திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கள்ளகாதல் விவகாரத்தில் மனைவி ஆள்வைத்து கணவன் மாமியாரை கொலை செய்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( 42). இவரும் இவரது தாய் சவுந்தரம்மாள் (65) என்பவரும் தோட்டத்து வீட்டில் சனிக்கிழமை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஸ் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை நடந்த 10 மணிநேரத்திற்குள் 5 பேர்களை கைது செய்துள்ளனர். இதில் பள்ளி மாணவர்களும் 2 பேர் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், செல்வராஜ்-க்கு திருமணமாகி சுபாஹாசினி (35) என்ற மனைவியும், தன்வந்த் (4) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் தோட்டத்தில் ஆடு, மாடுகள் வைத்து வளர்த்து வந்தார். மேலும் தோட்டத்து வீட்டில் தங்கி அவரது தாய் சவுந்தரம்மாள் கவனித்து வந்துள்ளார்.
தான் பணம் கொடுத்தவர்களிடம் வசூல் செய்வதற்காக ஒத்தப்பட்டியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (29) என்பவரை வேலைக்கு சேர்த்திருந்தார்.
இதனால் கோபிகிருஷ்ணன் அடிக்கடி செல்வராஜ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் சுபாஹாசினிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அவரது மாமியாருக்கும் தெரியவரவே தனது மகன் செல்வராஜிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபிகிருஷ்ணனை கண்டித்ததுடன், இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என கூறியுள்ளார்.
ஏற்கனவே செல்வராஜிடம் பணம் வாங்கியிருந்த கோபிகிருஷ்ணன் அதனை கொடுக்கமுடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கும் வரக்கூடாது என தெரிவித்ததால் தனது கள்ளக்காதலியையும் பார்க்க முடியாதே என்று சோகத்தில் ஆழ்ந்தார்.
இதனால் செல்வராஜை கொலை செய்ய சுபாஹாசினியுடன் கோபிகிருஷ்ணன் திட்டம் தீட்டினார். செல்வராஜை கொலை செய்து விட்டால் அவரிடம் உள்ள பணம் முழுக்க தனக்கு வந்துவிடும். மேலும் எந்தவித தடங்கலும் இன்றி தனது கள்ளக்காதலியை சந்திக்கலாம் என கோபிகிருஷ்ணன் திட்டம் போட்டார்.
அதன் படி கணவன் மற்றும் மாமியார் தோட்டத்து வீட்டில் தங்கியிருப்பதை சுபாஹாசினி தனது காதலன் கோபிகிருஷ்ணனிடம் கூறினார். இதனையடுத்து தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கூட்டாளிகளுடன் காரில் சென்ற கோபிகிருஷ்ணன் தோட்டத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் அவரது தாயாரை வெட்டி கொன்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகிருஷ்ணன், சுபாஹாசினி, செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த்பாபு (22) மற்றும் 2 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.கொலை சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
