உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டநிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் அவரை கைதுசெய்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.
கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில், தனியார் பள்ளி வாகனம் ஒன்று, சாலையில் சென்ற பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அதனை தட்டிக்கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் இதற்கு ஒரு நீதி வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர் புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் போக்குவரத்து காவலர் ஒருவர், சாலையில் பலர் முன்னிலையில் தனியார் நிறுவன ஊழியரை அடிக்கும் காட்சி வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து முதல்நிலைக் காவலர் சதீசை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்து முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடந்த தவறை தட்டிக் கேட்ட இளைஞரை பொது இடத்தில் வைத்து தாக்குவதற்கு காவலருக்கு உரிமையை யார் கொடுத்தது எனவும், காவல் துறையில் பணியாற்றினால் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாமா? என சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதம் கிளம்பியது.
தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தாக்குதல் நடத்திய காவலரை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்வது தான் உச்சபட்ச தண்டனையா என கேள்வி எழுப்பியுள்ள சமூக வலைதளவாசிகள், மோகனசுந்தரத்தை தாக்கிய சதீஷை பணியிடை நீக்கம் செய்வதோடு, கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக கோவை போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’போக்குவரத்து காவலர் 2846 சதீஸ் மோகனசுந்தரத்திடம் சென்று இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார் என்று கேட்டு அவரை கைகளால் தாக்கியதாக வாட்ஸ்அப் குழுவில் வீடியோ வந்துள்ளது. இதுதொடர்பாக மோகனசுந்தரம் இன்று கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேற்படி போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.’ என கூறப்பட்டுள்ளது.சமூக வலைத்தளம் மக்களுக்கு சில நேரங்களில் ஒரு பாதுகாப்பு அரணாக உள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

