சென்னை: 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும் என்று பாரிவேந்தர் அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (13 -ம் தேதி) நல்லுறவு பயணமாக பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் இலங்கைக்கு செல்ல உள்ளார். இப்பயணத்தின் போது, இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வழிவகுக்கும், இலங்கையின் 13 – வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழர்களின் பெரும் பகுதிகளை இலங்கை ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வட – கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை ராணுவம் மற்றும் சிறப்பு காவல் படையை உடனே திரும்பப்பெறவேண்டுமெனவும், தமிழர்களின் நிலப்பரப்புக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் எனவும் இலங்கை அரசை இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பெருமளவில் வாழும் நிலப்பரப்பில் சிங்களர்கள் அத்துமீறி குடியேறுவதை உடனே தடுத்து நிறுத்த இலங்கை அதிபரிடம் பேசவேண்டும். இலங்கையின் உள்நாட்டு போரின்போது “மனித உரிமை மீறல்” மற்றும் தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்தியதின்மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும், செத்து மடிந்தனர். இலங்கையில் நடந்தது ”இனப்படுகொலைதான்” என்பதனை வலியுறுத்தும் விதமாக ஐநா சபை அமைத்துள்ள பன்னாட்டு விசாரணைக் குழுவிற்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளித்து, போர் சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் அவர்களுக்கு தரவேண்டும் என இந்திய பிரதமர் இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன் பிடிக்கும்போது “எல்லை தாண்டி வந்தார்கள்” என்ற காரணத்தைக் கூறி தமிழக மீனவர்களை சிறை பிடித்தும், அவர்கள் மீது பொய்யான வழக்குகளை புனைந்தும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தும் இலங்கை ராணுவத்தின் மனித தன்மையற்ற செயலை உடனடியாக இலங்கை அரசு கைவிடவேண்டும் எனவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கில் கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியாவிற்கு இலங்கை கொடுக்க வழிவகை செய்யும் சட்டதிருத்தம் அல்லது புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும்: பாரிவேந்தர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari