இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானகரம் சுங்கச் சாவடி உட்பட 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகன வகைகளை பொறுத்து ரூ.5 முதல் ரூ.80 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தியிருப்பது, வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.