சென்னை: பன்றி காய்ச்சல் நோய் குறித்து பரிசோதனை செய்வதற்கு அரசு சார்பில் 7 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 13 அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களும் உள்ளன. அரசு ஆணைப்படி, ஒரு பரிசோதனைக்கு ரூ.3,750-க்கு மேல் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். பன்றி காய்ச்சல் நோய் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழக கிடங்கையும் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு, கண்காணிப்பு முகாமையும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் வந்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது…. வட இந்தியாவில் 25 ஆயிரம் பேர் பன்றி காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு 1,370 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடுக்கும் குறைவான இறப்பு தான் பதிவாகியுள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, பன்றி காய்ச்சல் தாக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் இன்னமும் குறைவடையாததால் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நாளொன்றுக்கு 482 விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு முகாம்கள், சுகாதார பழக்கவழக்கங்களை மக்களிடையே கொண்டு செல்வது, பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி, மருந்து வழங்குதல் மற்ற்றும் தேவைக்கேற்ப ஆய்வு மையங்களின் மூலம் கண்டறிதல், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 6.75 லட்சம் ‘டாமிபுளூ’ மாத்திரைகள், சுகாதாரப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழகத்தை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் 25 மருத்துவ கிடங்கின் வாயிலாக டாமிபுளூ மாத்திரையும், தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் நோய் குறித்து பரிசோதனை செய்வதற்கு அரசு சார்பில் 7 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 13 அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களும் உள்ளன. அரசு ஆணைப்படி, ஒரு பரிசோதனைக்கு ரூ.3,750-க்கு மேல் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதன்படி, சென்னையில் 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்பி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதை கண்காணிக்க மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்களில் இது இலவசமாக செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோர் தங்கள் பயணம் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன்பு தெரிவித்து தடுப்பூசி போடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பன்றி காய்ச்சல் நோய் 80 சதவீதம் தொடுதல் மூலமாகவே பரவுகிறது. எனவே கையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை விழிப்புணர்வு செய்யும் வண்ணம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில், தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 044-24350496, 24334811, 94443 40496, 93614 82899 போன்றவை தகவல் மையத்தின் தொலைபேசி எண்கள். மேலும் தகவல் பெற ‘104’ சேவையை தொடர்பு கொள்ளலாம். .. என்றார்.
பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: சுகாதாரத் துறை செயலர்
Popular Categories