தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை மே 10 ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுத இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்–பட்டுள்ளன. அரசு பொதுத்தேர்வில் எவ்வித குழப்பத்திற்கும் இடம் அளிக்காத வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.
