சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து சிவ சிவ கோஷம் முழங்க, 4 மாட வீதிகளில் இழுத்துச் சென்றனர். தொடர்ந்து நாளை மற்றொரு முக்கிய நிகழ்வான அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடைபெறுகிறது. இதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. . இதையொட்டி கடந்த மார்ச் 8ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. 9ம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்றிரவு வெள்ளி ரிஷபவாகன பெருவிழாவும் நடந்தது. 10ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 11ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 12ம் தேதி தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 13ம் தேதி சவுடல் விமானத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. 14-ம் தேதி காலை பல்லக்கு விழா மற்றும் இரவு ஐந்திரு மேனிகள் யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.முக்கிய நிகழ்வாக இன்று திருதேரோட்டம் நடைபெற்றது.