திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் இன்று சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெலுங்கு வருடப்பிறப்புக்கு ஆஞ்சநேயர் கோயில் சென்ற 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைப்பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இன்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் நெல்லிவாசல் நாடு மலை கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்றில் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, மலைப்பாதையில் பாரம் தாங்காமல் பின்நோக்கிச் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பகுதி என்பதால் எளிதில் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
சுமார் அரைமணி நேரம் போராடிய பிறகு மலைப்பகுதியில் இருந்து சமநிலை பகுதிக்கு வந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய காவல்துறை தடை விதித்துள்ள போதிலும் ஆங்காங்கே கூலி வேலைக்கு செல்வோர், துக்க நிகழ்வுக்கு செல்வோர் சட்டவிரோதமாக சரக்கு வாகனங்களில் செல்வதும் அடிக்கடி விபத்து ஏற்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையை அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

