தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் இன்று கைதுசெய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும், தகுதித் தேர்வுக்கு பிறகு வேலைவாய்ப்புக்காக மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் வளாகத்தில் கடந்த 28ம் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமான பட்டதாரிகள் இதில் பங்கேற்றனர். சிலர் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.
இன்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷாவுடன் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்வைத்த 2 கோரிக்கைகளையும் உடனடியாக ஏற்பதற்கு வாய்ப்பு இல்லை என முதன்மைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். எனவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனால் பட்டதாரிகள் மீண்டும் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போராட்டம் நடத்திய பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 9 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறினர்.
இந்த நிலையில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான போட்டி தேர்வு முறையை ரத்து செய்ய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்
2018-ம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். அப்போது சொன்னதை செய்து முடிக்க இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. சொன்னதை அவர் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.