பால் வியாழன் அருகே வந்திருக்கலாம்” என்று சௌத்வெஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த இந்த ஆராய்ச்சிப் பயணத்துக்கான விஞ்ஞானி டாக்டர் கார்லி ஹோவெட் கூறுகிறார்.

  “இந்த ஆய்வுப் பயணம் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மாதிரிகளைப் பரிசோதிக்க உதவும். சூரியக் குடும்பத்தின் வரலாற்றின் தொடக்க காலத்தில் பல பொருள்கள் முன்னும் பின்னும் கீழும் மேலும் கலப்பது நடந்திருக்கலாம் என்று கருத்தியல் ரீதியாக நாம் நினைக்கிறோம். சில பொருள்கள் தூக்கி வீசப்பட்டிருக்கலாம். சில பொருள்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம். இதைப் பற்றி ஆராய இந்தப் பயணம் உதவும்” என்று பிபிசி நியூசிடம் அவர் தெரிவித்தார்.

  சில ட்ராஜன் விண்கற்களும் அவற்றின் விட்டமும் (வரைகலை)
  வியாழனுக்கு முன்பாக செல்லும் 2027/28 என்ற டிராஜன் கூட்டதையும், பிறகு 2033 என்ற வியாழனை பின் தொடர்ந்து செல்லும் டிராஜன் கூட்டத்தையும் சனிக்கிழமை ஏவப்பட்ட விண்கலன் ஆராயும். மொத்தத்தில் லூசி மேற்கொள்ள இருப்பது 600 கோடி கிலோ மீட்டர் பயணம்.

  இந்த விண்கலம் நல்லவிதமாக இருக்கும்வரை விண்கல் கூட்டத்தில் உள்ளே புகுந்து புகுந்து பயணிக்கும் பேட்ரோகிளஸ், மெனிடியஸ் ஆகிய விண்கற்களை கடைசியாக ஆராய்ந்த பிறகு மேலும் அதிக ட்ராஜன் விண்கற்களை ஆராயும் வகையில் இந்தப் பயணத்தை நீடிக்கும்படி நாசாவை கேட்கப் போவதாக கைநெட் எக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கொராலி ஆடம் கூறுகிறார். இந்த நிறுவனம்தான் இந்த திட்டத்துக்கு பயண வழிகாட்டல்களை வழங்குகிறது.

  விண்கல் கூட்டத்தில் இருந்து வெளியே வரும்போது ட்ராஜன் அல்லாத வேறு வகை விண்கல் ஒன்றையும் இந்த லூசி விண்கலம் ஆராயும். இந்த விண்கல்லுக்கு டொனால்டு ஜான்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது. 1974ம் ஆண்டு எத்தியோப்பியாவில் மனித புதைபடிவம் ஒன்றை கண்டுபிடித்த தொல் மானுடவியல் ஆய்வாளரின் பெயர் இது.

  “லூசியின் இருபுறமும் இறக்கை போல உள்ள, 7 மீட்டர் விட்டம் கொண்ட சோலார் பேனல்கள் மூலம் லூசிக்கு தேவையான மின்சாரம் உற்பத்தியாகும். புவிக்கு அருகே இருக்கும்போது இது 18 ஆயிரம் வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

  ஆனால், ட்ராஜன் விண்கற்களுக்கு நடுவே லூசியை இயக்கும்போது இந்த பேனல்களால் வெறும் 500 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சில பல்புகளை மட்டுமே இது போதுமானது.

  ஆனால், லூசியின் கருவிகளை இயக்க 82 வாட் மின்சாரமே போதும்,” என்கிறார் விண்கலத்தை உற்பத்தி செய்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தைச் சேர்ந்த கேட்டி ஓக்மென்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,108FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-