spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபத்ம விருதுகளுக்கு ஒருவர் பிரபலமானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை; செயல்பாடுகளே தீர்மானிக்கின்றன: பிரதமர் மோடி

பத்ம விருதுகளுக்கு ஒருவர் பிரபலமானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை; செயல்பாடுகளே தீர்மானிக்கின்றன: பிரதமர் மோடி

- Advertisement -

2018 ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று வானொலியில் ஒலிபரப்பானது. . மனதின் குரல் 40ஆவது பகுதி இது. இன்று (28.1.18)  ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, மகளிர் மேம்பாடு, பெண்கள் ஏன் கண்கள் போல் காக்கப் பட்டார்கள், பத்ம விருது பெற்றவர்களின் வாழ்வில் சில பொன்னான தருணங்கள், காந்திஜியின் மகிமை இவை குறித்துப் பேசினார். அப்போது, பத்ம விருதுகளுக்கு ஒருவர் பிரபலமானவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அவரின் செயல்பாடுகளே அவருக்கு விருதைப் பெற்றுத் தருகிறது என்று கூறினார்.

அவரது உரையின் முழுவடிவம்:

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள்.  2018ஆம் ஆண்டிற்கான என் முதல் மனதின் குரல் இது; 2 நாட்கள் முன்பாகத் தான் நாம் நமது குடியரசுத் திருநாளை மிகவும் உற்சாகத்தோடு கொண்டாடினோம், வரலாற்றிலேயே முதன்முறையாக, பத்து நாடுகளின் தலைவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

எனதருமை நாட்டுமக்களே, பிரகாஷ் த்ரிபாடி அவர்கள் NarendraModi Appஇல் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார், அதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் நான் பேச வேண்டும் என்று மிகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி விண்வெளி சென்ற கல்பனா சாவ்லா அவர்கள் மறைந்த தினம்.  கொலம்பியா விண்வெளிக்கலம் விபத்துக்குள்ளாதன் காரணமாக அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்றாலும், உலககெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்துச் சென்றிருக்கிறார்கள்.  இந்த வகையில் கல்பனா சாவ்லா அவர்கள் மறைந்த தினம் பற்றித் தெரிவித்துத் தனது கடிதத்தைத் தொடக்கியமைக்கு நான் பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

இத்தனை சிறிய வயதில் கல்பனா சாவ்லா அவர்களை நாம் இழந்திருக்கிறோம் என்பது நம்மனைவருக்குமே பெரும் துக்கம் அளிக்கும் விஷயம் தான் ஆனால், அவர்கள் உலகம் முழுவதிலும், குறிப்பாக பாரதத்தின் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, பெண்சக்திக்கு எல்லையே இல்லை என்ற செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். பேராவலும், திடமான தீர்மானமும், சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருந்தால், இயலாதது என்ற ஒன்று இல்லை என்பதையே அவரது வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.  இன்று பாரதத்தில் பெண்கள், ஒவ்வொரு துறையிலும் மிகவேகமாக முன்னேறி வருகிறார்கள், தேசத்தின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பண்டையகாலம் தொட்டே, நமது தேசத்தில் பெண்களுக்கு மரியாதை, சமுதாயத்தில் அவர்களுக்கென சிறப்பிடம் அளித்திருப்பது, அவர்களின் பங்களிப்பு ஆகியவை உலகம் முழுமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்திருக்கிறது.  பாரத நாட்டில் கல்வியில் சிறந்த பெண்கள் என்ற ஒரு பாரம்பரியமே இருக்கிறது.  வேதத்தின் சூத்திரங்களை இயற்றியதில் பல கற்ற பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது.  லோபாமுத்ரா, கார்க்கி, மைத்ரேயி ஆகியோரைப் பற்றிப் பேசுகிறோம் நாம் இன்று பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம் என்று பேசுகிறோம் ஆனால், பலநூற்றாண்டுகள் முன்பாக நமது சாத்திரங்கள் ஸ்கந்தபுராணத்தில்,

दशपुत्र, समाकन्या, दशपुत्रान प्रवर्धयन् |

यत् फलं लभतेमर्त्य, तत् लभ्यं  कन्यकैकया ||

தஸபுத்ர, ஸமாகன்யா, தஸபுத்ரான் ப்ரவர்த்தயன்.

யத் பலம் லபதேமர்த்ய, தத் லப்யம் கன்யகைகயா.

என்று கூறியிருக்கின்றது.  அதாவது, ஒரு மகள், பத்து மகன்களுக்குச் சமமானவள்.  பத்து மகன்கள் வாயிலாக எத்தனை புண்ணியம் கிடைக்குமோ, அவையனைத்தும் ஒரு மகள் இருக்கும் புண்ணியத்துக்கு சமமாகும்.  இது நமது சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மகத்துவம் பற்றி விரித்துப் பேசுகிறது.  இதனால் தானே நமது சமுதாயத்தில் பெண்களுக்கு சக்தி என்ற அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார்கள்!!  இந்தப் பெண்-சக்தி தேசம் முழுமையையும், சமுதாயம் முழுமையையும், குடும்பங்கள் முழுமையையும், ஒற்றுமை என்ற இழையால் இணைக்கிறது. அது வேதகாலத்தின் முற்றும் தெளிந்த லோபாமுத்ரா, கார்க்கி, மைத்ரேயி ஆகியோரின் பாண்டித்யம், அக்கா மஹாதேவி, மீராபாயி போன்றோரின் ஞானம், பக்தி, அஹில்யாபாய் ஹோல்கரின் ஆளுகை அமைப்பு, இராணி லக்ஷ்மிபாயின் வீரம் போன்றவை, பெண்-சக்தி என்பது நமக்கு என்றுமே உத்வேகம் அளித்து வந்திருக்கிறது, தேசத்தின் மாண்பிற்குப் பெருமை சேர்த்து வந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.

பிரகாஷ் த்ரிபாடி அவர்கள் மேலும் பல எடுத்துக்காட்டுக்களை அளித்திருக்கிறார்.  நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் போர்விமானம் சுகோய் 30இல் வானில் பறந்து சாகஸம் புரிந்தது தனக்கு கருத்தூக்கம் அளித்ததாகவும், INSV TARINI கலத்தில் வர்த்திகா ஜோஷீ தலைமையிலான இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண்கள் குழு உலகம் சுற்றும் பயணத்தை மேற்கொண்டிருப்பதைப் பற்றியும் தெரிவித்திருக்கிறார்.  பாவனா கண்ட், மோஹனா சிங், அவனீ சதுர்வேதி என்ற 3 தீரம்நிறைந்த பெண்கள் போர்விமான ஓட்டிகளாக ஆகியிருக்கிறார்கள், சுகோய் 30யை இயக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.  க்ஷமதா வாஜ்பேயியின் தலைமையில் பெண்கள் அடங்கிய குழு, தில்லி தொடங்கி அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ வரை சென்று, திரும்ப தில்லி வரை ஏர் இண்டியா போயிங் ஜெட்டில் பறந்தார்கள், இவர்கள் அனைவரும் நம்நாட்டுப் பெண்கள். இவற்றையெல்லாம் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி தான். இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதோடு மட்டுமல்லாமல், தலைமை தாங்கியும் வருகிறார்கள்.  இன்று பல துறைகளில் முதன்முதலாக பெண்-சக்தி சாதனை புரிந்து வருகிறது, ஒரு மைல்கல்லை ஸ்தாபித்து வருகிறது.  கடந்த நாட்களில் மேதகு குடியரசுத் தலைவர் ஒரு புதிய முனைப்பை மேற்கொண்டார்.

தத்தமது துறைகளில், முதன்முதலில் சாதனை படைத்த அசாதாரணமான பெண்களின் ஒரு குழுவை நமது குடியரசுத்தலைவர் சந்தித்தார்.  தேசத்தின் இந்தப் பெண் சாதனையாளர்கள், வாணிபக் கப்பல்களின் முதல் பெண் கேப்டன், பயணிகள் ரயிலின் முதல் பெண் ஓட்டுனர், முதல் பெண் தீயணைப்பாளர், முதல் பெண் பேருந்து ஓட்டுநர், அண்டார்ட்டிகா சென்றடைந்த முதல் பெண், எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண், என்பது போன்று ஒவ்வொரு துறையிலும் முதலில் சாதித்த பெண்கள் – நமது பெண்-சக்தி, சமூகத்தின் பழைமைவாதத் தளைகளைத் தகர்த்து, அசாதாரணமான சாதனைகளைப் படைத்திருக்கின்றார்கள்.  கடுமையான உழைப்பு, முனைப்பு, மனவுறுதி அளிக்கும் பலம் ஆகியவற்றின் துணைக்கொண்டு அனைத்துத் தடைகளையும், இடர்களையும் கடந்து, ஒரு புதிய பாதையை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

இந்தப் பாதையில் அவர்கள் தங்கள் காலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல், இனிவரும் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கின்றார்கள்.  அவர்கள் புதியதொரு உற்சாகம், புதியதொரு உத்வேகம் ஆகியவற்றை நிரப்பியிருக்கிறார்கள். தேசம் முழுமையும் இந்தப் பெண்-சக்திகளைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் வாழ்க்கையின் வாயிலாக உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காக, இந்தப் பெண் சாதனையாளர்கள், முதலாவதாக வந்திருக்கும் பெண்கள் பற்றி ஒரு புத்தகமே கூட எழுதப்பட்டு விட்டது; இந்தப் புத்தகம் இன்று e-book வடிவத்தில் NarendraModi Appஇல் கிடைக்கிறது.

இன்று தேசத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களில் பெண்களின் சக்தியின் மகத்துவம்நிறைந்த பங்களிப்பு பளிச்சிடுகிறது.  இன்று நாம் பெண்களுக்கு அதிகாரம்வழங்கல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு ரயில்நிலையம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு ரயில்நிலையம், பெண்களின் அதிகாரம்வழங்கல், இவற்றுக்கு இடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். மும்பையின் மாடுங்கா ரயில்நிலையத்தில் அனைத்துப் பணியாளர்களும் பெண்கள்.  அனைத்துத் துறைகளிலும் பெண்கள் – அது வர்த்தகத் துறையாகட்டும், ரயில்காவலர்களாகட்டும், பயணச்சீட்டுப் பரிசோதகர்களாகட்டும், அறிவிப்பு செய்பவர்களாகட்டும், தொடர்பு கொள்ளத் தேவையான நபராகட்டும், பணிபுரியும் அனைத்து 40 பணியாளர்களுமே பெண்கள் தாம்.  இந்த முறை குடியரசுத் திருவிழா அணிவகுப்பைப் பார்த்த பிறகு, டிவிட்டரிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் பலர் குறிப்பிட்ட முக்கியமான விஷயம், எல்லையோரக் காவல்படையின் பைக் ஓட்டும் பிரிவு பற்றித் தான், இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் அனைவருமே பெண்கள் தாம்.

அவர்கள் சாகஸம்நிறை செயல்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள், இந்தக்காட்சி, அயல்நாடுகளிலிருந்து வந்த விருந்தினர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  அதிகாரம்வழங்கல், சுயசார்புடைமையின் ஒரு வடிவம்.  இன்று நமது பெண்-சக்தி தலைமை தாங்குகிறது.  சுயசார்பாக உருவெடுத்து வருகிறது.  சத்திஸ்கட்டின் நமது பழங்குடியினப் பெண்கள் புரிந்த ஆச்சரியமான வேலை என் கவனத்தில் வருகிறது.  அவர்கள் புதியதொரு எடுத்துக்காட்டை அளித்திருக்கிறார்கள்.  பழங்குடியினப்பெண்கள் பற்றிப் பேசும் போது, அனைவரின் மனங்களிலும் ஒரு தீர்மானமான காட்சி ஏற்படுகிறது.

இந்தக் காட்சியில் காடுகள் இருக்கின்றன, பாதைகள் இருக்கின்றன,, அவற்றில் தலையில் பாரம் சுமந்து செல்லும் பெண்கள்.  ஆனால் சத்தீஸ்கட்டின் நமது பழங்குடியினப் பெண்கள், நமது பெண்-சக்தி, தேசத்தின் முன்பாக ஒரு புதிய காட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  சத்தீஸ்கட்டின் டந்தேவாடா பகுதி மாவோயிஸத் தீவிரவாதிகளால் பீடிக்கப்பட்ட பகுதி.  வன்முறை, அடக்குமுறை, குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் என மாவோவாதிகள் இங்கே ஒரு பயங்கரம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இத்தகைய பயங்கரம் நிறைந்த ஒரு சூழலில் பழங்குடியினப் பெண்கள், பேட்டரியால் இயங்கும் ரிக்ஷாக்களை ஓட்டி, சுயசார்புடையவர்களாக ஆகி வருகிறார்கள்.  மிகக்குறைந்த காலகட்டத்திற்குள்ளாக பல பெண்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.  இதனால் 3 ஆதாயங்கள் – ஒருபுறம் சுயவேலைவாய்ப்பு அவர்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது, மறுபுறத்தில், மாவோயிஸ கொள்கைகளால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் காட்சி மாறுகிறது. இவற்றோடுகூட, சூழல்பாதுகாப்பு தொடர்பாகவும் வலுகூட்டப்படுகிறது.  இங்கே இருக்கும் அரசு நிர்வாகத்துக்கும் நான் பாராட்டுத் தெரிவிக்கிறேன், அவர்கள் நிதியுதவியளிப்பது முதல், பயிற்சி தருவது வரை, இந்தப் பெண்களின் வெற்றியின் பின்புலத்தில் மகத்தான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள்.

”என்னவோ தெரியலை நம்மளை யாராலும் அழிக்க முடியலை” என்ற வழக்கை நாம் அடிக்கடி கேட்டு வந்திருக்கிறோம்.  அப்படியென்ன இதில் சிறப்பு இருக்கிறது என்றால், அது தான் வளைந்து கொடுக்கும்தன்மை, மாற்றமேற்படுத்தும் இயல்பு.  வழக்கொழிந்து போனவற்றைக் கைவிடல், தேவையானவற்றில் மாற்றங்களை ஏற்றல்.  தன்னையே சீர்திருத்திக் கொள்ளும் தொடர்முயற்சி என்ற நம்தேசப் பாரம்பரியம், இது தான் நமது சமுதாயத்தின் சிறப்பு, நமது கலாச்சார மரபு.  தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ளும் உத்தி தான், துடிப்புடைய சமூகத்தின் அடையாளம்.  சமூக சீர்கேடுகள், சிதைவுகளுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக தேசத்தில் தனிப்பட்ட ரீதியாகவும், சமூக அளவிலும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. சில நாட்கள் முன்பாக, பிஹாரில் ஒரு சுவையான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. சமூக சீர்கேடுகளை வேரோடு சாய்க்க, பிஹார் மாநிலத்தில் 13,000த்திற்கும் அதிகமான கி.மீட்டர் தூரத்திற்கான ஒரு மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த இயக்கம் வாயிலாக குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை போன்ற தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு தூண்டப்பட்டது.  வரதட்சணைக் கொடுமை மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக மாநில மக்கள் அனைவரும் போராடத் தீர்மானம் மேற்கொண்டார்கள்.  குழந்தைகள், பெரியவர்கள், உற்சாகமும் உத்வேகமும் நிறைந்த இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் என அனைவரும் தாங்களாகவே முன்வந்து இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.  பட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் தொடங்கி இந்த மனிதச் சங்கிலி, மாநிலத்தின் எல்லை வரை, தங்குதடையேதுமில்லாமல் இணைந்து நீண்டது.  சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மெய்யான முன்னேற்றத்தின் பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால், நமது சமுதாயம் இத்தகைய சீர்கேடுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். நாமனைவரும் இணைந்து இத்தகைய சீர்கேடுகளை சமூகத்திலிருந்து காணாமல் போகச் செய்வோம் என்ற சபதமேற்போம்; புதிய இந்தியா, சக்திபடைத்த, வல்லமைமிக்க இந்தியாவை உருவாக்குவோம் வாருங்கள்.  நான் பிஹாரின் மக்கள், மாநிலத்தின் முதல்வர், அதன் நிர்வாகம் ஆகியோருக்கும் மனிதச்சங்கிலியில் பங்கெடுத்த அனைவருக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் சமூகநலனுக்காக வழிகாட்ட, இத்தகைய ஒரு சிறப்பான, பரந்துபட்ட முன்னெடுப்பை மேற்கொண்டார்கள்.

எனதருமை நாட்டுமக்களே, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த தர்ஷன் அவர்கள் MyGovஇல் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் – அவரது தந்தையாரின் மருத்துவ சிகிச்சைக்காக மாதம் 6000 ரூபாய் செலவு பிடிக்கிறது என்றும், தனக்கு பிரதம மந்திரி மக்கள் மருந்தகத் திட்டம் பற்றித் தெரியாது என்றும், இந்த பிரதம மந்திரி மக்கள் மருந்தகத் திட்ட மையம் பற்றித் தெரியவந்தவுடன், அங்கிருந்து மருந்துகளை வாங்கத் தொடங்கி, இப்போது மருந்துகளுக்காகத் தான் செலவு செய்யும் தொகை 75 சதவீதம் குறைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.  எனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் இது பற்றிப் பேச வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார், இதன் வாயிலாக அதிகப்படியான மக்களுக்கு இதுபற்றித் தகவல் சென்றுசேர வேண்டும், அவர்களும் பயனடைய வேண்டும் என்றும் விரும்புகிறார்.  கடந்த சில காலமாகவே இந்த விஷயம் குறித்து மக்கள் எனக்குக் கடிதம் எழுதி வருகிறார்கள், கூறியும் வருகிறார்கள்.  இந்தத் திட்டம் வாயிலாகப் பயனடைந்தோர் தொடர்பாக நானும் பல காணொளிப்படங்களையும், சமூக ஊடகங்களிலும் பார்த்திருக்கிறேன்.  இதுபோன்ற தகவல்களைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.  ஆழமான ஒரு நிறைவு உண்டாகிறது.  தர்ஷன் அவர்களுக்கு கிடைத்தது, மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது எனக்கு இதமளிக்கிறது.  இந்தத் திட்டத்தின் பின்புலத்தில் இருக்கும் நோக்கம் – உடல்நலச் சேவையை கட்டுப்படியானதாக ஆக்குவது, வாழ்வை சுலபகாக்குவது ஆகியவற்றை ஊக்கப்படுத்தல் தான். மக்கள் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகள், வணிகமுத்திரையிடப்பட்ட மருந்துகளைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை விலை குறைவானதாக இருக்கிறது.  இதில் எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய, குறிப்பாக தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், மூத்த குடிமக்களுக்கு பொருளாதார ரீதியாக மிக்க பயனை அளிக்கிறது, இதனால் சேமிப்பு அதிகரிக்கிறது.

இங்கே வாங்கப்படும் generic மருந்துகள், அதாவது அதே வகையைச் சார்ந்த மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளுக்கு ஏற்பவே இருக்கின்றன.  இந்தக் காரணத்தால் நல்ல தரமான மருந்துகள், மலிவான விலையில் கிடைக்கப் பெறுகின்றன.  இன்று நாடு முழுவதிலும் 3000த்திற்கும் அதிகமான மக்கள் மருந்தகங்களை மைய அரசு நிறுவி இருக்கிறது.  இதன் வாயிலாக மருந்துகள் மலிவுவிலையில் கிடைப்பதோடு, தொழில்முனையும் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  மலிவு விலை மருந்துகள், பிரதமந்திரி பாரதீய மக்கள் மருந்தகங்கள், மருத்துவமனைகளின் அம்ருத் கடைகளில் கிடைக்கின்றன.  இவையனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் ஒரே நோக்கம் – தேசத்தில் இருக்கும் மிக ஏழை மக்களுக்கும் தரமான, கட்டுப்படியாகக்கூடிய ஆரோக்கிய சேவையை ஏற்படுத்திக் கொடுப்பது தான், இதன் மூலம் உடல்நலம் நிறைந்த, வளமான இந்தியாவை நிர்மாணிக்க இயலும்.

எனதருமை நாட்டுமக்களே, மஹாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த மங்கேஷ் அவர்கள், NarendraModi Mobile Appஇல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.  அதில் ஒரு பேரன் தன் தாத்தாவுடன் இணைந்து ”மோர்னா நதியைச் சுத்தப்படுத்துவோம்” என்ற இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.  அகோலாவின் குடிமக்கள் இந்த தூயமையான பாரதம் இயக்கம் தொடர்பாக, மோர்னா நதியைத் தூய்மைப்படுத்தும் செயல்பாட்டை மேற்கொண்டார்கள்.  மோர்னா நதி 12 மாதங்களும் பெருக்கெடுத்து ஓடக்கூடிய நதியாக ஒருகாலத்தில் இருந்தாலும், இப்போது அது பருவநதியாக மாறிவிட்டது.  இங்கே துயரம் அளிக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால், நதியில் காட்டுப்புற்களும், நீர்ப்பாசியும் நிறைந்திருக்கிறது.  நதிக்கரைகளில் ஏராளமான குப்பைக்கூளங்கள் வீசப்பட்டு வருகின்றன.  இதைச்சீர் செய்ய ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, மகர சங்கராந்திக்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று, ‘மோர்னா நதி தூய்மைத் திட்டத்தின் முதல் கட்டமாக 4 கி.மீ. நீளத்திற்கு  14 இடங்களில் நதியின் இரு கரைகளும் சுத்தம் செய்யப்பட்டன.  ‘மோர்னா நதி தூய்மைத் திட்டத்தின்’ இந்த நற்காரியத்தில் அகோலாவின் 6000த்திற்கும் அதிகமான குடிமக்கள், நூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள், மாணவர்கள், குழந்தைகள், பெரியோர், தாய்மார்கள்-சகோதரிகள் என அனைவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்றும், இந்தத் தூய்மை இயக்கம் தொடரப்பட்டது, மேலும் மோர்னா நதி முழுமையாக தூய்மை அடையாதவரை இந்த இயக்கம் ஒவ்வொரு சனிக்கிழமையன்று காலையன்று தொடர்ந்து நடைபெறும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.  முயன்றேயாக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருவர் மேற்கொண்டு விட்டாரேயானால், அவரால் சாதிக்க முடியாதது என்பது ஏதுமில்லை என்பதையே இது காட்டுகிறது.  மக்கள் இயக்கம் வாயிலாக மிகப்பெரிய மாற்றங்களைக்கூட ஏற்படுத்த முடியும்.  நான் அகோலா மக்களுக்கும், அதன் மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தினருக்கும், மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட குடிமக்கள் அனைவருக்கும், இந்த முயற்சிகளுக்காக என் உளம்நிறை பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்களின் இந்த முயற்சி தேசத்தின் மற்ற குடிமக்களுக்கும் கருத்தூக்கம் ஏற்படுத்தும்.

எனதருமை நாட்டுமக்களே, குடியரசுத் திருநாளன்று வழங்கப்படும் பத்ம விருதுகள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது.  செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் இதன்பால் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.  ஆனால் சற்றே நுணுகிப் பார்க்கும் போது, இது உங்களுக்குப் பெருமிதம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.  நம்மிடையே மகத்துவம் நிறைந்தவர்கள் இருப்பதும், அவர்களுக்கு எந்த பரிந்துரையும் இல்லாமல் விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைப்பதும் நமக்கு உள்ளபடியே மிகுந்த பெருமிதம் ஏற்படுத்துகின்றது.  ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அளிக்கப்படும் பாரம்பரியம் நம்மிடையே இருக்கிறது என்றாலும் கடந்த 3 ஆண்டுகளில் இதன் ஒட்டுமொத்த செயல்பாடும் மாற்றம் கண்டிருக்கிறது.  எந்த ஒரு குடிமகனும் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். இந்த முழுச் செயல்பாடும் ஆன்லைன் வழிமுறை காரணமாக, ஒளிவுமறைவற்ற வகையில் நடைபெறுகிறது.  ஒருவகையில் இந்த விருதாளர்களைத் தெரிவு செய்யும் வழிமுறையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  மிகவும் எளிய மனிதர்களுக்குக் கூட பத்ம விருது கிடைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  பொதுவாக, பெரு நகரங்களிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், விழாக்களிலும் அதிகம் தென்படாதவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்போது விருதளிக்கப்பட, ஒரு நபர் பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, மாறாக அவரது செயல்களே அவரது அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன.  கான்பூர் ஐ.ஐ.டியில் பயின்று தேர்ச்சி பெற்ற அர்விந்த் குப்தா அவர்கள், குழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பதில் தனது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார் என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.  அவர் 40 ஆண்டுக்காலமாக குப்பையிலிருந்து, விளையாட்டுச் சாமான்கள் தயாரித்து வருகிறார், இதன்மூலம் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்படும் வகையில் அவர் செயல்படுகிறார்.  பயனற்ற பொருட்களைக் கொண்டு அறிவியல் பரிசோதனைகளைக் குழந்தைகள் செய்து பார்க்க வேண்டும் என்பதே அவரது முயற்சியாக இருந்து வந்திருக்கிறது; இதற்காக அவர் நாடு முழுவதிலும் 3000 பள்ளிகளுக்குச் சென்று, 18 மொழிகளில் தயாரிக்கப்பட்ட காணொளிப் படங்களைக் திரையிட்டு ஊக்கமளித்து வருகிறார்.

என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை, உன்னதமான அர்ப்பணிப்பு பாருங்கள்!!  கர்நாடக மாநிலத்தின் சீதவ்வா ஜோடட்டி அவர்களின் வாழ்க்கையும் இதைப் போன்றது தான்.  இவரை ‘பெண்களுக்கு அதிகாரமளித்த தேவி’ என்று அவரை அழைப்பதில் பொருளில்லாமல் இல்லை. பெளகாவியைச் சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளாக, எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையை மாற்றுவதில் மகத்தான பங்களிப்பு நல்கியிருக்கிறார். தனது 7ஆம் வயதிலிருந்தே, தன்னை தேவதாசியாக அர்ப்பணித்து, தன் வாழ்க்கை முழுவதையும் தேவதாசிகளின் நலன்களுக்காகவே செலவிட்டார்.  இது மட்டுமல்ல, இவர் தாழ்த்தப்பட்ட பெண்கள் நலனுக்காகவும் இதுவரை யாருமே செய்திராத வகையில் பணியாற்றியிருக்கிறார்.

நீங்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பஜ்ஜூ ஷ்யாம் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.  பஜ்ஜூ ஷ்யாம் அவர்கள் மிகவும் ஏழ்மையான பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தார்.  அவர் தனது வாழ்வாதாரத்திற்காக எளிய பணிகளைச் செய்து வந்தாரென்றாலும், அவருக்கு பாரம்பரியமான பழங்குடியினத்தவர் ஓவியக்கலை மீது அபாரமான நாட்டம் இருந்தது.  இந்தப் பேராவல் காரணமாகவே இன்று அவருக்கு  பாரதத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் மதிப்பு இருக்கிறது.  நெதர்லேன்ட்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற பல நாடுகளில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  அயல்நாடுகளில் பாரதத்தின் பெயரை சிறப்பித்துவரும் பஜ்ஜூ ஷ்யாம் அவர்களின் திறமை அடையாளம் காணப்பட்டது, அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் லக்ஷ்மிகுட்டியின் வாழ்க்கை உங்களுக்கு சுகமான ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.  லக்ஷ்மிகுட்டி அவர்கள் கல்லார் பகுதியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்; இன்றும்கூட அவர் அடர்ந்த காட்டுப்பகுதிகளில், பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு இடையே பனையோலையால் வேயப்பட்ட குடிசையில் வசித்து வருகிறார்.  500 மூலிகை மருந்துகளை இவர் தன் நினைவில் வைத்திருக்கிறார்.  இவர் மூலிகைகளைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்திருக்கிறார்.  பாம்பு தீண்டிய பிறகு பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து தயாரிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.  லக்ஷ்மி அவர்கள் தனது மூலிகை மருந்துவ அறிவின் மூலம் தொடர்ந்து சமுதாயத்திற்கு சேவையாற்றி வருகிறார். யாருக்கும் புலப்படாமல் இருந்த இவரை அடையாளம் கண்டு, சமூகத்தில் அவரது பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது.  இன்று நான் மேலும் ஒருவர் பற்றிக் கூற வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது.

மேற்கு வங்காளத்தின் 75 வயதான சுபாஷிணி மிஸ்த்ரி அவர்கள் விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.  சுபாஷிணி மிஸ்த்ரி அவர்கள், மருத்துவமனை ஒன்றை உருவாக்க பலர் இல்லங்களில் பாத்திரங்கள் கழுவினார், காய்கறிகள் விற்பனை செய்தார்.  இவருக்கு 23 வயதான போது, சரியான மருத்துவ கவனிப்பு இல்லாத காரணத்தால், இவரது கணவர் இறக்க நேரிட்டது.  இந்தச் சம்பவம் தான் ஏழைகளுக்கென ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற உந்துதலை இவருக்கு அளித்தது. இன்று, இவரது கடினமான உழைப்பினால் உருவாக்கம் பெற்ற மருத்துவமனை ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது.  விலைமதிப்பில்லாத நமது பல ரத்தினங்களில் இப்படிப்பட பல ஆண் – பெண் ரத்தினங்கள் இன்னும் இருக்கின்றார்கள், இவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது, இவர்களுக்கென அடையாளம் கிடையாது.  இப்படிப்பட்டவர்களுக்கென ஒரு அடையாளம் இல்லாது போனால், அது சமுதாயத்துக்கே பேரிழப்புத் தான்.  நமது அக்கம்பக்கத்தில் சமுதாயத்திற்காக வாழ்பவர்கள், சமுதாயத்திற்காகத் தியாகம் புரிபவர்கள், ஏதோவொரு குறிக்கோளை முன்னிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் லட்சியவாதிகள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று பத்ம விருதுகள் வாயிலாக நான் நாட்டுமக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.  அவர்களை நாம் சிறப்பிக்க வேண்டும்.  அவர்கள் விருதுகள்-அங்கீகாரங்களுக்காக செயலாற்றுவதில்லை; ஆனால் அவர்களின் செயல்கள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன.  சில வேளைகளில் பள்ளிகளில், கல்லூரிகளில் கூட இப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களின் அனுபவங்களைப் பகிரச் செய்ய வேண்டும்.  விருதுகளையெல்லாம் தாண்டி, சமுதாயமும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று நாம் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கான தினத்தைக் கொண்டாடுகிறோம். இதே நாளன்று தான் அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். இந்த நாளன்று நாம் பாரதத்திலும், உலகெங்கிலும் இருக்கும் இந்தியர்களுக்கும் இடையே நிலவும், பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாம் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கென ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்; இதில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து உலகெங்கிலும் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.  இந்த நிகழ்ச்சியில் மலேஷியா, ந்யூசீலாந்து, ஸ்விட்ஸர்லாந்து, போர்ச்சுகல், மௌரீஷியஸ், ஃபிஜி, டான்ஸானியா, கென்யா, கனடா, ப்ரிட்டன், சூரினாம், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் எங்கெல்லாம் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மேயர்கள் இருக்கிறார்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் பங்கெடுத்தார்கள்.  அவர்கள் தங்கள் நாட்டுப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், கூடவே, பாரதத்துடனான தங்கள் தொடர்புகளை பலமாகவும் வைத்திருக்கிறார்கள்.  இந்த முறை ஐரோப்பிய கூட்டமைப்பு, எனக்கு ஒரு அட்டவணையை அனுப்பியிருக்கிறது; இதில் அவர்கள் ஐரோப்பாவில் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றியிருக்கும் பங்களிப்பு பற்றி மிகச் சிறப்பான வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர் இணையப்பாதுகாப்பு, ஆயுர்வேதம், இசை, கவிதைகள், பருவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி, இந்திய இலக்கியம் என, பல துறைகளிலும் அவர்கள் முத்திரை பதித்திருக்கிறார்கள், தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு சிலர் ட்ரக் ஓட்டினர்களாக இருந்து குருத்வாராக்களை நிர்மாணித்திருக்கிறார்கள், சிலர் மசூதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதாவது நம்மவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அந்த தேசங்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் சீர்மை சேர்த்திருக்கிறார்கள்.  அயல்நாடுவாழ் இந்தியர்களின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளித்தமைக்கும், உலகெங்கும் இருப்போருக்கு இந்தத் தகவல்கள் சென்று சேரும் வகையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியமைக்காகவும், நான் ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனவரி மாதம் 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள்; அவர் நம்மனைவருக்கும் புதிய பாதை ஒன்றைக் காட்டினார்.  அந்த நாளைத் தான் நாம் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கிறோம்.  தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகள் நினைவைப் போற்றும் வகையிலே நாம் காலை 11 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.  அமைதி மற்றும் அஹிம்ஸை காட்டும் வழி தான் அண்ணல் காட்டும் வழி.  அது பாரதமாகட்டும், உலகமாகட்டும், தனிப்பட்ட குடும்பமாகட்டும், சமுதாயமாகட்டும் – வணக்கத்திற்குரிய அண்ணல் எந்தக் கோட்பாடுகளுக்காக வாழ்ந்தாரோ, எவற்றை நமக்கு உபதேசமாக அளித்தாரோ, அவை இன்றும்கூட, மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.

அவர் வறட்டு சித்தாந்தங்களை நமக்களிக்கவில்லை.  இன்றைய காலகட்டத்திலும்கூட, அண்ணலின் போதனைகள் எத்தனை சத்தியமானவையாக இருக்கின்றன என்பதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  நம்மால் முடிந்த மட்டில், அண்ணலின் அடியொற்றி நாம் செல்லத் தீர்மானம் மேற்கொண்டால், இதைவிடப் பெரிய அஞ்சலி அவருக்கு நம்மால் வேறு என்ன செலுத்த முடியும்?

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உங்களனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மிக்க நன்றி. வணக்கம்.

குரல் மற்றும் தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன், அகில இந்திய வானொலி, சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe