மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் பக்தி பரவசத்துடன் பழமையான பாரம்பரிய முறைப்படி ஞாயிறு இரவு துவங்கி இன்று அதிகாலை வரை நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து குரு அருளைப் பெற்றனர்.
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் சைவ ஆதின திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா சிவநெறி தெய்வத் தமிழ் மாநாடு ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படும்.
பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் பட்டணபிரவேச நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. தருமபுரம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தால் பட்டண பிரவேச நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.வைகாசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான 18ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 20ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
இதில் 11ம் நாள் குருபூஜை விழாவில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் துாக்கிச் சென்று ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் வலம் வருவர்.
நேற்று காலை குருஞானசம்பந்தர் குருபூஜை திருநாளையொட்டி தருமபுரம் ஆதின திருமடத்தில் தருமை ஆதினம் சிவபூஜை சொக்கநாதர் பூஜை குருஞானசம்பந்தர் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் தர்மபுரீஸ்வரர் துர்க்கை அம்மன் கோவில்களில் வழிபாடு நடத்தினார். மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலை மேல குருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரவு தருமை ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு ஆபரணங்கள் அணிந்து திருக்கூட்ட அடியார்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.
பல்லக்கு ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளிலும் வலம் வந்தபோது பக்தர்கள் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.ஆதின திருமடத்தில் உள்ள குருபூஜை மடத்தில் வழிபாடு செய்து ஞானக்கொலு காட்சியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம், சூரியனார் கோவில் ஆதினம், துலாவூர் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம், தருமபுரம் ஆதினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை எச்.ராஜா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை கண்டு தரிசித்து குரு அருளைப் பெற்றனர்.
பட்டினப்பிரவேசம் விழாவையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியையும் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தலா ஒரு தேக்கு செம்மர கன்றுகளை வழங்கும் திட்டத்தை தருமை ஆதீன குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார். தருமபுரம் ஆதின திருமடத்தின் நந்தவனத்தில் மரக்கன்றை நட்டார்.தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கி தொடர்ந்து, இன்று காலை 4 மணி வரை நடந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை சுமார் 70 பேர் சிவிகை பல்லக்கில் தூக்கிச் சென்றனர்.அப்போது ஆதீனத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு ஆதீனகர்த்தருக்கு பூரண கும்ப மரியாதைடன் தீபாராதனை காட்டி வழிபட்டதும் ஆதீனகர்த்தர் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதும் பழமையான பாரம்பரிய சம்பிரதாயத்துடன் பக்தி பூர்வவிழாவாக அமைந்தது.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகைதந்தனர்.அதன்பின், ஆதீன மடத்திற்கு சென்றபிறகு சிறப்பு அலங்காரத்தில் குருமகா சன்னிதானம் கொலுக்காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்கும் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.





