சென்னை பல்கலைக்கழக 164வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். பின்னர் பேசிய அவர்,
இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.இந்த நாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும். பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். தமிழ் மொழியை நாடு முழுவதும் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ் இருக்கை அமைக்க அரசு முன்வர வேண்டும். தமிழ் இலக்கணமும், இலக்கியமும் பாரம்பரியமிக்கது, பழமைவாய்ந்தது. கல்வி, தொழில் மருத்துவ துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது. சென்னை உயர் நீதிமனறத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன். முதலமைச்சர் பேரவையில் அறிவித்தபடி தமிழர்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர்.
இந்தியா கலாச்சாரம், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தொழில்துறையிலும் பாரம்பரியம் கொண்டது. காலனி ஆதிக்கம் உருவான 1750களில் இந்தியா மற்றும் சீனாவின் தொழில் துறை உற்பத்தி உலகில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 73%ஆக இருந்தது. 1,800 களில் இரும்பு உற்பத்தியில் சென்னை மாகாணம் முக்கிய பங்காற்றியது எனவும் கூறினார்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் இளநிலை சமூகநீதி மற்றும் திருக்குறள் காட்டும் தொழில் நிலை பாடங்கள் விருப்பப் பாடங்களாக சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே. மாணவர்களின் திறமை, தகுதிக்கேற்ப எதிர்காலம் நிச்சயம் அமையும் என நம்பிக்கை உள்ளது.
காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்.எனது ஆட்சியில் உயர் கல்வியின் பொற்காலமாக ஆக வேண்டும் என திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். திருநங்களைகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் இலவசமாக கல்வி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்
நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த கவர்னருக்கு நன்றி. கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை கவர்னரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன் .
நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்கும். நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தேவை. கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதையே கவர்னரிடம் கோரிக்கையாக விடுக்கிறோம் என்றார் விழாவில் பேசிய உயர் கல்வி அமைச்சர் பொன்முடி.