தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள்,பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன்.பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடித்தது.
நூல்விலை உயர்வுக்கு எதிராக தமிழகத்தில் 2வது நாளாக பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் உற்பத்தி நிறுத்தத்தால் பல நூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னலாடை தொழிலின் முக்கிய மூலப்பொருளாக பருத்தி நூல் உள்ளது. பஞ்சின் விலை உயர்வால் நூல் விலை உயர்ந்தது. இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.30-ம், இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40-ம் என நூல் விலை உயர்ந்து விட்டது. அதாவது தற்போது நூல் விலை கிலோ ரூ.480 ஆக அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டை விட 2 மடங்கு நூல் விலை உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்கள் நூலை விலைக்கு வாங்கி ஆடை தயாரித்து விற்பனை செய்யும்போது உற்பத்தி செலவு அதிகரிப்பதால் தொடர்ந்து தொழிலை செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். பஞ்சு விலை 1 கேண்டி ரூ.1 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்தநிலையில் வேறுவழியின்றி திருப்பூர் கோவை கரூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் 2 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். பஞ்சு, நூல் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். யூகபேர வணிக பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.இன்று திருப்பூர் கோவை கரூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இரண்டுவது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
