மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு இடங்களில் காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டம் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக – கேரள எல்லை பகுதிகளில் இரு மாநில பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
தமிழக – கேரள எல்லையான வாளையார் களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரை, கோவை சேலம் விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பெருமளவில் பயணிகள் காத்து கிடக்கும் நிலை காணப்பட்டது.
சென்னையில் பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர
கோயம்பேடு பேருந்து நிலையம், பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.
பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் முன் வராததால், பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் குறைந்த அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
மதுரையில் தினமும் 900 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டத்தையொட்டி இன்று 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து சேவை பாதிப்பால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 1425 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று 95 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன.அதே சமயம் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆட்டோக்கள் 90 சதவீதம் ஓடவில்லை. பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டன.மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

