கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 1000த்தை தாண்டியது. அங்கு நேற்று புதிதாக ௧,197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 7.07 சதவீதமாக உள்ளது. இப்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்தது. மேலும், கடந்த ஒரே வாரத்தில், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த வாரம் முதல், கோடை விடுமுறைக்கு பின் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இன்னும் தொற்றின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
