தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்பட்டு
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சிலையைத் திறந்து வைத்தார்.
கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து திரை உலகினர் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முதலமைச்சராக 5 முறை பணியாற்றியவர் கலைஞர். அனல் பறக்கும் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர். இந்திய திருநாட்டிற்கே பல முன்னோடி திட்டங்களை தந்திட்டவர். “உடன்பிறப்பே” எனும் தன் காந்தக் குரலால், திமுகவினரை கட்டிப்போட்டவர். நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தம தலைவர்களை போற்றி திருவுருவ சிலைகளும், அழகிய மணிமண்டபங்களும் அமைத்திட்டவர், ஏழை எளியோர் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற திட்டங்களை தந்தவர்.
கதை, கவிதை, நாடகம் என தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனி பெருந்தலைவராக வலம் வந்தவர் கலைஞர். இளம் வயது தொடங்கி, இறப்பிலும் போராடி வெற்றி கண்டவர். பகுத்தறிவு பகலவன் குருகுலத்தில் பயின்றவர். அண்ணாவால், “என்தம்பி” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டவர். பேராசிரியர் அன்பழகனால், பன்முகத்தன்மை கொண்ட தலைவர் என்றும் பாராட்டப்பட்டவர். உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர். கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞருக்கு முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீர கலைஞரின் கலைமிகு சிலை நிறுவும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞர் சிலை 14 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு, 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. வெண்கலத்தில் ஆன கலைஞர் சிலை 2 டன் எடை கொண்டது. சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,300 சதுர அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதுடன், அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் உள்ளிட்ட அழகிய வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது.இச் சிலையை திறந்து வைத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .