தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு இன்று இத்தாலியில்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.
இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெற்ற புனிதர் பட்டம் வழங்கிய இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் இத்தாலியில் நடந்த
இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கடந்த 18ம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு இத்தாலியிலுள்ள வாடிகனில், புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைப்படுத்திய சம்பவம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இருவேறு படங்களை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற சிற்றூரில் 1712 ம் ஆண்டு பிறந்தவர் நீலகண்டபிள்ளை. கிறித்துவ மதத்தை தழுவிய இவர் தனது பெயரை தேவசகாயம் என்று மாற்றி கொண்டார்.உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் அரசரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டார். அதன் மூலம் மறைசாட்சியானர். அவருடைய உடலை மூன்று நாட்களுக்குப் பின்னர் எடுத்து வந்து நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.அதன்படி இன்று, தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்கும் நிகழ்ச்சி, வாடிகன் நகரிலுள்ள ரோமில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ் கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குகினார். இது தொடர்பான இத்தாலி வாடிகனில் அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தமிழ்மொழி கௌரவிக்கப்பட்டது.


