
வாட்ஸ்அப் நிறுவனம் கூடிய விரைவில் அதன் பிளாட்ஃபார்மில் சாட் ஃபில்டர்ஸ் (Chat Filters) என்கிற அம்சத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த அம்சத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே, இது மற்ற பல யூசர்களிடமிருந்து வரும் மெசேஜ்களை தடையின்றிப் படிக்க, அவர்களின் சாட்களை பல வகைகளாக அல்லது விண்டோக்களாக பிரிக்க அனுமதிக்கும் ஒரு அம்சம் ஆகும்.
ஜிமெயில் போன்ற பல மின்னஞ்சல் சேவைகள் ஏற்கனவே தத்தம் இயங்குதளத்தை ஒழுங்குப்படுத்த இந்த அம்சத்தை கொண்டிருப்பதால் இந்த அம்சத்திற்கு பெரிய அளவிலான அறிமுகமோ, வியப்போ தேவைப்படாது.
இருப்பினும், வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த அம்சம் பல யூசர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில், தகவல்தொடர்புக்கான முதன்மையான மற்றும் பரவலான ஒரு தளமாக வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சாட் ஃபில்டர்ஸ் அம்சத்தின் வளர்ச்சியை பற்றிய தகவல், வழக்கம் போல வாட்ஸ்அப் டிராக்கர் வெப்சைட் ஆன வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாகவே நமக்கு கிடைத்துள்ளது.
மேலும் இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் பிஸ்னஸ் கிளையண்ட்டில் உள்ளதாகவும் வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான ஒரு ஸ்க்ரீன்ஷாட் ஆனது, வாட்ஸ்அப் பீட்டா டெஸ்ட்டர்கள் சர்ச் பார்-க்கு அடுத்ததாக ஃபில்டர்ஸ் விருப்பத்தைப் பார்ப்பார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த பிரிவின் கீழ் நீங்கள் நான்கு விருப்பங்களைக் காண்பீர்கள் – அன்ரீட் சாட்ஸ், காண்டாக்ட்ஸ், நான்-காண்டாக்ட்ஸ் மற்றும் க்ரூப்ஸ் (Unread chats, Contacts, Non-contacts, and Groups). இதன் கீழ் யூசர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப தங்களது வாட்ஸ்அப் சாட்களை ஒழுங்குப்படுத்தி கொள்ளலாம்.
மேற்கண்ட நான்கு விருப்பத்தோடு, யூசர்கள் தத்தம் நெருங்கிய நண்பர்களுக்கான ஒரு க்ரூப்பை உருவாக்கி, அவர்களின் மெசேஜ்களை பிரத்யேகமான ஒரு விண்டோவில் பார்க்க வழிவகை செய்யும் வண்ணம், ஃபில்டர்களில் ‘க்ளோஸ்டு ஃபிரெண்ட்ஸ்’ என்கிற விருப்பத்தை சேர்த்து இருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஏனெனில் இன்ஸ்டாகிராமில் க்ளோஸ்டு ஃபிரெண்ட்ஸ் என்கிற ஒரு அம்சம் அணுக கிடைக்கிறது. ஆனால் இது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களை பகிர மட்டுமே அனுமதிக்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் இந்த வார தொடக்கத்தில் அனைத்து யூசர்களுக்கும் – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட – மெசேஜ் ரியாக்ஷன் அம்சத்தை வெளியிடத் தொடங்கியது.
இது இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் மற்றும் டெஸ்க்டாப் யூசர்கள் என அனைவருக்குமே அணுக கிடைக்கிறது.
இது தவிர, மேலதிக ஃபைல் ஷேரிங் சைஸ் மற்றும் வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிக மெம்பர்களைச் சேர்க்கும் திறன் போன்ற அம்சங்களையும் வாட்ஸ்அப் பெறுகிறது.
அதாவது வாட்ஸ்அப் வழியாக யூசர்கள் இப்போது 2ஜிபி வரையிலான ஃபைல்களை ஷேர் செய்யலாம். தற்போது அணுக கிடைக்கும் 100எம்பி என்கிற அதிகபட்ச ஃபைல் சைஸ் உடன் ஒப்பிடும் போது இது ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும்.