தீபா கணவர் மாதவனுக்கும் போலி ஐடி ஆபீசருக்கும் தொடர்பில்லை!

போலி அடையாள அட்டை, சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான்; ஜெ.தீபா கணவர் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியது பொய்: சென்னை போலீஸ் தகவல்.

சென்னை:

போலி அடையாள அட்டை, சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான்; ஜெ.தீபாவின் கணவர் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியதாகக் கூறியது பொய் என்று இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டிருக்கும் சென்னை போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த பிரபாகரனுக்கும், ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கும் எந்த வித தொடர்புமில்லை என்று கூறியுள்ள போலீஸார், போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தவர் பங்குச்சந்தையில் ரூ.20 லட்சம் முதலீட்டை இழந்ததால் மோசடி செய்து பணம் சேர்க்க திட்டம் இட்டதாகவும், அதனால் மாதவன் பெயரைப் பயன்படுத்தி பொய் சொன்னதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரி போன்ற போலி அடையாள அட்டை, சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான் என்று கூறிய போலீஸார், தங்களிடம் ஜெ.தீபா கணவர் மாதவன் தன்னிடம் போனில் பேசினார் என்று பிரபாகரன் கூறியதும் பொய்  என்று தகவல் தெரிவித்தனர்.

முன்னதாக, ஜெ.தீபாவின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து, சோதனையிட வந்தார் பிரபாகரன் என்ற இளைஞர். பின்னர் அவர் போலீஸில் சிக்காமல் தப்பித்தார். போலீஸார் தேடுவ்து குறித்து அறிந்து, மாதவன் தான் தன்னிடம் நடிக்கச் சொன்னார் என்று கூறி போலீஸாரிடம் சரண் அடைந்தார்.