மத்திய அரசின் சில திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்ந்த நிலையில் சென்னை கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ்கள் 70சதத்திற்கும் மேல் இயங்கியது.
தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக சென்னையில் நேற்று பேருந்து சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் வழக்கம் போல் மாநகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.
சென்னையில் மட்டும் மாநகர போக்குவரத்துக் கழகத்தால் நாள் ஒன்றுக்கு 3,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் உரிய நேரத்தில் அனைத்து பேருந்துகளும் புறப்பட்டு விட்டதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஆட்டோ ஒட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஓடுகிறது. இதில் 70 சதவீத பஸ்கள் இன்று ஓடின. காலை 6 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்த ஊழியர்கள், அங்கிருந்து பஸ்களை வெளியே எடுத்து இயக்கத் தொடங்கினர்.
6 மணி முதலே காந்திபுரம் பஸ்நிலையம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களுக்கு பஸ்கள் வரத்தொடங்கின. இதனால் எந்தவித சிரமும் இன்றி பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
இதேபோல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் காலை முதலே அரசு பஸ்கள் ஓடின.
இன்று நீலகிரி மாவட்டத்திலும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடின. பஸ்கள் ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
மதுரை நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
இரண்டாவது நாள் பொது வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்றுள்ளனர். ஊழியர்கள் வராததால் பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது வழக்கம். கடந்த 26ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை வந்தது. நேற்றும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. பணம் இருந்த ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து சென்றனர். இன்று 2வது நாளாக வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால், இயங்கி வந்த ஒரு சில ஏடிஎம்களின் சேவையும் இன்று பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.