― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள்(15): எச்சரிக்கைப் படிகள்!

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள்(15): எச்சரிக்கைப் படிகள்!

- Advertisement -

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -15
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

15. Strategy
குழிபறிப்பவர்கள் இருப்பார்கள் ஜாக்கிரதை!

ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. முற்பிறவிப் பயனால் அது மாமிசம் தின்னாது. மரத்திலிருந்து விழுந்த பழங்களையே தின்னும். ஒரு சந்தர்பத்தில் இந்த நரிக்கு புலியோடு நட்பு ஏற்பட்டது. நரி கூறும் கதைகள், நல்ல வார்த்தைகள் கேட்டு புலிக்கு நரி மீது நல்ல மதிப்பு ஏற்பட்டது. நரியைத் தன் அமைச்சராக நியமித்தது. இவர்களிருவரின் நட்பைப் பார்த்து பிற நரிகள் பொறாமை கொண்டன. நரி மீது பொய்க் குற்றங்களை சுமத்தி புலியின் மனத்தைக் கெடுத்தன.

புலி, நண்பனான நரியின் மீது கோபத்தோடு உறுமியது. புலியின் உறுமல் காடெங்கும் எதிரொலித்தது.

“அந்த நரியைக் கொல்லுங்கள்…!” என்று ஆணையிட்டது. புலியின் தாய் இதையெல்லாம் அறிந்து கொண்டது. தன் மகன் அசூயை கொண்டவர்களின் பேச்சைக் கேட்டு நரிக்கு கேடு செய்கிறான் என்றறிந்து மகனிடம் வேகமாக வந்தது.

“மகனே! தீயோர் சொல் கேட்காதே! அந்த நரி நல்ல நரி. உனக்கு நன்மை பயக்கும் சொற்களைக் கூறுகிறது. பொய் பேசுவோரின் பேச்சை நம்பாதே! அரசனான உனக்கு இதெல்லாம் தெரிய வேண்டாமா? அவசரப்படாதே!” என்று சமாதானப்படுத்தியது.

புலி உடனே நரிக்கு விதித்த தண்டனையை ரத்து செய்தது. ஆனால் புலியின் சஞ்சல புத்தியைப் பார்த்து நரி பரிதாபப்பட்டது. உண்ணா விரதமிருந்து நரி உயிரை விட்டது. தர்மராஜன் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலாக இந்த கதையைக் கூறினார் பீஷ்மர்.

“கொடூரமானவர் இனிமையாகவும் நல்லவர் கொடூரமாகவும் தென்படுகின்றனர். இவர்களின் உண்மை சொரூபத்தை எப்படி அறிந்து கொள்வது?” என்பது தர்மராஜனின் கேள்வி. (மஹாபாரதம் சாந்தி பர்வம் 111 வது அத்தியாயத்தில் வ்யாக்ரகோமாயு சம்வாதம்)


மன வேற்றுமை வரக் கூடாது:-

மகாபாரதத்தில் விதுரன் கூறும் கதை இது

பறவைகளைப் பிடிக்கும் ஒரு வேடன் நிலத்தின் மீது வலை விரித்தான். எப்போதும் சேர்ந்திருக்கும் இரு பறவைகள் அந்த வலையில் சிக்கின. இரண்டுமாகச் சேர்ந்து பறந்து அந்த வலையை ஆகாய மார்கத்தில் எடுத்துச் சென்று விட்டன. வியந்து போன வேட்டைக்காரன் அவற்றைத் துரத்திக் கொண்டு ஓடினான். அவ்வாறு நீண்டதூரம் ஓடிய அவனைப் பார்த்து ஒரு முனிவர், “அவை வானில் பறக்கின்றன. நீ இவ்வாறு தரையில் ஓடி என்ன பயன்?” என்று வினவினார். அதற்கு அந்த வேடுவன், “உண்மைதான். அவ்விரண்டும் ஒன்றாகச் சேர்ந்து என் வலையை தூக்கிச் செல்கின்றன. சற்று நேரத்தில் அவற்றுக்கிடையில் சண்டை வராமல் போகாதா, என்ன? அப்போது அவை என் கையில் சிக்கும்” என்றான். அவன் எதிர்பார்த்தபடியே அவற்றுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டு கீழே விழுந்தன. வேடனின் கையில் சிக்கின.

இரு தலைவர்கள் ஒன்றாக வெற்றியடைந்து உயர்ந்த பதவிகளை அலங்கரித்தபின் அவர்களிடையே மன வேறுபாடு வரக்கூடாது. அவர்களிடையே பிணக்கு ஏற்படுத்தி அதைப் பெரிதாக்கி அதனை பயன்படுத்திக் கொள்பவர் இருப்பர். கவனமாக இருக்க வேண்டும் என்று நீதி சாஸ்த்திரம் போதிக்கிறது.

பிரித்தாளும் தீய அரசியல்:-

அகண்ட பாரத தேசத்தின் பிரிவினைக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் தீட்டிய சதியில் காங்கிரஸ் உயர் தலைவர்கள் சிக்கிக் கொண்டனர். இது தலைவர்களின் திறமைக் குறைவுக்கு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு.

1857 முதல் சுமார் முப்பதாண்டு காலம் முஸ்லீம் தலைவர்கள் கூட ஹிந்து மதத்தவரோடு சேர்ந்து பிரிட்டிஷ் எதிர்ப்பு வழிமுறையையே கடைப்பிடித்தனர். ஆனால் அதன் பின் சையத் அஹமத் போன்றவர்களுக்கு ‘சர்’ பட்டம் கொடுத்ததன் மூலம் பிரிட்டன் சாம்ராஜ்யவாதிகள் தேசிய நீரோட்டத்திலிருந்து இஸ்லாம் மதத்தவர்களைப் பிரிப்பதற்கு திட்டம் தீட்டி அவர்கள் மனதில் விஷ விதை நாட்டினர். இந்த விதை முளைத்து விஷ விருட்சமானத்தை 1947ல் அகண்ட பாரத தேசத்தில் நேர்ந்த பிரிவினை எடுத்துக்காட்டுகிறது. விஷ விதை விஷ மரமாக வளர்ந்தது காங்கிரஸ் போராட்டத் தலைவரின் தோல்விக்கு எடுத்துக்காட்டு.

சர் சையது அகமது, அலிகார் விஸ்வ வித்யாலயத்தை நிறுவியது என்பது ஒரு தொடக்கம். அகண்ட பாரதத்தில் ஏற்பட்ட பிரிவினை இந்த விஷ வியூகத்தின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை பற்றி இஸ்லாம் மதத் தலைவர்களுக்கு விவரிக்கத் தவறியது காங்கிரஸ் போராட்டத் தலைவர்களின் தோல்விக்கு அடிகோலியது.

பஞ்சதந்திரக் கதையில் இது போல் நட்பைப் பிரித்தால் நேரும் அனர்த்தங்கள் குறித்து பல சம்பவங்கள் உள்ளன. குள்ள நரிகளின் தந்திரத்தில் சிக்கிய சிங்கம் தன் அமைச்சரை விரட்டி விட்டது. தற்போதைய சமுதாயத்தில் கூட இந்த குள்ள நரிகளைப் போன்றவர்கள் இல்லாமல் இல்லை.

அரசியல், வணிகம், தன்னார்வமைப்பு, அலுவலகம், பல்கலைக் கழகம் போன்றவற்றில் தலைவர்களுக்கிடையேயும் தொண்டர்களுக்கிடையேயும் சண்டை மூட்டி விட்டு அவர்களைப் பிரிக்கும் குள்ள நரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். சொல்வார் சொற்பேச்சைக் கேட்டால் கெட்டழிவது நிச்சயம் என்பது வரலாறு கற்றுத் தரும் பாடம்.


என்னை மாற்றிய நூல்கள்:-

(டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் – என் வாழ்க்கை பயணம்)

ஏர்போர்ஸ் பைலட் ஆக வேண்டுமென்ற என் கனவு நிறைவேறவில்லை. என்னை போலவே பலருக்கும் தாம் தேர்ந்தேடுத்த இலக்குகளுக்கு தடை ஏற்பட்டு தம் வழியை மாற்றிக் கொள்ள நேரலாம். அப்போது நம் இலட்சியங்கள் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும். வேறு மார்க்கத்தைத் தேட வேண்டும். வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒவ்வொரு தோல்வியும் நம் ஆளுமையில் ஒவ்வொரு குணத்தை வெளிக்கொண்டு வருகிறது. தடைகளை எதிர்கொள்ளும்போது நம்மில் நமக்குத் தெரியாமலே மறைந்திருக்கும் தைரியம் வெளிப்படுகிறது. நமக்கு ஏதாவது தோல்வி நேர்ந்தால்தான் நம்மிடம் இருக்கும் இத்தகைய இயல்புகள் குறித்து நமக்குத் தெரியவரும். இந்த தைரிய சாகசங்களைத் தேடியபடி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.

நான் பல நூல்களைப் படித்துள்ளேன். என்னை பாதித்த, எனக்கு மிக விருப்பமான நூல்கள் மூன்று உள்ளன.

  1. லைட்ஸ் ஃப்ரம் மெனி லாம்ப்ஸ் – பல எழுத்தாளர்கள் எழுதிய ஊக்கமளிக்கும் படைப்புகளை டாக்டர் ரிலியன் ஐஸ்லர் வாட்சன் தொகுத்த நூல். நான் வருத்தத்தில் இருக்கும்போது எனக்கு ஆறுதலளிக்கும் நூல் இது.
  2. 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்னை பாதித்த நூல். இதில் 1330 குறள்கள் உள்ளன. எனக்கொரு நடத்தை முறையை ஏற்படுத்திக் கொடுத்த நூல் இது.
  3. அலெக்சிஸ் கொரெல் எழுதிய மேன் தி அன்நோன் (Man the Unknown) முக்கியமாக மருத்துவ விஞ்ஞானம் படிக்க விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்.

நமக்கு அதிகாரப் பதவிகள் வந்தால் நாம் வெற்றிச் சிகரங்களை எட்டியதாக நினைப்போம். ஆனால் அப்போதுதான் நாம் ஆகாசக் கோட்டை கட்டுவதற்கு கல் சுமந்த மக்கள் சமுதாயத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். பலர் செய்த தியாகங்களை அடையாளம் காண வேண்டும்.

சுபம்!

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,164FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,900FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version