மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் புதனின் பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. சிதம்பரத்திற்கு முற்பட்டதால் இந்த கோவிலில் ஆதிசிதம்பரம் எனவும் அழைக்கின்றனர். சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் இங்கு அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலின் இந்திரப் பெருவிழா கடந்த பிப் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வாக திங்கட்கிழமை காலை தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதனை ஒட்டி பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர் அதிகாலை தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார். எம்எல்ஏ நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

