December 5, 2021, 9:55 pm
More

  விமர்சனங்களை சாதனைகளால் எதிர்கொள்வோம்..! மக்களே சாதனை நாயகர்கள்!

  ஒரு வேத வாக்கியத்தோடு தொடக்க விழைகிறேன்.  க்ருதம்மே தக்ஷிணே ஹஸ்தே, ஜயோம்மே ஸவ்ய ஆஹித:.  இந்த விஷயத்தை, பாரதத்தை

  pm modi speech
  pm modi speech

  100 கோடி தடுப்பூசிகள் என்ற சாதனையைப் படைத்த இந்திய மக்களுக்கு…
  பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்…
  – சென்னை வானொலி நிலையம் –
  தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

  வணக்கம். எனதருமை நாட்டுமக்களே.  இன்று நான், என்னுடைய இந்த உரையினை, ஒரு வாக்கியத்தோடு,  ஒரு வேத வாக்கியத்தோடு தொடக்க விழைகிறேன்.  க்ருதம்மே தக்ஷிணே ஹஸ்தே, ஜயோம்மே ஸவ்ய ஆஹித:.  இந்த விஷயத்தை, பாரதத்தைப் பின்புலமாகக் கொண்டு பார்த்தோமென்றால், இதன் நேரடிப் பொருள் எனக் கொண்டால், நம்முடைய தேசமானது, ஒருபுறத்தில் தனது கடமையை ஆற்றியிருக்கிறது, இன்னொரு புறத்திலோ,  இதற்கு பெரிய வெற்றியும் கிடைத்திருக்கிறது. 

  நேற்று, அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று, பாரத நாடு,  ஒரு பில்லியன், 100 கோடி தடுப்பூசித் தவணைகளென்ற,  சிரமமான, ஆனால்,  அசாதாரணமான இலக்கை அடைந்திருக்கிறது.  இந்த சாதனையின் பின்னணியிலே,  130 கோடி நாட்டுமக்களின் உறுதியான கடமையுணர்வு சக்தி இருக்கிறது.   ஆகையால்,  இந்த வெற்றி, பாரதத்தின் வெற்றியாகும்.  நாட்டுமக்கள் ஒவ்வொருவருடைய வெற்றியுமாகும்.  நான் இதன் பொருட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும், இருதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நண்பர்களே,  100 கோடி தடுப்பூசித் தவணைகள்.  இது ஏதோ, ஒரு புள்ளிவிவரம் மட்டுமல்ல.   இது தேசத்தின் வல்லமையினுடைய, பிரதிபலிப்பாகும்.  சரித்திரத்தினுடைய, புதிய சகாப்தம் எழுதப்படுவதன் தொடக்கமாகும்.  இந்த புதிய பாரதத்தின் எண்ணப்பாடானது,  கடினமான இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு,  அதை அடைவதையும் தெரிந்து வைத்துள்ளது.  இந்த புதிய பாரதத்தின் எண்ணப்பாடானது, இது,  தனது உறுதிப்பாடுகளை மெய்ப்பிப்பதற்காக, தீவிரமான உழைப்பினை அளிக்கின்றது. 

  நண்பர்களே,  இன்று பலநபர்கள்,  பாரதத்தின் தடுப்பூசி போடும் இயக்கத்தின் ஒப்பீட்டினை,  உலகத்தின் பிற நாடுகளோடு செய்து வருகின்றார்கள்.  பாரதமானது,  எந்த விரைவு கதியிலே, 100 கோடிகள் என்ற,  ஒரு பில்லியன் என்ற எல்லைக்கோட்டைத் கடந்ததோ, இது பாராட்டவும் படுகிறது. 

  ஆனால், இந்த ஆய்வுகளிலே விடுபட்டுப் போகும் ஒரு விஷயம் என்னவென்றால்,  நாம் இதன் தொடக்கத்தை எங்கிருந்து செய்தோம் என்பது தான்?  உலகின் பிற வல்லரசு நாடுகளைப் பொறுத்த வரை,  தடுப்பூசிகள் மீதான ஆய்வு செய்வது,  தடுப்பூசிகளைத் தேடுவது.  இதிலே,  பல தசாப்தங்களாகவே,  அவர்கள் தலைமை வகித்தார்கள் அவர்களிடம் வல்லமை இருந்தது. 

  பாரதம், பெரும்பாலும், இந்த தேசங்கள் தயாரித்தளிக்கும் தடுப்பூசிகளையே சார்ந்திருந்தது.  நாம் வெளியிலிருந்து தருவித்தோம்.  இதன் காரணமாகவே,  100 ஆண்டுக்கொரு முறை வரக்கூடிய பெருந்தொற்று வந்த போது,  பாரதம் தொடர்பான ஐயப்பாடுகள் எழுந்தன. 

  பாரத நாட்டால், இந்த உலகளாவிய பெருந்தொற்றோடு போராட முடியுமா?  பாரத நாடு,  மற்ற நாடுகளிடமிருந்து இத்தனைத் தடுப்பூசிகளை வாங்க பணத்துக்கு என்ன செய்யும்?  பாரதத்திற்கு தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்?  பாரதநாட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்குமா….. அல்லது கிடைக்காதா?  பாரத நாட்டால்,  இத்தனை மக்களுக்கும் தடுப்பூசிகளைப் போட முடியுமா?  பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க முடியுமா?  பலவகையான வினாக்கள் எல்லாம் எழுப்பப்பட்டன. 

  ஆனால்…. இன்று….. இந்த 100 கோடி தடுப்பூசித் தவணைகள், அனைத்து வினாக்களுக்கும் விடைகளை அளித்து விட்டன.  பாரதநாடு, தனது குடிமக்களுக்கு,  100 கோடித் தடுப்பூசித் தவணைகளைப் போட்டிருக்கிறது, மேலும், அதுவும், இலவசமாக.  பணம் ஏதும் வாங்கவில்லை. 

  நண்பர்களே,  100 கோடி தடுப்பூசித் தவணைகள் ஏற்படுத்தக்கூடிய மேலும் ஒரு தாக்கம், இனி உலகம்,  இப்போது பாரதத்தை,  கொரோனாவிடமிருந்து அதிகம் பாதுகாக்கப்பட்டதாய் கருதும்.  ஒரு மருந்தியல் மையமென்ற வகையிலே,  பாரதத்திற்கு உலகிலே கிடைத்திருக்கும் ஏற்புத்தன்மை,  இதற்கு,  மேலும் பலம்  கிடைக்கும்.  உலகம் முழுவதும்,  பாரதத்தின் இந்தச் சக்தியைப் பார்க்கவும் செய்கின்றது,  உணரவும் செய்கின்றது. 

  நண்பர்களே, பாரதநாட்டின் இந்தத் தடுப்பூசி இயக்கம், அனைவருடனான, அனைவருக்கான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, மேலும்,  அனைவரின் முயற்சிகள் என்பதுடைய,  மிகமிக உயிர்ப்புடைய எடுத்துக்காட்டாகும்.  கொரோனா பெருந்தொற்றுத் தொடக்க காலத்திலே, மேலும் ஒரு ஐயப்பாடு எழுப்பப்பட்டு வந்தது.  அதாவது பாரதம் போன்றதொரு ஜனநாயக நாட்டிலே,  இந்தப் பெருந்தொற்றோடு போராடுவது என்பது,  மிகவும் கடினமானதாக இருக்கும். 

  பாரதம் பற்றியும்,  பாரதநாட்டு மக்கள் பற்றியும்,  மேலும் என்ன சொல்லப்பட்டது ?  அதாவது இத்தனை சுயக்கட்டுப்பாடு,  இத்தனை ஒழுங்குமுறை….. இங்கே எப்படி சாத்தியப்படும்?  ஆனால்,  நம்மைப் பொறுத்தமட்டிலே ஜனநாயகத்தின் பொருள் என்னவென்றால்,  இணைந்து பயணித்தல்.  அனைவரையும் நம்மோடூ இணைத்துக் கொண்டு, தேசமானது, அனைவருக்கும் தடுப்பூசிகள்,  இலவசத் தடுப்பூசிகள் போடும் இயக்கத்தை முடுக்கி விட்டது. 

  ஏழைகள்,  செல்வதந்தர்கள்,  கிராமங்கள்,  நகரங்கள்,  மிகவும் தொலைவான இடங்கள் வரை, தேசத்திடம் இருந்த ஒரே மந்திரம்,  என்னவென்றால்,  நோய் வேறுபாடு எதையும் பார்க்கவில்லை என்றால்,  தடுப்பூசியிலும் எந்த வேறுபாடும் இருக்க முடியாது என்பதே.  ஆகையினால்,  என்ன உறுதிசெய்யப்பட்டது என்றால்,  இந்தத் தடுப்பூசி இயக்கத்தை, விஐபி கலாச்சாரம் பாதிக்கக்கூடாது என்பது தான்.  ஒருவர் எத்தனை பெரிய பதவியை வகித்தாலும் கூட, எத்தனை பெரிய சீமானாக இருந்தாலும் கூட,  அவருக்குத் தடுப்பூசி, சாதாரண குடிமகனாகவே கிடைக்கும். 

  நண்பர்களே, நம்முடைய தேசம் பற்றி,  கூறப்பட்ட வேறொரு விஷயம், இங்கே பெரும்பாலான மனிதர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவே மாட்டார்கள் என்பதுதான்.  உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும்,  இன்றும் கூட,  தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயக்கம் ஒரு பெரிய சவாலாகியிருக்கிறது.  ஆனால், பாரதநாட்டு மக்கள், 100 கோடித் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு, இப்படிப்பட்டவர்களை, வாயடைத்துப் போகச் செய்து விட்டார்கள். 

  நண்பர்களே,  எந்த ஒரு இயக்கத்திலுமே, எப்போது அனைவருடைய முயற்சிகளும்,  அனைவருடைய முயல்வுகளும் ஒன்றிணையும் போது,  விளைவு என்பது, அற்புதமானதாகவே இருக்கும்.  நாமனைவரும்,  பெருந்தொற்றுக்கு எதிராக, தேசம் போராடிய வேளையில்,  மக்களின் பங்களிப்பை,  நம்முடைய முதல் பலமாக ஆக்கினோம். 

  முதல் நிலை பாதுகாப்புச் சுவராக்கினோம்.  தேசமானது, தனது பலத்திற்கு ஆற்றல் அளிக்க வேண்டி,  தட்டுக்கள் தாம்பாளங்களைத் தட்டினார்கள், தீபங்களை ஏற்றினார்கள்.  அப்போது சிலர் கேட்டார்கள்,  இதனால் எல்லாம் நோய் ஓடிப் போய் விடுமா என்று?  ஆனால்,  நம்மனைவருக்கும், அதிலே,  தேசத்தின் ஒற்றுமை பளிச்சிட்டது.  சமூகசக்தியின் விழிப்புநிலை தென்பட்டது. 

  இதே பலம் தான்,  கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும்,  இன்று தேசமானது,  மிகவும் குறைவான நேரத்திலே,  100 கோடி வரை எட்ட வைத்திருக்கிறது.  எத்தனையோ முறை,  நமது தேசமானது,  ஒரே நாளிலே,  ஒரு கோடி தடுப்பூசிகள் போடுதல் என்ற இலக்கைத் தாண்டியிருக்கிறது.  இது மிகப் பெரிய வல்லமை.  அபாரமான திறமை.  தொழில்நுட்பத்தின் மிகச் சிறப்பான பயன்பாடு.  இது இன்று,  பெரியபெரிய நாடுகளிடத்தில் கூட இல்லவே இல்லை. 

  100crore vaccine
  100crore vaccine

  நண்பர்களே,  பாரதத்தின் மொத்த தடுப்பூசித்திட்டம், அறிவியல் சார்ந்த ஒன்று.  விஞ்ஞானிகளின் சாகஸத்தின் விளைவு இது.  மேலும், விஞ்ஞான வழிமுறைகளின்படி,  அனைத்து இடங்களையும் சென்றடைந்தது.  நம்மனைவருக்குமே, பெருமிதம் அளிக்கும் விஷயம், பாரதத்தின் ஒட்டுமொத்த தடுப்பூசித் திட்டம், அறிவியல் சார்ந்தது, அறிவியல் இயக்கியது, மேலும், அறிவியலுக்கு உட்பட்டே இருந்தது.  தடுப்பூசி தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, தடுப்பூசி போடுதல் வரை, இந்த ஒட்டுமொத்த இயக்கத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும், அறிவியல், மற்றும் அறிவியல்சார் அணுகுமுறை, இடம் பெற்றிருந்தது.  நம்முன்னே, தயாரிப்புத் தொடர்பான சவால்களும் இருந்தன, உற்பத்தி அதிகரிப்பு தொடர்பாகவும் இருந்தது, இத்தனை பெரிய தேசம் இத்தனை பெரிய மக்கட்தொகை. 

  இதைத் தவிர, பல்வேறு மாநிலங்களில், தொலைவான இடங்களில், காலத்திற்குள் தடுப்பூசிகளைக் கொண்டு சேர்ப்பது,  இதுவும் கூட, பகீரதப் பிரயத்தனத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல.  ஆனால், விஞ்ஞான நெறிகள் மற்றும் நூதனமான வழிமுறைகள் காரணமாக, தேசமானது, இந்த சவால்களுக்கான விடைகளைக் கண்டுபிடித்தது.  அசாதாரணமான வேகத்திலே, சாதனங்கள் அதிகரிக்கப்பட்டன.  எந்த மாநிலத்திற்கு எத்தனை தடுப்பூசிகள் எப்போது கிடைக்க வேண்டும், எந்தப் பகுதிக்குத் தடுப்பூசிகள் சென்றடைய வேண்டும், இதனையொட்டியும் கூட, விஞ்ஞானமுறைப்படி  வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. 

  நம்முடைய தேசமானது, உருவாக்கிய கோவின் தளம் என்ற அமைப்பு, அதுவும் கூட,  உலகத்தின், கவனத்தை ஈர்க்கும் மையமாக உள்ளது.  பாரதத்தில் உருவாக்கப்பட்ட கோவின் தளமானது, வசதிகளை,  பொதுமக்களுக்கு மட்டும் அளிக்கவில்லை, ஆனால்,  நமது மருத்துவப் பணியாளர்களின் வேலையையும் சுலபமாக்கியிருக்கிறது. 

  நண்பர்களே, இன்று, நாலாபுறங்களிலும், ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.  உற்சாகம் கொப்பளிக்கிறது, ஆர்வம் மேலிடுகிறது.  சமுதாயம் தொடங்கி, பொருளாதாரம், நாம் எந்த, அளவீட்டை, எடுத்துக் கொண்டாலும்,  நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை தான் ஒளிவிடுகிறது. 

  வல்லுனர்களும்,  நாடு அயல்நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளும், பாரதத்தின் பொருளாதாரம் பற்றி, மிகவும் ஆக்கப்பூர்வமாக உணர்கிறார்கள்.  இன்று பாரதநாட்டு நிறுவனங்களிலே, சாதனை முதலீடுகள் செய்யப்படுவது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்காக, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.  ஸ்டார்ட் அப்புகளில், சாதனை முதலீடுகளோடு கூடவே, சாதனை படைக்கும் ஸ்டார்ட் அப் யூனிகார்ன்களும் உருவாகி வருகின்றன.  வீட்டுவசதித் துறையிலும் கூட, புதிய ஆற்றல் தென்பட்டு வருகிறது. 

  கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட, பல்வேறு சீர்திருத்தங்களும், பல்வேறு முன்னெடுப்புக்களும், கதிசக்தி தொடங்கி புதிய ட்ரோன் திட்டம் வரையிலும், பாரதத்தின் பொருளாதாரத்தை, மேலும் விரைவுகதியில் முன்னெடுத்துச் செல்வதிலே, மகத்தான பங்களிப்பை அளிக்கும்.  கொரோனா காலகட்டத்திலே, விவசாயத் துறை, நமது பொருளாதாரத்தை பலத்தோடு தாங்கிப் பிடித்தது. 

  இன்று, சாதனை படைக்கும் அளவுக்கு உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்து வருகிறது.  விவசாயிகளின் வங்கிக் க்ணக்குகளுக்கு நேரடியாகப் பணம் சென்றடைகிறது.  தடுப்பூசிகள் அதிக அளவு போடப்பட்டு வருவதோடு கூடவே, பொருளாதார சமூக வழிமுறைகளாகட்டும், விளையாட்டு உலகாகட்டும் சுற்றுலாவாகட்டும், கேளிக்கையாகட்டும்,  அனைத்துத் துறைகளிலும், ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் விரைவு பெற்று வருகின்றன.  வரவிருக்கும் பண்டிகைகளுக்கான காலம், இதற்கு மேலும் வேகம் கூட்டும், மேலும் சக்தியை அளிக்கும். 

  vaccine against covid
  vaccine against covid

  நண்பர்களே, ஒரு காலம் இருந்தது, அப்போது இந்த நாட்டிலே, தயாரிக்கப்பட்டது அங்கே தயாரிக்கப்பட்டது, என்பதே விதியாக இருந்தது.  அதிலே ஆர்வம் மிகுந்திருந்தது.  ஆனால் இன்று,  நாட்டுமக்கள் அனைவரும், நேரடியாக அனுபவித்து வருகின்றார்கள், இந்தியத் தயாரிப்புக்களின் பலம் மிகஅதிகமாகி இருப்பதை. 

  அந்த வகையிலே, இன்று நான் உங்களிடம் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன், அதாவது எந்த ஒரு சின்னப் பொருளாக இருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருந்தால்,  இதைத் தயாரிக்க, நம்நாட்டவரின் வியர்வை சிந்தப்பட்டிருந்தால், அதை வாங்க நாம் வலுகூட்ட வேண்டும்.  இந்த விஷயம்,  அனைவரின் முயற்சிகள் காரணமாகவே சாத்தியமாகும்.  எப்படி தூய்மை பாரதம் இயக்கம், ஒரு மக்கள் பேரியக்கமோ, இதைப் போலவே, பாரதத்தில் தயாரிக்கப்பட்டவற்றை வாங்குவதும், பாரதநாட்டவர் தயாரித்த பொருட்களை வாங்குதலும், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம், இதையும், நாம் நடைமுறைக்கு உட்படுத்தியாக வேண்டும்.  எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அனைவரின் முயற்சியோடும், நாம் இதையும் சாதித்துக் காட்டுவோம்.   நீங்கள் நினைத்துப் பாருங்கள், கடந்த தீபாவளியின் போது, அனைவருடைய மனங்களிலும் எண்ணங்களிலும், ஒரு அழுத்தம் இருந்தது. 

  ஆனால், இந்த தீபாவளியிலோ, 100 கோடி தடுப்பூசித் தவணைகள் காரணமாக, ஒரு….. நம்பிக்கை உணர்வு துளிர்த்திருக்கிறது.  என்னுடைய தேசத்தின் தடுப்பூசி, எனக்குப் பாதுகாப்பை அளிக்குமென்றால், என்னுடைய தேசத்தின் தயாரிப்புகள்,  என்னுடைய தேசத்தின் உருவாகிய பொருட்கள், என்னுடைய தீபாவளியை, மேலும் சிறப்பானதாக ஆக்க முடியும்.  தீபாவளி காலகட்டத்தில், விற்பனை, ஒருவகையாகவும், ஆண்டின் மற்ற வேளைகளில் விற்பனை,  வேறுவகையாகவும் இருக்கும்.  

  நம் நாட்டிலே தீபாவளியின் போது, பண்டிகைக் காலங்களிலே, விற்பனை ஒரேடியாக அதிகரித்து விடுகிறது.  100 கோடி தடுப்பூசித் தவணைகள், நம்முடைய சில்லறை விற்பனையாளர்கள், நம்முடைய சிறிய அளவு தயாரிப்பாளர்கள், நம்முடைய தள்ளுவண்டி நடைபாதை விற்பனையாளர்கள், அனைவருக்குமே,  நம்பிக்கைக் கீற்றாக வந்திருக்கிறது. 

  நண்பர்களே, இன்று நம்முன்பாக, அமிர்த மஹோத்ஸவ உறுதிப்பாடு இருக்கிறது.  இந்த நிலையிலே, நம்முடைய இந்த வெற்றியானது, நமக்கு ஒரு புதிய தன்னம்பிக்கையை அளிக்கிறது.  நம்மால் இன்று, கூற முடியும், அதாவது தேசம், பெரிய இலக்கைத் தீர்மானிப்பதென்பதை, மேலும், அதை எட்டுவதென்பதை, செம்மையாக அறிந்திருக்கிறது.  ஆனால், இதன் பொருட்டு, நாம் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருக்க வேண்டியது அவசியம்.  நாம் கவனக்குறைவாக இருக்கவே கூடாது. 

  கவசம் என்னதான் சிறப்பாக இருந்தாலும், கவசம் என்னதான் நூதனமாக இருந்தாலும், கவசம் பாதுகாப்பிற்கான முழு உத்திரவாதம் அளித்தாலும், அப்போதும் கூட, போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரையிலும், ஆயுதங்களை கீழே வைத்து விடக்கூடாது.  என்னுடைய வேண்டுகோள், நாமனைவரும், நமது பண்டிகைகளை, முழுமையான முன்னெச்சரிக்கையோடு தான் கொண்டாட வேண்டும்.  மேலும், முகக்கவசம் பற்றிய விஷயத்தில், இப்போதெல்லாம் பார்த்தால், நீங்களே பார்த்திருக்கலாம், டிசைன் டிசைனாக முகக்கவசங்கள் வந்து விட்டன. 

  ஒரு விஷயம் மட்டும் நான் கூறுகிறேன்.  எப்படி நாமெல்லோரும்,  செருப்பு அணிந்து தான் வெளியே போகும் பழக்கம் ஏற்பட்டு விட்டதோ, இதைப் போலவே, முகக்கவசத்தையும், நாம் ஒரு இயல்பான வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.  யாரெல்லாம், இதுவரை, தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையோ, அவர்கள் இதற்கு, மிகப்பெரிய முதன்மை அளிக்க வேண்டும். 

  யார் தடுப்பூசி போட்டாகி விட்டதோ, அவர்கள் மற்றவர்களை உத்வேகப்படுத்துங்கள்.  எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நாமனைவருமாக இணைந்து, முயன்றோம் என்று சொன்னால், கொரோனாவை மேலும் விரைவாக நம்மால் தோற்கடிக்க முடியும்.  உங்கள் அனைவருக்கும்,  வரவிருக்கும் பண்டிகைகளுக்கான, ஒருமுறை, மீண்டும், பலப்பல நல்வாழ்த்துக்கள், பலப்பல நன்றிகள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,796FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-